search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry government"

    மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Mekedatudam #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் 1957-ம் ஆண்டு முதல் இதுவரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 சதவீத ஆசிரியர்களுக்கு சம்பளம், பென்‌ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

    விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. புதுவையில் 26, காரைக்காலில் 8, ஏனாமில் ஒரு பள்ளி என மாநிலம் முழுவதும் 35 பள்ளிகள் உள்ளது.

    இந்த பள்ளிகளில் 26 ஆயிரத்து 568 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாதந்தோறும் இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் சம்பளமாக ரூ.2 கோடியே 92 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

    பென்‌ஷனுக்காக மாதம் ரூ.58 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கு ஒரு முறை இதற்கான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

    தற்போது கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். இந்த நிதியை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்வதற்கு அரசு உதவி பெறும் பள்ளிகளும் காரணம்.

    ஏழை மாணவர்களிடம் அவர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. பெரும்பாலும் சிறுபான்மையினர்தான் இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

    இதனால் அவர்களுக்கு நிதியுதவி அளிப்பது பொருத்தமானதுதான். அரசை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமை உள்ளது. விதிமுறைகளை கவர்னர் தொடர்ந்து மீறி வருகிறார்.

    நிர்வாக விதிமுறைகளுக்கு மாறாகவும் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக பல முறை நான் கடிதம் எழுதி உள்ளேன். அரசின் அன்றாட நடவடிக்கையில் கவர்னர் தலையிடக்கூடாது. அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடக்கூடாது.



    ஆனால், கவர்னர் கிரண்பேடி நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை மிரட்டி வருகிறார். சமீப காலமாக பல அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    கூட்டுறவு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.326 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான கோப்பையும் கவர்னர் திருப்பி அனுப்புகிறார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தடுக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

    அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் கவர்னர் தொடர்ந்து செயல்படுகிறார். ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு அரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அந்த சம்பளத்தையும் வழங்கவிடாமல் தடுத்து விட்டார்.

    ரோடியர் மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய உள்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான கோப்பு 3 மாதமாக நிலுவையில் உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கிடைக்கும். இதன் பிறகு ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவோம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை மத்திய குழு பார்வையிட்டது. பேரிடர்துறை மூலம் ரூ.10 கோடி இடைக்கால நிவாரணமாக அனுப்பியுள்ளோம்.

    மேலும் மத்திய அரசிடம் நீண்டகால திட்டங்களுக்காக ரூ.1,342 கோடி கேட்டுள்ளோம். புதுவை பகுதியில் சாலைகளை சீரமைக்கவும் நிதி கேட்டுள்ளோம்.

    கேரளா அதிரகண்டி நீர்தேக்கத்தில் இருந்து மாகிக்கு குடிநீர் வருகிறது. இதற்கு மாநில அரசு சார்பில் கேரளா அரசுக்கு பணம் செலுத்தி வருகிறோம். இத் தொகையை கேரளா அரசு திடீரென உயர்த்தியது. கேரளா முதல்வருக்கு கடிதம் அனுப்பி கேட்டுக்கொண்டதால் இத்தொகையை ரத்து செய்துள்ளனர். இதனால் கூடுதலாக செலுத்திய ரூ.2 கோடி திரும்பக்கிடைக்கும்.

    மேகதாதுவில் தடுப்பணை கட்டக்கூடாது என உத்தரவு உள்ளது. அதை மீறி தடுப்பணை கட்டினால் தமிழகத்தை மட்டுமின்றி புதுவையையும் பாதிக்கும். தேவைப்பட்டால் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம்.

    தமிழக அரசும் காவிரி ஆணையம் கூறியபடி காரைக்காலுக்கு நீர் வழங்க முன்வர வேண்டும். வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டபோது புதுவையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் நிதி அளித்தனர். இந்த நிதியை அடுத்த மாதம் கேரளா முதல்-அமைச்சரிடம் நேரில் அளிக்க உள்ளேன்.

    தற்போது புதுவையில் காரைக்கால் மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் தாராளமாக நிதி வழங்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வார வேலை நாட்களில் தனி பிரிவு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். #Mekedatudam #Narayanasamy

    புதுவை அரசு வருகிற 5-ந் தேதி விடுமுறை அறிவித்த நிலையில் அங்கு பணியாற்றும் வெளிமாநில, மாவட்ட அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Diwali #PondicherryGovernment
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோர் கூடுதலாக விடுமுறை எடுத்து கொள்ளும் வகையில் வருகிற 5-ந் தேதியும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



    இதனால் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அமைந்தது.

    இதே போல் புதுவையிலும் வருகிற 5-ந் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் புதுவை யூனியன் பிரதேசம் இருப்பதால் நவம்பர் 5-ந் தேதி விடுமுறை அளிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் புதுவை அரசின் சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் நவம்பர் 5-ந் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க புதுவை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார். இதற்கு பதிலாக டிசம்பர் 1-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும்.

    இது, புதுவை, காரைக்கால் பிராந்தியங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்து உள்ளார்.

    புதுவை அரசு வருகிற 5-ந் தேதி விடுமுறை அறிவித்த நிலையில் புதுவையில் பணியாற்றும் வெளி மாநில, மாவட்ட அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Diwali #PondicherryGovernment

    தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது. #Diwali #PondicherryGovernment
    புதுச்சேரி:

    புதுவையில் தீபாவளி பண்டிகையின் போது அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை வழங்கப்படும்.

    மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு செட் துணி ஆகியவையும் வழங்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு செட் துணி, மற்றும் சர்க்கரை வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு தீபாவளி சர்க்கரை வழங்க கவர்னர் கிரண்பேடி அனுமதிக்கவில்லை. இதனால் அப்போது தீபாவளி சர்க்கரை, மற்றும் இலவசங்கள் வழங்கப்படவில்லை.

    இந்த ஆண்டு இவற்றை எப்படியாவது வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வற்புறுத்தி வந்தன.

    நேற்று இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் அமைச்சரவை அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.எல.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது இலவசங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தினார்கள்.

    இதையடுத்து அரசு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது.

    இதுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரேசன் கார்டு களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியையும் ரொக்க பணமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

    இது சம்பந்தமாக அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கைலி, சேலை, 2 கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வழங்கப்படும்.



    இந்த ஆண்டு ரொக்க பணமாக வழங்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர். காலம் கடந்துவிட்டதால் டெண்டர் வைத்து பொருட்களை வழங்க முடியாது என்பதால் இதற்கு அரசும் சம்மதித்துள்ளது.

    இதனடிப்படையில் ஒரு செட் துணி, 2 கிலோ இலவச சர்க்கரைக்கு ஈடாக பிற சமூகத்தினரின் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ.ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

    தாழ்த்தப்பட்டோருக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ஒரு செட் துணி வழங்கப்படும். இந்த ஆண்டு ஒரு செட் துணிக்கு ரூ.822, சர்க்கரைக்கு ரூ.80 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகை ரேசன் கார்டுதாரர்களின் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    மேலும் இலவச அரிசிக்கு பதிலாகவும் பணமாக கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இதன்படி சிகப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசிக்கு ரூ.600 கணக்கிட்டு 2 மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் ரேசன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 என கணக்கிட்டு 2 மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் ஒப்புதலோடு இந்த தொகையை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தலைமை செயலாளரும், நிதித்துறை செயலாளரும் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

    ஓரிருநாளில் இத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பாப்ஸ்கோ சார்பில் வழக்கமாக தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கப்படும். இந்த ஆண்டு புதுவையில் 3 திருமண நிலையங்களில் அமுதசுரபி சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கப்படும். காரைக்காலில் வானவில் சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும். இங்கு தரமான பொருட்களை மலிவான விலையில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Diwali #PondicherryGovernment

    காவலர் பணிக்கான வயது வரம்பை 24-ஆக உயர்த்த புதுவை அரசு முடிவு எடுத்து உள்ளது. ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.
    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் துறை தலைமையகம் 2 தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

    உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. போலீஸ் பணிக்கு பிளஸ்-2 கல்வித்தகுதி, 22 வயது உச்சவரம்பு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து போலீஸ் பதவிக்கு தேர்வு நடப்பதால் வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காவலர் பணிக்கான வயது வரம்பை 24 என்று உயர்த்த அரசு முடிவு எடுத்து உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவின்பேரில் புதுவை போலீஸ் தலைமையக அதிகாரிகள் இதற்கான கோப்புகளை தயார் செய்து தலைமைச்செயலாளர் அஸ்வனிகுமாருக்கு அனுப்பி வைத்தனர். ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 29 பேர் இறந்துள்ளனர். 22-க்கும் மேற்பட்ட அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் டெலிபோனில் பேசினேன். அப்போது கேரள மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினேன். இதற்காக புதுவை மாநில அரசின் நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்க உள்ளோம்.


    மேலும் கேரள மாநில மக்களுக்கு உதவும் விதமாக தனி கணக்கு ஒன்றை தொடங்க இருக்கிறோம். இந்த தனிக்கணக்கில் புதுவை பொதுமக்களும் வியாபாரிகளும் அதிக அளவில் நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க துணிகள், அரிசி, மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவற்றை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இதனை கேரள மாநில மக்களுக்கு அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
    அரசு உத்தரவை மீறி உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வந்த 2 ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 50 மைக்ரானுக்கு கீழ் தயாரிக்கப்படும் பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏரி, குளம், வாய்க்காலில் பாலித்தீன் பைகள் அடைத்துக்கொள்வதால் தண்ணீர் வெளியேற முடியவில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதை கருத்தில்கொண்டு 50 மைக்ரானுக்கு கீழ் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு அக்டோபர் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்படும் என சட்ட சபையில் அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அமைச்சர் கந்தசாமி சென்று ஆய்வு செய்தார். அந்த கடைகளில் 50 மைக்ரானுக்கு கீழ் இருந்த பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று அமைச்சர் கந்தசாமி மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கந்தசாமி திடீர் ஆய்வு நடத்தினார்.

    அப்போது 2 தொழிற்சாலைகளில் 50 மைக்ரானுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் உடனடியாக அந்த தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் 3 தொழிற்சாலைகளில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். அந்த தொழிற்சாலை உரிமையாளர்களிடம் 50 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகளை தயாரித்தால் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

    ஆய்வின்போது அரசு செயலர்கள் பார்த்திபன், ஜவகர், சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையாளர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    பின்னர் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது. இதனால் இதை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என உத்தரவிட்டிருந்தோம். இதை மீறி மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தேன். இந்த தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வருகின்றனர். 2 ஆலைகளை சீல் வைத்துள்ளோம். அரசு உத்தரவை மீறி பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளேன்.

    மேலும் பல தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் இயங்குவதாக தெரியவந்துள்ளது. இந்த தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் கொண்ட குழு அமைத்துள்ளோம். இந்த குழுவினர் முழுமையாக ஆய்வு செய்யவுள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
    ×