search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?- ரங்கசாமி பதில்

    வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
    புதுச்சேரி:

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதும் அந்த கட்சியின் அலுவலகம் 100 அடி ரோட்டில் உள்ள என்.எஸ்.ஜெ.ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்தது. அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பெரும் வெற்றியை பெற்று ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆனார்.

    அதன்பின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியை தழுவியது. தொடர்ந்து கட்சி அலுவலகம் ஜவகர் நகரில் முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் வீட்டுக்கு மாற்றப்பட்டது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியது.

    இதையடுத்து புதிய இடத்தில் கட்சி அலுவலகத்தை அமைக்க கட்சியின் தலைவரான ரங்கசாமி முடிவு செய்தார். இதற்காக அவர் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வந்தார். இந்தநிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் கட்சி அலுவலகத்தை அமைப்பது என முடிவு செய்து கட்சி நிர்வாகிகள் மூலம் அதற்கான பணிகளை மேற்கொண்டார்.

    அதன்படி கட்சி அலுவலகம் அமைப்பதற்காக பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் ரங்கசாமி கலந்துகொண்டு பூமிபூஜையை தொடங்கினார். நிகழ்ச்சியில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், சுகுமாரன், திருமுருகன், டி.பி.ஆர்.செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. நேரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ரங்கசாமியிடம் நிருபர்கள், புதுவை சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் எடுத்து வரும் பணிகள் என்ன? தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப்படும்? என்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ரங்கசாமி, தேர்தல் வரும்போது சொல்கிறேன் என்று தெரிவித்தார். வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்ற கேள்விக்கு அதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.

    நீங்கள் தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே மக்களை சந்திக்க வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாரே? என்ற கேள்விக்கு நான் புதுச்சேரியில்தான் உள்ளேன். வெளியில் எங்கும் சென்றுவிடவில்லை என்று பதில் அளித்தார்.
    Next Story
    ×