என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள தொழிற்சாலைகளின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தியதை அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய தொழிலாளர் அமைச்சகம் மாநிலங்களுக்கு பணி நேரத்தை அதிகரிக்க நிர்பந்தித்து வருகிறது. மத்திய பா.ஜனதா அரசின் நிர்ப்பந்தத்தின் காரணமாக பணி நேர அதிகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம்.
தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும், பணி நேர அதிகரிப்புக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் 8 மணி நேர உரிமை பறிக்கப்படுகிறது.
கொரோனா பொது முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்களே. அவர்களுக்கு பொது முடக்க காலத்திற்கான ஊதியம், தடையற்ற வேலைவாய்ப்பு, தற்காலிக, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
பணி நேர அதிகரிப்பு பெருமளவில் ஆட் குறைப்புக்கு வழிவகுக்கும். புதுவையின் சமூக பொருளாதாரம் பாதிப்படையும். எனவே, முதலாளிகளுக்கு ஆதரவான பணி நேர அதிகரிப்பு ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை அப்துல்கலாம் நகர் அரசு குடியிருப்பை சேர்ந்தவர் சூசை ஜெயக்குமார். இவரது மகன் ஜான் பீட்டர் (வயது27). இவர் ஆரோவிலில் தனியாருக்கு சொந்தமான ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இவர் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது ரோந்து வந்த போலீசாரை பார்த்ததும் ஜான் பீட்டர் மற்றும் அவரது நண்பர்கள் பயந்து அங்கிருந்து ஓடினர். அந்த நேரத்தில் ஜான்பீட்டரின் செல்போன் தவறி விழுந்து விட்டது.
அந்த செல்போனை போலீசார் எடுத்து சென்று இருப்பார்கள் என்று ஜான் பீட்டர் எண்ணியிருந்தார். ஆனால் ஏற்கனவே பழைய வழக்கு சம்பந்தமாக விசாரிக்க 2 முறை ஜான் பீட்டரை தேடி அவரது வீட்டுக்கு முதலியார் பேட்டை குற்ற பிரிவு போலீசார் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசாரை மிரட்டுவதற்காக ஜான்பீட்டர் பினாயிலை குடித்து விட்டு தற்கொலை செய்ய போகிறேன் என்று போலீஸ் நிலையம் எதிரே அமர்ந்தார். பின்னர் பினாயிலை குடித்ததின் காரணமாக நெஞ்சு எரிச்சலாக இருந்ததால் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை தேங்காய்த்திட்டைச் சேர்ந்தவர் வெள்ளையன். தனியார் நிறுவன ஊழியர்.
இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு 9 வயதான தியா என்ற மகள் உள்ளார். தியா உப்பளம் இமாகுலேட் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகின்றார்.
படித்து பட்டம் பெற்று ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது தியாவின் விருப்பம். அதற்கு லேப்டாப் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர் கூறினர். இதனால் தியா பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் சிறு, சிறு தொகையை உண்டியலில் கடந்த 2 ஆண்டுகளாக சேமித்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியிருப்பதை செய்திகள் மூலம் தியா தெரிந்து கொண்டார். இதனையடுத்து அவர்களுக்கு உதவுவதற்கு தியா முன்வந்தார்.
இதுகுறித்து தந்தை வெள்ளையனிடம் தெரிவித்தார். அவரும் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்தார். அதில் ரூ 24 ஆயிரத்து 347 இருந்தது.
இதனை ஊரடங்கால் வேலையின்றி தவித்த கைத்தறி நெசவாளர்கள், நாதஸ்வர கலைஞர்கள், பிற மாநில தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்ட நலிவுற்ற குடும்பத்தினர் 57 பேரை தேர்வு செய்து அவர்களது குடும்பத்திற்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறிகள், பிஸ்கெட் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண் சிறுமி தியா மற்றும் அவரது பெற்றோரை அழைத்து பாராட்டினார். அப்போது லேப்டாப் வாங்குவதற்கான பணம் செலவாகிவிட்டதே.? என்ன செய்வாய்.? என்று கேட்டதற்கு மீண்டும் சேமிப்பேன், அப்போதும் யாரேனும் பாதிக்கப்பட்டு உதவி கேட்டால் அந்த பணத்தையும் அவர்களுக்கு வழங்கிவிடுவேன் என்றும் தெரிவித்தார்.
