என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குற்றவாளிகளை கைது செய்வதற்கு முன்னதாக, மருத்துவ பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என உறுதியான பின்பே கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    புதுச்சேரி:

    திருநள்ளாறு போலீசார் ஒர்க் ஷாப் தீ வைத்து எரித்த வழக்கில் கைது செய்த வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

    இந்நிலையில் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா போலீசாருக்கு அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    அதில் குற்றவழக்கில் கைது செய்ய முற்படும்போது, போலீசார் கையுறை, முகக்கவசம் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், எக்காரணம் கொண்டும் குற்றம் சாற்றப்பட்டவரை தொடக்கூடாது.

    கைது செய்வதற்கு முன்னதாக, மருத்துவ பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என உறுதியான பின்பே கைது செய்ய வேண்டும். குற்றத்தின் அடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே கைது செய்ய வேண்டும். அதுவரை குற்றவழக்கில் உள்ளவரை தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க கோரி மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    சிகப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ வீதம் 3 மாதங்களுக்கு 15 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களிடம் இலவச அரிசி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி கேட்டு இன்று பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு தனிநபர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதன்படி லாஸ்பேட்டையில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிர்வாகிகள் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.கவின் போராட்டத்திற்கு ஆதரவாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்களும் பங்கேற்றனர்.

    முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜனதா நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு தனது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்த்தில்  தொகுதி தலைவர் பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் விஜயரங்கம், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பழனிவேல், பச்சையப்பன், சங்கர், ராஜீ, வினோத், நந்தா உள்பட பலர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.  

    இதேபோல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் தங்கள் வீடுகள் முன்பு  பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பிரதமர் ஊடரங்கை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறி இருப்பதால் புதுவையிலும் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு திரும்புபவர்களுக்கு 2 முறை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். பிரதமர் மோடி நேற்றைய தினம் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடனும் பேசினார்.

    சுமார் 5½ மணி நேரம் நடந்த இந்த பேச்சின்போது புதுவை முதல்-அமைச்சர் தினமும் புதுவை மாநிலத்திற்கு தேவையான அனைத்து வி‌ஷயங்களையும் எடுத்துக் கூறினார்.

    பிரதமரின் பேச்சை பார்க்கும்போது, மே 17-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு இன்னும் சில தளர்வுகளுடன் தொடரும் என்றே தெரிகிறது

    3-வது கட்ட ஊரடங்கில் இதுவரை 12 நாட்கள் முடிந்துவிட்டது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது பொதுமக்கள் தொடர்ந்து ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    அண்டை மாநிலமான தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்டை மாவட்டங்களான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் புதுவை மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    அரசு ஆஸ்பத்திரி மற்றும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் பணியாற்ற கூடிய நர்சுகளுக்கு என்னுடைய செவிலியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

    பிரதமர் ஊடரங்கை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கூறி இருப்பதால் புதுவையிலும் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், அரிசி கடைகள் இன்று காலை திறக்கப்பட்டாலும் ஒருசிலர் மட்டுமே காய்கறி மற்றும் பொருட்களை வாங்க வந்தனர். இதனால் அப்பகுதி வெறிச்சோடியே காணப்பட்டது.

    பாகூர்:

    அரியாங்குப்பம் சொர்ணாநகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட நகர்கள் மற்றும் அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

    தற்போது 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளை திறந்து விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி சீல் வைக்கப்பட்ட பகுதிகளை திறக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்பேரில் நேற்று மதியம் சொர்ணாநகரில் ஒருசில தெருக்கள் தவிர மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    இந்த நிலையில் தடுப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டது. தற்போது அரியாங்குப்பம் புதிய பாலம் வழியே போக்கு வரத்து தொடங்கப்பட்டதால் முன்புபோல் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வழக்கம்போல் சென்று வருகிறார்கள்.

    அதே வேளையில் அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், அரிசி கடைகள் இன்று காலை திறக்கப்பட்டாலும் ஒருசிலர் மட்டுமே காய்கறி மற்றும் பொருட்களை வாங்க வந்தனர். இதனால் அப்பகுதி வெறிச்சோடியே காணப்பட்டது. கொரோனா பீதி காரணமாகவே யாரும் அங்கு பொருட்கள் வாங்கவரவில்லை என்று கூறப்படுகிறது. பழைய பூரணாங்குப்பம் சாலையில் திறந்து இருந்த காய்கறி கடைகளில் கூட்டம் காணப்பட்டது.

    உழவர் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் பழ விற்பனை செய்ய கடந்த 2 நாட்களில் 3 ஆயிரத்து 920 விவசாயிகளுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் 13 பேர் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். 18 பேர் தனித்திருப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 ஆயிரத்து 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேவையின்றி சாலையில் சுற்றியதாக ஆயிரத்து 356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    உழவர் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் பழ விற்பனை செய்ய கடந்த 2 நாட்களில் 3 ஆயிரத்து 920 விவசாயிகளுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. இதன் மூலம் 819 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவையில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயில் காலம் தொடங்கிவிட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும் வெப்பத்தால் வீட்டிற்குள்ளே இருக்க முடியாத சூழ்நிலை உள்ளது. வீட்டிற்கு வெளியே வந்தாலும் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 4-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி கத்திரி வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. அதிகாலை 7 மணிக்கே அனலை கக்கும் வெயில் அடித்து வருகிறது.

