என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கை
    X
    கொரோனா தடுப்பு நடவடிக்கை

    புதுவையில் கொரோனா பரவாமல் தடுக்க போலீசார் கடும் கெடுபிடி

    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் புதுவையில் பரவாமல் தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் இதுவரை 10 பேரை கொரோனா தாக்கி உள்ளது. அதில் மாகியில் ஒருவர் இறந்தார். மற்ற 6 பேர் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பிவிட்டனர். இன்னும் 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று யாருக்கும் புதிதாக ஏற்படவில்லை. எனவே புதுவை ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

    ஆனால் புதுவையை ஒட்டி உள்ள தமிழக பகுதியான கடலூர்-விழுப்பரம் மாவட்டங்களில் நோய் தொற்று மிக அதிகமாக இருக்கிறது. கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர் களால் திடீரென கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது.

    நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 108 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 49 பேருக்கும் நோய் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் தற்போது 161 நோயாளிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 135 நோயாளிகளும் உள்ளனர். இன்று வெளிவந்த பரிசோதனை முடிவில் கடலூர் மாவட்டத்தில் மேலும் பலருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த வரையில் புதுவை மாநிலத் தோடு பின்னி பிணைந்து இருக்கின்றன. இதனால் கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுவைக்கு நோய் பரவி விட அதிக வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களை புதுவைக்கு வரவிடாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.

    கடலூரில் இருந்து புதுவை வரும் சாலையில் கன்னிகோவிலில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல விழுப் புரம் சாலையில் மதகடிப்பட்டி லும், திண்டிவனம் சாலையில் கோரிமேட்டிலும், ஈ.சி.ஆர். சாலையில் கனகசெட்டி குளத்திலும் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் இருந்து வரும் எந்த வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் அனுமதிக்கப்படு கிறது. அந்த வாகனங்களை யும் மருந்து தெளித்து உள்ளே அனுப்புகிறார்கள்.

    இருசக்கர வாகனங்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் புதுவை நகரை சுற்றி மரப்பாலம், இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, சிவாஜி சிலை ஆகிய இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் தமிழக பதிவெண்களுடன் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்கள் யார் என்பதை முழுமையாக விசாரித்தனர். அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றால் உடனடியாக அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

    பிரதான சாலைகள் வழியாக புதுவைக்கு சிலர் வர முயற்சித்த அதே நேரத்தில் கிராம பகுதிகளில் உள்ள சிறு சாலைகள், நடைபாதைகள் வழியாக புதுவைக்குள் நுழைய பலர் முயன்றனர்.

    இந்த பாதைகள் அனைத்தையும் அடையாளம் கண்டு அங்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு புதுவையை சுற்றி உள்ள 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    இதனால் பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர் பகுதிகளில் உள்ள வயல் வெளிகள் வழியாக தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் ஊடுருவி வருகிறார்கள். இதை அறிந்ததும் அந்த பகுதிகளிலும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மட்டுமல்லாமல், சாலையில் நடந்து வருபவர்களிடமும் நீங்கள் யார்? எதற்காக செல்கிறீர்கள் என்று விசாரித்து தான் அனுப்புகிறார்கள்.

    மேலும் ஆங்காங்கே வயல்வெளி பகுதிகளில் பறக்கும் கேமரா மூலமும் கண்காணித்து வருகின்றனர். சிலர் உரிய அனுமதி பெற்று அதற்கான கடிதத்துடன் புதுவைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நோய் தொற்று ஏதும் இருக்கிறதா? என்பதை கண்டறிய எல்லையிலேயே சோதனை நடத்தப்படுகிறது.இதற்காக மருத்துவ குழுக்களும் ஆங்காங்கே தயார் நிலையில் இருக்கின்றன.

    Next Story
    ×