இந்த சிறுமியின் உதவும் மனபான்மையை அனைவரும் பாராட்டினர். மேலும், கலெக்டர் தனது இருக்கையில் தியாவை அமர வைத்து கவுரவபடுத்தினார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
ஊரடங்கு உத்தரவு காலத்தில் மளிகை, பால், காய்கறி, மருந்தகம் ஆகிய அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது. முதல் ஒரு வாரத்திற்கு மருந்தகம் தவிர அத்தியாவசிய கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
அதிகளவில் கூட்டம் கூடியதால் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகளை திறக்க வேண்டும் என்றும், பால் விற்பனை நிலையங்களை மாலை 6 மணியோடு மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் 3-ம் கட்ட ஊரடங்கு தொடங்கிய மே 4-ந் தேதி முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது, கள், சாராயம், மதுபான கடைகளை தவிர அனைத்து கடைகளையும் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 40 நாட்களுக்கு மேலாக கடைகள் மூடிக்கிடந்ததால் வியாபாரிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் பெரியளவில் வியாபாரம் இல்லை. கொரோனா அச்சம் ஒருபுறமிருந்தாலும் கடுமையான வெயில் மற்றொரு காரணமாக உள்ளது. இதனால் கடைகளை திறக்கும் நேரத்தை அதிகரித்து மாலையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் வெளியே வந்தால்தான் வியாபாரம் நடைபெறும் என புதுவை வியாபாரிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து வலியுறுத்தினர். இதனிடையே முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஊரடங்கை இனியும் நீடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே ஊரடங்கை தளர்த்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார்.
வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடை திறப்பு நேரத்தை நீட்டித்து முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் 1 மணி அல்லது 2 மணி நேரம் நீடிப்பு செய்யப்படலாம்.
4-வது கட்ட பொது முடக்கம் தொடர்பான அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டதற்கு பிறகு நாராயணசாமி மாநில நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து சில தளர்வுகளை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார். அப்போது கடை திறப்பு நேரத்தை நீடிப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, மகள், நண்பர் என மொத்தம் 3 பேருக்க கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
ஆரோவில் போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் வணிகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்திய நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக வானூர் பகுதியில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் வானூர் சுற்றுவட்டார பகுதிக்கு முக்கிய இடமாக உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள வணிகர்கள் வாடிக்கையாளர்கள் வரும்போது அவர்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். வணிகர்கள் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி வியாபாரம் செய்யக்கூடாது.
கடைகளில் கூடுதல் ஊழியர்களை வைத்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒவ்வொரு கடையின் வெளியில் கொரானா தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை வைத்திருக்க வேண்டும். வணிகர்கள் உரிய நெறிமுறைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.
இந்தக் கூட்டத்தில் 55 வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் ஆகியவை இயங்காமல் முடங்கியது. இதனால் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது.
புதுவை அரசு ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கால் அரசுக்கு வர வேண்டிய வருமானம் வரவில்லை.
புதுவை அரசை பொறுத்தவரை கலால்துறை, வணிக வரி, பத்திரப்பதிவு, போக்குவரத்து ஆகியவற்றின் மூலமாகத்தான் அதிகளவு வரி கிடைக்கும். ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி இத்துறைகளின் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
ஆனால் ஊரடங்கால் இவை அனைத்தும் முடங்கியதால் வருவாய் கிடைக்கவில்லை. இதோடு உள்ளாட்சி துறை மூலமாக வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவற்றையும் முழுமையாக வசூலிக்க முடியாத நிலை உள்ளது.
