என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதனால் வங்கி சேவையை பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து, புதுவை பாரதியார் கிராம வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை ஏம்பலம் தொகுதி மக்கள் பெரும் வகையில் பனித்திட்டு கிராமத்திற்கு நடமாடும் ஏ.டி.எம். சேவை அளிக்கும் வேன் கொண்டு வரப்பட்டது. இதில் பண பரிவர்த்தனையை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். பாரதியார் கிராம வங்கி தலைவர் மார்க்கரேட் லெடிஷியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வம்பாபேட்டில் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்கள், பனித்திட்டு கிராம மீனவர்கள் நீண்ட தூரம் சென்று வங்கியில் பணம் எடுப்பதற்கு பதிலாக, நடமாடும் ஏ.டி.எம். வாகனத்தின் மூலமாக தங்களது வங்கி கணக்கில் இருந்து தேவையான பணத்தை எடுத்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, பனித்திட்டு, நரம்பை மீனவ கிராமங்களில் மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், மீன் வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, உதவி இயக்குனர் தனசேகர், பாரதியார் கிராம வங்கி சேர்மன் மார்க்கரேட் லெடிஷியா, நடமாடும் ஏ.டி.எம். பிரிவு பொறுப்பாளர் கிருத்திகா, தொழில் நுட்பபிரிவு மேலாளர் பிரபு, மாவட்ட தொழில் பயிற்சி மைய இயக்க மேலாளர் குமார், கதர் கிராம வாரிய துணை செயல் அதிகாரி கணேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், வட்டார வளர்ச்சி அதிகாரி மலர், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல், மற்றும் மீனவ கிராம முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 110 மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இந்தியாவில் கடந்த காலத்தை ஒப்பிடும் போது கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மக்கள் ஒத்துழைப்பின்றி அரசால் எதுவும் செய்ய முடியாது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியவரின் வீடு இருக்கும் இடத்தை தவிர மற்ற இடங்கள் தனிமைப்படுத்தும் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி யாருக்கும் தெரிவதில்லை, எப்படி வருகிறது, போகிறது என தெரியாது. கொரோனா பரவலில் நாம் 2-ம் கட்டத்தில் உள்ளோம். 3-ம் நிலைக்கு சென்றால் சமூக பரவலாக மாறிவிடும். அப்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மக்கள் ஓரளவு சமூக இடைவெளி கடைபிடித்தாலும், மாலை நேரத்தில் சிலர் தேவையின்றி வெளியே சுற்றுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஜூன், ஜூலை மாதத்தில் தாக்கம் அதிகமாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இங்குள்ள வெளிமாநிலத்தினரை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ரெயில் விட மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கைகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். டாக்டர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை எம்.பி. வைத்திலிங்கம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 2 மாதத்திற்கு மேலாக நடைமுறையில் உள்ளது.
இதனால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் முடங்கியுள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பளமின்றி உள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் இ.பி.எப். செலுத்தி வந்துள்ளனர். அந்த நிதியிலிருந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லை அடுத்த இடையஞ்சாவடி கிராமம் உள்ளது. இங்குள்ள சர்வதேச குதிரை பண்ணை சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது போலீசார் வருவதையறிந்த அந்த கும்பல் தப்பியோட முயற்சித்தது. உஷாரான போலீசார் அந்த கும்பலை நாலாபுறமும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தது. அப்போது அவர்களிடம் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தியதில் இடையஞ்சாவடியை சேர்ந்த மணிகண்டன் (வயது24), புதுவை பகுதி ஆலங்குப்பத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(22), ராயப்பேட்டையை சேர்ந்த முருகன் (20), கோட்டகரையை சேர்ந்த வேல்முருகன் (23), நாராயணமூர்த்தி (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பின்னர் 5 பேர் கொண்ட அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதில் மணிகண்டன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகூர்:
உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் புதுவை மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறபித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
ஏழை மக்களுக்கு அரசு மற்றும் அரசியல் பிரமுகர்கள், பல்வேறு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் புதுவையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி பின்பு அருணாச்சல பிரதேசத்தில் அதே பதவியில் பணிபுரியும் சந்திரன் புதுவையில் உள்ள ஏழை மக்களுக்கு நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்தார்.
