search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு - புதுவை அரசு அறிவிப்பு
    X

    அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு - புதுவை அரசு அறிவிப்பு

    தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது. #Diwali #PondicherryGovernment
    புதுச்சேரி:

    புதுவையில் தீபாவளி பண்டிகையின் போது அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை வழங்கப்படும்.

    மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு செட் துணி ஆகியவையும் வழங்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு செட் துணி, மற்றும் சர்க்கரை வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு தீபாவளி சர்க்கரை வழங்க கவர்னர் கிரண்பேடி அனுமதிக்கவில்லை. இதனால் அப்போது தீபாவளி சர்க்கரை, மற்றும் இலவசங்கள் வழங்கப்படவில்லை.

    இந்த ஆண்டு இவற்றை எப்படியாவது வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வற்புறுத்தி வந்தன.

    நேற்று இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் அமைச்சரவை அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.எல.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது இலவசங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தினார்கள்.

    இதையடுத்து அரசு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது.

    இதுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரேசன் கார்டு களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியையும் ரொக்க பணமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

    இது சம்பந்தமாக அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கைலி, சேலை, 2 கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வழங்கப்படும்.



    இந்த ஆண்டு ரொக்க பணமாக வழங்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர். காலம் கடந்துவிட்டதால் டெண்டர் வைத்து பொருட்களை வழங்க முடியாது என்பதால் இதற்கு அரசும் சம்மதித்துள்ளது.

    இதனடிப்படையில் ஒரு செட் துணி, 2 கிலோ இலவச சர்க்கரைக்கு ஈடாக பிற சமூகத்தினரின் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ.ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

    தாழ்த்தப்பட்டோருக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ஒரு செட் துணி வழங்கப்படும். இந்த ஆண்டு ஒரு செட் துணிக்கு ரூ.822, சர்க்கரைக்கு ரூ.80 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகை ரேசன் கார்டுதாரர்களின் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    மேலும் இலவச அரிசிக்கு பதிலாகவும் பணமாக கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இதன்படி சிகப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசிக்கு ரூ.600 கணக்கிட்டு 2 மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் ரேசன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 என கணக்கிட்டு 2 மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் ஒப்புதலோடு இந்த தொகையை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தலைமை செயலாளரும், நிதித்துறை செயலாளரும் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

    ஓரிருநாளில் இத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பாப்ஸ்கோ சார்பில் வழக்கமாக தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கப்படும். இந்த ஆண்டு புதுவையில் 3 திருமண நிலையங்களில் அமுதசுரபி சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கப்படும். காரைக்காலில் வானவில் சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும். இங்கு தரமான பொருட்களை மலிவான விலையில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Diwali #PondicherryGovernment

    Next Story
    ×