அதே நேரத்தில் வழக்கமாக மார்ச் மாதம் புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 30-ந்தேதி அரசின் 3 மாத செலவினங்களுக்காக ரூ.2 ஆயிரத்து 42 கோடி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசு 2020-21ம் ஆண்டிற்கு பட்ஜெட்டிற்கு ரூ.ஆயிரத்து 702 கோடி நிதியை வழங்குகிறது. இந்த நிதியும் 3 மாதத்திற்கு ஒரு முறையாக பிரித்து அளிக்கப்படும்.
இதில் முதல்கட்ட தவணை கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. 2-ம் கட்ட தவணை தொகை ஜூன் மாத இறுதியில்தான் வழங்கப்படும். முதல்கட்டமாக வழங்கிய நிதியில் புதுவை அரசு ஏப்ரல் மாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷன், கொரோனா தடுப்பு பணிகளுக்கு செலவிட்டுள்ளது.
மாதத்திற்கு அரசு ஊழியர்களுக்கு ரூ.160 கோடி சம்பளமும், ரூ.80 கோடி ஓய்வூதிய பென்ஷனும் என ரூ.240 கோடி அரசுக்கு தேவைப்படுகிறது. இதனால் அடுத்த மாதத்திற்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர நடைமுறையில் உள்ள அரசின் திட்டங்கள், அரசு செலவினத்திற்கும் நிதி தேவைப்படுகிறது. முழுமையான பட்ஜெட் போடப்பட்டால் நிதி கிடைக்க வழி ஏற்படும்.
ஆனால் இதுவரை மாநில திட்டக்குழுவே கூட்டப்படவில்லை. இனி திட்டக்குழு கூடினாலும் அடுத்த மாதத்தில்தான் பட்ஜெட் போடும் நிலை உருவாகும். மேலும் வெளிக்கடன் பெறும் வரம்பையும் புதுவை அரசு தாண்டிவிட்டது. இதனால் வெளிக்கடன் வாங்குவதிலும் சிக்கல் உள்ளது.
இதற்கிடையே நடப்பாண்டில் பிணைய பத்திரம் மூலம் பெற்ற ரூ.1100 கோடியை வட்டியுடன் ரூ.1600 கோடியாக புதுவை அரசு திரும்ப செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது.
இதனால் புதுவை அரசு மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளது. கொரோனாவுக்காக அரசு அதிக அளவில் நிதி செலவிட்டுள்ளது. இதனாலும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதற்கு மத்திய அரசு உதவும் என்று எதிர்பார்த்தனர். மத்திய அரசிடம் இருந்தும் எந்த உதவியும் வரவில்லை.
இருப்பினும் கொரோனாவிற்காக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
ஆனாலும் இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் கிடைக்கவில்லை. இதனால் அரசு திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் துறை மூலமாக மத்திய அரசு திட்டத்தின் டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம் உள்ளிட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட மற்றும் பாரம்பரிய வேளாண் எந்திரங்கள், உபகரணங்களை வாங்குவதற்கான மானிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி நாளை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பங்களை நேரடியாக வம்பாகீரப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உள்ள வேளாண் பொறியியல் பணிமனை அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்சாலை, தனியார் நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து வரும். எந்தெந்த துறைக்கு கொடுக்க போகிறார்கள் என்ற கேள்வி வருகிறது.
புதுவையில் நிதி பற்றாக்குறை இருந்தாலும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம், கட்டட தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. ஆயிரம் கொடுத்துள்ளோம். டெல்லி சென்று வந்தவர்களால் இங்கு கொரோனா வந்ததுபோல், கோயம்பேடு மார்க்கெட்டால் தமிழ்நாட்டில் அதிக அளவில் கொரோனா பரவியுள்ளது. நமது எல்லையை காப்பாற்ற வேண்டியது நமது கடமை.
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் சிறப்பாக பணியாற்றி வருவதால், பெரிய அளவில் பாதிப்பு இன்றி உள்ளோம். மாலை நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் கடை திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்.
