search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது விவகாரத்தில் புதுவை அரசு சார்பிலும் வழக்கு தொடர ஆலோசனை - நாராயணசாமி
    X

    மேகதாது விவகாரத்தில் புதுவை அரசு சார்பிலும் வழக்கு தொடர ஆலோசனை - நாராயணசாமி

    மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Mekedatudam #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் 1957-ம் ஆண்டு முதல் இதுவரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 சதவீத ஆசிரியர்களுக்கு சம்பளம், பென்‌ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

    விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. புதுவையில் 26, காரைக்காலில் 8, ஏனாமில் ஒரு பள்ளி என மாநிலம் முழுவதும் 35 பள்ளிகள் உள்ளது.

    இந்த பள்ளிகளில் 26 ஆயிரத்து 568 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாதந்தோறும் இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் சம்பளமாக ரூ.2 கோடியே 92 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

    பென்‌ஷனுக்காக மாதம் ரூ.58 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கு ஒரு முறை இதற்கான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

    தற்போது கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். இந்த நிதியை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்வதற்கு அரசு உதவி பெறும் பள்ளிகளும் காரணம்.

    ஏழை மாணவர்களிடம் அவர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. பெரும்பாலும் சிறுபான்மையினர்தான் இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

    இதனால் அவர்களுக்கு நிதியுதவி அளிப்பது பொருத்தமானதுதான். அரசை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமை உள்ளது. விதிமுறைகளை கவர்னர் தொடர்ந்து மீறி வருகிறார்.

    நிர்வாக விதிமுறைகளுக்கு மாறாகவும் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக பல முறை நான் கடிதம் எழுதி உள்ளேன். அரசின் அன்றாட நடவடிக்கையில் கவர்னர் தலையிடக்கூடாது. அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடக்கூடாது.



    ஆனால், கவர்னர் கிரண்பேடி நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை மிரட்டி வருகிறார். சமீப காலமாக பல அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    கூட்டுறவு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.326 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான கோப்பையும் கவர்னர் திருப்பி அனுப்புகிறார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தடுக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

    அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் கவர்னர் தொடர்ந்து செயல்படுகிறார். ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு அரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அந்த சம்பளத்தையும் வழங்கவிடாமல் தடுத்து விட்டார்.

    ரோடியர் மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய உள்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான கோப்பு 3 மாதமாக நிலுவையில் உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கிடைக்கும். இதன் பிறகு ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவோம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை மத்திய குழு பார்வையிட்டது. பேரிடர்துறை மூலம் ரூ.10 கோடி இடைக்கால நிவாரணமாக அனுப்பியுள்ளோம்.

    மேலும் மத்திய அரசிடம் நீண்டகால திட்டங்களுக்காக ரூ.1,342 கோடி கேட்டுள்ளோம். புதுவை பகுதியில் சாலைகளை சீரமைக்கவும் நிதி கேட்டுள்ளோம்.

    கேரளா அதிரகண்டி நீர்தேக்கத்தில் இருந்து மாகிக்கு குடிநீர் வருகிறது. இதற்கு மாநில அரசு சார்பில் கேரளா அரசுக்கு பணம் செலுத்தி வருகிறோம். இத் தொகையை கேரளா அரசு திடீரென உயர்த்தியது. கேரளா முதல்வருக்கு கடிதம் அனுப்பி கேட்டுக்கொண்டதால் இத்தொகையை ரத்து செய்துள்ளனர். இதனால் கூடுதலாக செலுத்திய ரூ.2 கோடி திரும்பக்கிடைக்கும்.

    மேகதாதுவில் தடுப்பணை கட்டக்கூடாது என உத்தரவு உள்ளது. அதை மீறி தடுப்பணை கட்டினால் தமிழகத்தை மட்டுமின்றி புதுவையையும் பாதிக்கும். தேவைப்பட்டால் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம்.

    தமிழக அரசும் காவிரி ஆணையம் கூறியபடி காரைக்காலுக்கு நீர் வழங்க முன்வர வேண்டும். வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டபோது புதுவையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் நிதி அளித்தனர். இந்த நிதியை அடுத்த மாதம் கேரளா முதல்-அமைச்சரிடம் நேரில் அளிக்க உள்ளேன்.

    தற்போது புதுவையில் காரைக்கால் மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் தாராளமாக நிதி வழங்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வார வேலை நாட்களில் தனி பிரிவு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். #Mekedatudam #Narayanasamy

    Next Story
    ×