என் மலர்
புதுச்சேரி
புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவினை தொடங்கி உள்ளோம். கொரோனா காலம் என்பதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறோம். லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு வரும் நிலுவை மனுக்கள் தொடர்பாக குறிப்பிட்ட கால அளவுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுவை காவல்துறையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை பற்றி மக்கள் இன்னும் சரிவர அறிந்துகொள்ளவில்லை. அதன் முதல்கட்டமாக லஞ்ச ஒழிப்பு பிரிவு செயல்படுவதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உள்ளோம்.
லஞ்சம் தொடர்பான புகார்களை என்னிடம் நேரடியாகவும் தரலாம். லஞ்ச ஒழிப்பு பிரிவினை 24 மணிநேரமும் அணுகி புகார்களை அளிக்கலாம். மக்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால்தான் சி.பி.ஐ.க்கு செல்கிறார்கள்.
எங்களுக்கு 135 புகார்கள் வந்துள்ளன. காரைக்காலில் நடத்திய முகாமுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதனால் 2 மாதத்துக்கு ஒருமுறை லஞ்ச ஒழிப்பு முகாம் நடத்த உள்ளோம். இந்த முகாம் புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களில் நடைபெறும்.
லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு என்று தனியாக ஹெல்ப்லைன், இலவச அழைப்பு எண் வசதியை உருவாக்க உள்ளோம். அதற்கான அனுமதியை அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் இந்த முறை நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர மாணவர்கள் சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் சென்டாக்கிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்டாக் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. மேலும் விடுமுறைகள் காரணமாக உரிய சான்றிதழ்களை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நீட் அடிப்படையிலான படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடலின் வெளியே அதிர்வலைகளை செலுத்தி சிறுநீரகங்களில் உண்டாகும் கற்களை உடைக்கும் உயர் சிறப்பு மிகுந்த அதிநவீன எலக்ட்ரோ ஷாக்வேவ் லித்தோட்ரிப்ஸ் (டோர்னியர் டெல்டா-111) என்ற கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், துணை இயக்குனர் அப்துல் ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிறுநீரக கற்களை உடைக்கும் அதிநவீன கருவி குறித்து டாக்டர் அசோக் சங்கர் படே கூறியதாவது:-
அறுவை சிகிச்சையின்றி சிறிதளவே வலியுடன் சிறுநீரக கற்களை அகற்ற உரிய சிகிச்சை அளிக்க இந்த இயந்திரம் உதவும். இதன்மூலம் உயராற்றல் மிக்க அதிர்வலைகளால் பெரிய கற்களை சிறிய துகள்களாக உடைத்து சிறுநீர் மூலம் வெளியேற்ற முடியும். நோயாளிகளுக்கு மயக்க மருந்து அளித்தல், வடு உண்டாக்குதல் மற்றும் உடலில் எந்த ஒரு கீறலும் இல்லாமல் இந்த சிகிச்சையில் சில மணிநேரத்தில் நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.
கடந்த 11 ஆண்டுகளாக 3 ஆயிரம் சிறுநீரக நோயாளிகளுக்கு ஜிப்மர் சிறுநீரக அறுவை சிகிச்சை துறை முன்பிருந்த இயந்திரம் மூலம் கற்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போதைய நவீன எந்திரத்தால் சிறுநீரக பாதையில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் இருக்கும் கற்களையும் அகற்ற முடியும். கணைய கற்களையும் உடைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதுவை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெற முடியும்.
புதுவையில் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த 94 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 16 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் படித்த 243 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த 2 மாணவர்கள் புதுவை பிராந்தியத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள், 11 பேர் மாகி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். ஏனாம் பிராந்தியத்தில் ஒருவர்கூட தேர்வாகவில்லை. எனவே இந்த ஆண்டே இந்த 10 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ கல்விக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.
ஒருபுறம் இந்துக்களின் பாதுகாவலர்கள் என கூறும் மத்திய பா.ஜனதா அரசு இந்துக்களுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. சமூக நீதிக்கு எதிராக அவர்கள் வெளிப்படையாக செயல்படுகிறார்கள். இந்த ஆண்டே மருத்துவக்கல்வியில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசை வலியுறுத்தி வரும் நாளை (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஓ.பி.சி. மாணவர்கள் படிக்கும் வாய்ப்புகள் பறிபோவதை பற்றி தலைவர்கள் கவலைப்படுவ தில்லை. கல்வி பெறாமல் மோதலை உருவாக்குவதையே விரும்புகிறார்கள்.
பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் உள்பட பலரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் சாதி, மதம் பெயரால் வன்முறையை தூண்ட வேண்டும் என முயற்சியில் ஈடுபட முயல்வது தெரிகிறது.
பெண்களை பற்றி பா.ஜனதாவினர் தவறாக கூறி வருகின்றனர். இவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் நான் பேசியதை திரித்து அவமதிக்கும் வகையில் என்னை பற்றி தவறாக பேசி வருகின்றனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நான் கூறியதை திரித்து வன்முறையை தூண்டி பொய் புகார் அளித்த பா.ஜனதாவினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி வரும் 31-ந்தேதி தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
மனுநூல் குறித்து பெண்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகிற 3,4, மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று பரப்புரை செய்ய உள்ளோம். ‘மகளிர் விழிப்புணர்வு மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் இது தமிழகம் முழுவதும் கிராம அளவிலும் நடக்கும்.
மனுநூல் இன்றைய அவலங்களுக்கு காரணமாக உள்ளதையும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறுமிகள், தலித் மீதான வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசில் பணிபுரியும் பிரிவு ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்மந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு ‘பி’ (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் தவிர்த்து) மற்றும் பிரிவு ‘சி’ ஊழியர்கள், முழுநேர தற்காலிக ஊழியர்கள், 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் பிரிவு ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு போனசாக ரூ.6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,200-ம் வழங்கப்படும்.
இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்கள் 26 ஆயிரம் பேர் பயனடைவர். இதன் காரணமாக புதுவை அரசுக்கு ரூ.18 கோடி கூடுதலாக செலவாகும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து புதுவை மாநிலத்திற்குள் தற்போது அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லை வரை வந்து செல்கின்றன. புதுவையில் இருந்து தமிழகத்திற்கு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து வருகிற 28-ந் தேதி முதல் புதுவையில் இருந்து பெங்களூருக்கு புதுவை அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த பஸ் புதுவையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். அந்த பஸ் பெங்களூருவில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும்.
இந்த பஸ்சில் அரசின் உத்தரவுப் படி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் 33 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கட்டணமாக ரூ.275-ம், முன் பதிவு கட்டணமாக ரூ.25 என மொத்தம் ரூ.300 வசூலிக்கப்படும். இந்த பஸ்சில் பயணம் செய்ய புதுவை பஸ்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை பி.ஆர்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.