கொரோனா பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே காட்டேரி குப்பம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது41). இவர் வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் அருகே உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவருக்கும் கூடப்பாக்கத்தை சேர்ந்த புவனேஸ்வரி (26) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு பள்ளியில் பணி முடிந்து கந்தசாமி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பத்துக்கண்ணு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த கார் கந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த கந்தசாமி சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கந்தசாமி 2 நாளில் இறந்து போனார்.
இதுதொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கந்தசாமியின் தாயார் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை யாரோ திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரிக்கும் லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்த கந்தசாமியின் நண்பரான அஜித்குமார் (24) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனை கந்தசாமி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரி கணவர் கந்தசாமியை கொலை செய்ய திட்டமிட்டு சம்பவத்தன்று கள்ளக்காதலனை ஏவி காரை ஏற்றி கந்தசாமியை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வில்லியனூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி, கள்ளக்காதலன் அஜித் குமார் மற்றும் காரை ஏற்றி கந்தசாமியை கொலை செய்த பிரவீன் ஆகிய 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கினர். தற்போது குற்றவாளிகளை கைது செய்வதற்கு முன்பு அவர்களை கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதால் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள 3 பேரையும் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னர், முதல்- அமைச்சர், சமூக நல துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் தவறான முடிவினால் கப்பல் ஏற்றுமதி இறக்குமதியை தொடர்ந்து, சரக்கு ரெயில் மூலம் ஏற்றுமதி, இறக்குமதியும் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அரிசி, பருப்பு கூட புதுவைக்கு சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படாமல் தமிழகப் பகுதியான கண்ட மங்கலத்தோடு சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.
அங்குள்ள மத்திய அரசுக்கு சொந்தமான குடோன்களில் சரக்குகள் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் புதுவைக்கு கூடுதல் செலவு செய்து கொண்டு வரப்படுகின்றன.
உப்பளம் தொகுதியில் உள்ள வாணரப்பேட்டையில் மிகப்பெரிய அளவில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான குடோன்கள் பல இருந்தும் சரக்கு ரெயில் மூலம் புதுவை ரெயில் நிலையத்திற்கு பொருட்கள் கொண்டு வர மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பல்லாயிர கணக்கானடன் பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்கள் செயல் இழந்து போய் உள்ளது.
புதுவை அரசு உப்பளம் தொகுதியில் உள்ள குடோன்களில் பொருட்களை சேமித்து வைக்க புதுவை ரெயில் நிலையத்திற்கு சரக்கு போக்குவரத்து ரெயில்களை இயக்க வேண்டும். இதன் மூலம் கூடுதல் செலவு, காலதாமதமும், கால விரயமும் தவிர்க்கப்படும். நம் மாநிலத்தில் பல 100 பேருக்கு வேலை வாய்ப்பும் ஏற்படும்.
எனவே, இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மத்திய அரசிடம் பேசி புதுவைக்கு நேரடியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாநிலத்திற்கு தேவையான பல்வேறு தளவாட பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து புதுவை ரெயில் நிலையம் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடை விவசாயிகளுக்கும் தங்கள் கால்நடை விவசாய தொழிலை மேம்படுத்த வங்கிகள் மூலம் உழவர் கடன் அட்டை வழங்க நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டம் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து கால்நடை விவசாயிகளுக்கும் நீட்டிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
எனவே, கால்நடை விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கறவை பசுக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ரூ.2 லட்சம் வரையில் கறவை பசு வளர்ப்பினை மேம்படுத்த ஆகும் செலவினத்தை 7 சதவீத வட்டியில் கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடனை முறையான தவணையில் திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
இத்திட்டத்தினை அனைத்து கால்நடை விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள அனைத்து கொம்யூன் உதவி கால்நடை மருத்துவர்கள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப படிவங்களை 10 நாட்களுக்குள் பூர்த்தி செய்து தரும்படி கால்நடைத்துறை இயக்குனர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.






