search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவால் புதுவையில் மதுபான கடைகள் திறப்பதில் புதிய சிக்கல்

    இன்று மாலை கூடும் புதுவை அமைச்சரவை கூட்டத்தில் மதுபான கடைகள் திறப்பது தொடர்பாக என்ன முடிவெடுக்கப்படும் என்று மது பிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
    புதுச்சேரி:

    ஊரடங்கு அறிவித்த மார்ச் 24-ந் தேதி முதல் புதுவையில் மதுபான கடைகள் திறக்கப்படாமல் உள்ளது.

    தமிழகத்தில் நேற்று முன்தினம் 43 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுவையிலும் மதுபான கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மதுபான கடைகளை திறக்க தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகளை திறப்பது அவசியமா? என கேள்வி எழுப்பினர். சிலர் கோர்ட்டிற்கும் சென்றனர். ஐகோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்து கடைகளை திறக்க உத்தரவிட்டது. இருப்பினும் புதுவையில் இன்றுவரை மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.

    இதனால் புதுவையை சேர்ந்த மது பிரியர்கள் தமிழகத்திற்கு சென்று டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்தனர். கோரி மேடு எல்லையில் தமிழக மதுபானங்களை கொண்டு வந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுவையை பொறுத்தவரை இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுவதுதான் வழக்கம். ஆனால் வரலாறு மாறி தமிழக மதுபாட்டில்கள் புதுவைக்குள் நுழைந்தது.

    இந்நிலையில் புதுவை அரசு மாநில வருவாயை கருத்தில் கொண்டு அமைச்சரவையை கூட்டி மதுபான கடைகளை திறக்க முடிவெடுக்கப்படும் என அறிவித்திருந்தது. அநேகமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் மது பிரியர்களிடம் ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு சென்னை ஐகோர்ட்டு தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காததால் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய முடிவெடுத்தால் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கவும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் கீழ் புதுவை கோர்ட்டுகள் இயங்குகிறது. இதனால் சென்னை ஐகோர்ட்டு அறிவித்த உத்தரவு புதுவைக்கும் பொருந்தும். அதேநேரத்தில் தமிழகத்தில் அரசு மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் புதுவையை பொறுத்தவரை தனியார் மூலம்தான் மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. புதுவையில் வெளிநாட்டு மதுபானம், சில்லறை விற்பனை கடைகள் 455, மொத்த விற்பனை கடைகள் 90, சாராயக்கடைகள் 130, கள்ளுக்கடைகள் 109 உள்ளது. ஊரடங்கு நீடிப்பதால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வருவதில்லை. இதனால் புதுவையை பொறுத்தவரை கடைகளை திறந்தால் தமிழகம்போல கடைகளில் கூட்டம் குவிய வாய்ப்புகள் இல்லை. இதையெல்லாம் கருத்தில்கொண்டு இன்று மாலை கூடும் புதுவை அமைச்சரவை கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும்? என்பதை மது பிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    Next Story
    ×