அந்த வகையில் பெருமாள் தலைமையில் விஷ்ணுவரதன் மற்றும் அபிஷேகப்பாக்கம் இளைஞர் அமைப்பு மூலம் 5 கிலோ அரிசி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள 500 ஏழை குடும் பங்களுக்கு வீடு, வீடாக சென்று வழங்கினர்.
சேதராப்பட்டு:
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் என 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுவை அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரை சேர்ந்த 36 வயதுடைய தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நபர் நெட்டப்பாக்கம் அருகே உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு நோய் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. கடந்த 7-ந் தேதி முதல் அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.
வீட்டு அருகே உள்ள பாண்லே பூத், அரும் பார்த்த புரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றுக்கும் சென்றுள்ளார். பின்னர் ரெட்டியார் பாளையத்தில் உள்ள டி.வி. கடைக்கு சென்று டி.வி. ஒன்று வாங்கி உள்ளார். அதை காரில் ஏற்றி வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அவருடன் நண்பர் ஒருவரும். டி.வி. நிறுவன ஊழியர் ஒருவரும் வந்து இருக்கிறார்கள். 10-ந்தேதி கதிர்காமம் கனகன் ஏரி அருகில் உள்ள கோழிக்கடைக்கு சென்று கறி வாங்கி உள்ளார். 10-ந் தேதி தனது நிறுவன பஸ் மூலம் சென்று அங்கு வேலை பார்த்துள்ளார். அவருடன் 15 பேர் பணியாற்றி இருக்கிறார்கள்.
பின்னர் அவர் அதே பஸ்சில் மாலை வீடு திரும்பினார். 11-ந் தேதி மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே, அரும்பார்த்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஒரு டாக்டரும், 3 நர்சுகளும் சிகிச்சை அளித்துள்ளனர். அவரை இந்திரா காந்தி மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.
பின்னர் வீட்டில் தனிமையில் இருக்கும்படி ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத அவர் நேற்று மீண்டும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் 6 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். பின்னர் 15 ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளார். திரும்பி வரும் போது 6 பேர் பஸ்சில் வந்துள்ளனர்.
இதனால் இந்த வகையில் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அவரது மனைவி, மகன், மகள், பக்கத்து வீட்டுக்காரர்கள், நெருங்கி பழகியவர்கள், அவர் சென்ற இடங்களில் எல்லாம் இருந்தவர்கள், தொழிற்சாலையில் அவருடன் பணியாற்றிய வர்கள், பஸ்சில் அவருடன் பயணம் செய்தவர்கள் என சுமார் 300 பேரை தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அவர் வசித்த பகுதிக்கு வெளியில் இருந்து ஆட்கள் வராமல் தடுக்கும் வகையிலும், உள்ளே இருந்து மக்கள் வெளியே செல்லாமல் தடுக்கும் வகையிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அந்த தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ்களை கல் மண்டபம் மக்கள் தங்கள் ஊர் வழியாக செல்லக்கூடாது என கருதி மறியல் செய்தனர்.
அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் தமிழக பகுதியை சேர்ந்த பலரும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் மூலம் நோய் தொற்று பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறியதாவது:-
அருமார்த்தபுரம் தொழிலாளிக்கு நோய் தொற்று எப்படி ஏற்ட்டுள்ளது?என ஆய்வு செய்து வருகிறோம்.தற்போது கொரோனா மருத்துமனையில் சிகிச்சை பெறுவோருக்கு நோப் அறிகுறி இல்லை.
இதனால், புதுவை மக்ககள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மூககவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி முலம் கைகழுவ வேண்டும். சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இதற்காகவே சுகாதாரத்துறை ஆரோக்கிய செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் பாதிக்கப்பட்ட நபர் கடைசியாக எங்கு சென்று வந்தார்? என்ற விவரம் தெரியும்.
