search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மர் ஆஸ்பத்திரி
    X
    ஜிப்மர் ஆஸ்பத்திரி

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கற்களை அகற்றும் கருவி

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்றி அதிநவீன கருவி மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்படுகிறது.
    புதுச்சேரி:

    உடலின் வெளியே அதிர்வலைகளை செலுத்தி சிறுநீரகங்களில் உண்டாகும் கற்களை உடைக்கும் உயர் சிறப்பு மிகுந்த அதிநவீன எலக்ட்ரோ ஷாக்வேவ் லித்தோட்ரிப்ஸ் (டோர்னியர் டெல்டா-111) என்ற கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், துணை இயக்குனர் அப்துல் ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சிறுநீரக கற்களை உடைக்கும் அதிநவீன கருவி குறித்து டாக்டர் அசோக் சங்கர் படே கூறியதாவது:-

    அறுவை சிகிச்சையின்றி சிறிதளவே வலியுடன் சிறுநீரக கற்களை அகற்ற உரிய சிகிச்சை அளிக்க இந்த இயந்திரம் உதவும். இதன்மூலம் உயராற்றல் மிக்க அதிர்வலைகளால் பெரிய கற்களை சிறிய துகள்களாக உடைத்து சிறுநீர் மூலம் வெளியேற்ற முடியும். நோயாளிகளுக்கு மயக்க மருந்து அளித்தல், வடு உண்டாக்குதல் மற்றும் உடலில் எந்த ஒரு கீறலும் இல்லாமல் இந்த சிகிச்சையில் சில மணிநேரத்தில் நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

    கடந்த 11 ஆண்டுகளாக 3 ஆயிரம் சிறுநீரக நோயாளிகளுக்கு ஜிப்மர் சிறுநீரக அறுவை சிகிச்சை துறை முன்பிருந்த இயந்திரம் மூலம் கற்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போதைய நவீன எந்திரத்தால் சிறுநீரக பாதையில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் இருக்கும் கற்களையும் அகற்ற முடியும். கணைய கற்களையும் உடைக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசும்போது, இந்த இயந்திரத்தின் மூலம் சிறுநீரக கல்லை உடைக்கும்போது கதிர்வீச்சு அபாயம் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    டாக்டர் அப்துல் ஹமீது பேசுகையில், ‘இந்த இயந்திரம் ரூ.4 கோடி மதிப்புடையது. தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஜிப்மரில் தான் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றவர்கள் குறைந்த கட்டணத்தில், அதாவது ரூ.4 ஆயிரம் செலுத்தி இந்த சிகிச்சையை ஜிப்மரில் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×