    பகல் 12 மணியளவில் சுட்டெரிக்கும் வெயிலினால் சாலைகள் கானல்நீராக காட்சியளிக்கிறது. வீடுகளில் பேன், ஏ.சி. போன்ற மின்சாதன பொருட்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் பல வீடுகளில் பழுதாகியும் உள்ளது. இவற்றை சீர்செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை 6 மணி வரை கோடை வெயிலின் தாக்கம் நீடிக்கிறது. 6 மணிக்கு மேலும் காற்று வீசுவதில்லை.

    இதனால் இரவு குளிர்சாதன வசதி இல்லாத வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி புழுக்கத்தினால் புலம்பி வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எலுமிச்சை, தர்பூசணி, கிர்ணி, வெள்ளரி ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் சென்னை வானிலை மையம் 4 நாட்கள் மழை பெய்யும் என அறிவித்திருந்தது. ஆனால் ஒரே ஒரு நாள் லேசாக மழை தலைகாட்டிவிட்டு சென்றுவிட்டது.

    இதனால் தற்போதைய சூழலில் மனதையும், உடலையும் குளிர்விக்க மழை பெய்யாதா? என்று புதுவை மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

    ஆரோவில் அருகே அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி விமர்சித்த அ.ம.மு.க. மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் அருகே இடையஞ்சாவடியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது40). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில தகவல் பிரிவு தொடர்பு செயலாளராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் புதுக்கோட்டை போலீசார் இன்று காலை இடையஞ்சாவடிக்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த முத்துகுமாரை திடீரென கைது செய்து அழைத்து சென்றனர்.

    இது குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை முத்துகுமார் வருங்கால முதல்-அமைச்சர் விஜயபாஸ்கர் என சித்தரித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பரப்பியதால் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    அ.ம.மு.க. பிரமுகர் திடீரென கைது செய்யப்பட்டதால் ஆரோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    காரைக்காலில் கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திருநள்ளாறு போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு சுரக்குடியைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

    புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை புதுச்சேரியில் உள்ள சிறையில் அடைப்பதற்கு முன்னர் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதிப்பதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டது.

    பின்னர் ரத்த மாதிரி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறையினர் போலீசார் உதவியோடு சுரக்குடி பகுதிக்கு சென்று அவருடன் தொடர்புடைய சுமார் 8 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திருநள்ளாறு போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அந்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
    வைத்திகுப்பத்தில் மது கிடைக்காத விரக்தியில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வைத்திகுப்பம் பச்சைவாழியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மலையாளத்தான் (வயது65). மீனவர். இவருக்கு தையல் நாயகி என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.

    மலையாளத்தானுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மலையாளத்தான் மது குடிக்க முடியாமல் திண்டாடி வந்தார்.

    இதனால் மனமுடைந்த மலையாளத்தான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டின் குளியல் அறையில் அவர் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். உடனடியாக மலையாளத்தானை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மலையாளத்தான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை மரப்பாலம் மற்றும் வெங்கட்டாநகர் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மரப்பாலம் மற்றும் வெங்கட்டாநகர் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே புதுவை நகர பகுதி முழுவதும் (கடற்கரை சாலை முதல் எல்லைப் பிள்ளைச்சாவடி மற்றும் அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரையுள்ள பகுதிகள்) காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் நேத்தாநகர், எம்.ஜி.ஆர்.நகர், ரமணர்நகர், சிவா விஷ்ணு நகர், அன்சாரி துரைசாமி நகர், ஜெயம்நகர், பி.எஸ்.சி. பேங்க் காலனி, ஜோதி நகர், வாரியார் நகர், காயத்திரி நகர், ஜான்பால் நகர் ஆகிய பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், அக்காசாமி வீதிக்கும் குபேர் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி, சின்னையாபுரம் சாலை, குபேர் பாடசாலை பகுதி, அப்பாவுநகர் பகுதி களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    புதுவை அருகே பண்ணை வீட்டில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த சின்னகோட்டக்குப் பத்தில் தென்னந்தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீடு சென்னையை சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமானது. இந்த பண்ணை வீட்டில் புதுவை சண்முகாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது61) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பண்ணை வீட்டிற்கு வேலைக்கு வந்த சாமிநாதன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் சத்யநாதன் நேற்று பண்ணை வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு அவரது தந்தை சாமிநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து வி‌ஷபூச்சி கடித்ததால் சாமிநாதன் இறந்தாரா? அல்லது திடீர் மாரடைப்பால் இறந்து போனாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து திருநள்ளாறு காவல் நிலையம் மூடப்பட்டது.
    புதுச்சேரி:

    திருநள்ளாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரக்குடியே சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர், தகராறு வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை சிறைக்கு கொண்டு செல்லும் முன் கைதிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் வசித்த சுரக்குடி கிராமம் முழுவதும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த நபர் விசாரணைக்காக திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததால் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனால் காவல் நிலையம் திருநள்ளாறு கோயில் அருகில் உள்ள புறகாவல் நிலையத்தில் இயங்குகிறது.

    காவல்நிலையத்தை சேர்ந்த போலீசார் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 
    ×