இதன்மூலம் எங்கிருந்து தொற்று பரவியிருக்கும்? என கண்டறியலாம். எனவே இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மோகன்குமார் கூறினார்.
புதுவை அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ. கீதாஆனந்தன், தலைமை செயலர் அஸ்வினி குமார், கலெக்டர் அருண், டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, அரசு செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கொரோனா தொடர்பான புதுவை யூனியன் பிரதேச கட்டுப்பாட்டு திட்ட கையேட்டை வெளியிட்டார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று 12 பேருக்கு உறுதியான நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த 37 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது. இதையடுத்து அந்த நபர், புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ள நிலையில் 9 பேர் குணமடைந்துள்ளனர்.
சிகப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ வீதம் 3 மாதங்களுக்கு 15 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது.
இதே போல் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களிடம் இலவச அரிசி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி கேட்டு இன்று பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு தனிநபர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது
இதன்படி லாஸ்பேட்டையில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிர்வாகிகள் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜ.கவின் போராட்டத்திற்கு ஆதரவாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்களும் பங்கேற்றனர்.
முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜனதா நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு தனது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பா ட்த்தில் தொகுதி தலைவர் பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் விஜயரங்கம், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பழனிவேல், பச்சையப்பன், சங்கர், ராஜீ, வினோத், நந்தா உள்பட பலர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
இதேபோல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் தங்கள் வீடுகள் முன்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்க தலைவர் புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் விபத்து மற்றும் பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படுவோரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் 8 இயக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. பல ஆம்புலன்ஸ்களில் டெக்னீஷியன்கள் இல்லை.
மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை குறைவான சம்பளம் பெறும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஏப்ரல் சம்பளம் வழங்காதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்று உள்ள இச்சமயத்தில் ஆம்புலன்ஸ் பணி முக்கியமானதாக உள்ளது. கொரோனா நோய் தொற்றுள்ளவர்களை ஏற்றி செல்லும் ஆம்புலன்சில் பேறு கால சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்களை ஏற்றி சென்றால் அவர்கள் பாதிப்பதோடு பிறக்கும் குழந்தைக்கும் தொற்று ஏற்படும் நிலை உண்டாகும். அதுபோல் பிற நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே ஏப்ரல் மாதத்துக்கான சம்பளத்தை உடனடியாக வழங்குவதுடன், கொரோனா அறிகுறி உள்ளவர்களை அழைத்து செல்ல தனி 108 ஆம்புலன்சை ஒதுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
புதுவை மாநிலத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.
கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தொழிற்சாலைகள் தவிர்த்து மற்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் பழைய படி உற்பத்தி இல்லை. மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்சாலைகள் பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மாநிலத்தில் தொழிற்சாலைகள் உற்பத்தியை பெருக்க 3 மாதத்திற்கு மட்டும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி தொழிலாளர் துறை உத்தரவிட்டது. இருப்பினும் சில நிபந்தனைகளை தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் துறை விதித்துள்ளது.
இதன்படி ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளர் 12 மணி நேரத்திற்கு மேலாக பணி செய்ய தொழிற்சாலைகள் விடக்கூடாது. அத்துடன் அவர் வாரத்திற்கு 72 மணி நேரத்திற்கு மேல் பணி புரிய வைக்கக்கூடாது.
12 மணி நேர வேலையில் முதல் 6 மணி பிறகு குறைந்தபட்சம் தொழிலாளிக்கு அரைமணி நேரம் ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. ஓவர் டைமிங் வேலைக்காக பணியாளர்களின் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
இதற்கான உத்தரவை தொழிலாளர் துறை சிறப்பு செயலர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.
இதனை வரவேற்று இந்திய தொழில் கூட்டமைப்பு புதுவை தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், 3 மாதத்திற்கு தொழிலாளர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக அதிகரித்துள்ளதை வரவேற்கிறோம். இதன் மூலம் மாநிலத்தில் உற்பத்தி அதிகரிக்கும். குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தி பாதைக்கும் திரும்ப வழிவகுக்கும் என்றார்.






