search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் நாராயணசாமி
    X
    முதல்வர் நாராயணசாமி

    நிதி வழங்குவது தொடர்பாக பிரதமர் எந்த பதிலும் அளிக்கவில்லை- நாராயணசாமி பேட்டி

    புதுவைக்கு நிதி வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எந்த பதிலும் அளிக்கவில்லை என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், புதுவையில் விழிப்போடு இருந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம். மாநிலத்தில், மதுக்கடை, தொழிற்சாலைகள் மூடியதால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாநில வருவாய் பெரிதும் பாதித்துள்ளது. 12 சதவீத வருமானம் தான் கிடைத்துள்ளது. இருப்பினும், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், கட்டட தொழிலாளர்களுக்கு உதவி செய்துள்ளோம். மே மாதத்தில் புதுவையில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நீடித்தால் மாநில பொருளாதாரம் பாதிக்கப்படும். வருவாய் இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தேன். 

    மாநிலத்தின் கடன் வாங்கும் சதவீதத்தை ரிசர்வ் வங்கியில் 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். 15-வது நிதி கமிஷனில் புதுவையை சேர்க்க வேண்டும். சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும். பெரிய தொழிற்சாலைகளுக்கு கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் தர வேண்டும். மாநில அரசு வாங்கிய கடனை திரும்ப கட்ட காலக்கெடு வழங்க வேண்டும் என்றேன். 

    இதற்கு பிரதமர் எந்த பதிலும் அளிக்கவில்லை. கொரோனா பாதித்த மண்டலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் கொடுக்க வேண்டும் என நான் உள்பட அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் வலியுறுத்தினோம். மாநில அரசுகள் வரும் 15-ந்தேதிக்குள் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து எழுத்து பூர்வமாக அளிக்கும்படி பிரதமர் கூறினார். 

    கல்வி நிறுவனங்களை தற்போது திறக்க முடியாது. அதனால் ஆன் லைன் வழியாக எப்படி பாடங்களை நடத்தலாம் என கருத்துகளை கேட்டறிந்தார். ஒரு சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு தொடரும் என்பது பிரதமர் பேச்சின் மூலம் தெரிகிறது. அது 17-ந் தேதி தான் தெரியும். மத்திய அரசு நிதி ஆதாரத்தை தராததால் நமக்கு ரிசர்வ் வங்கியில் கடன் வாங்குவதை தவிர வேறுவழியில்லை. 15-ந்தேதி முதல் பாதிக்கப்பட்ட தெருக்களை தவிர்த்து மற்ற இடங்களை பச்சை இடமாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×