என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் இருந்து பெங்களூருக்கு வருகிற 28-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து புதுவை மாநிலத்திற்குள் தற்போது அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லை வரை வந்து செல்கின்றன. புதுவையில் இருந்து தமிழகத்திற்கு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து வருகிற 28-ந் தேதி முதல் புதுவையில் இருந்து பெங்களூருக்கு புதுவை அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த பஸ் புதுவையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். அந்த பஸ் பெங்களூருவில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும்.

    இந்த பஸ்சில் அரசின் உத்தரவுப் படி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் 33 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கட்டணமாக ரூ.275-ம், முன் பதிவு கட்டணமாக ரூ.25 என மொத்தம் ரூ.300 வசூலிக்கப்படும். இந்த பஸ்சில் பயணம் செய்ய புதுவை பஸ்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை பி.ஆர்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    கொரோனா ஊரடங்கில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி நேற்று மீண்டும் குபேர் அங்காடிக்கு மாற்றப்பட்டது.
    கொரோனா ஊரடங்கில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி நேற்று மீண்டும் குபேர் அங்காடிக்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது.

    புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    புதுச்சேரியில் 2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ரூ.246 கோடி செலவுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசிடமிருந்து கடந்த 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 49 கோப்புகள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் தாமஸ் 3 ஆண்டுகளுக்கு நியமனம், புதுச்சேரி மாநில விளையாட்டு குழுவுக்கு ஊழியர்கள் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்காக ரூ.1.52 கோடி நிதி ஒதுக்கீடு,

    புதுச்சேரி தெற்கு போலீஸ் சூப்பிரண்டாக ஐ.பி.எஸ். அதிகாரி லோகேஷ்வரன் நியமனம், காரைக்கால் நகராட்சிக்கு கழிவுநீர் சுத்தம் செய்வதற்காக ரூ.76.70 லட்சம் ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி செயலாக்க முகமை (பிஐஏ) இணை திட்ட இயக்குனர் ஆஷிஷ் கோயலுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு, தேசிய விளையாட்டுகளில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் பள்ளி குழுக்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதற்கான வழிமுறைகள் வெளியீடு, புதுச்சேரியில் 2020-2021-ம் ஆண்டிற்கு மின்சார தேவைகளுக்காக பல்வேறு மின்உற்பத்தி நிலையங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததற்காக ரூ.245.77 கோடி செலவு ஒப்புதல் அளித்துள்ளார்.

    பிப்மேட் ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.9.15 கோடி நிதி ஒதுக்கீடு, புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுக்காக ரூ.13.47 கோடி ஒதுக்கீடு, புதுவை பொறியியல் கல்லூரி ஊழியர் சம்பளத்துக்காக ரூ.17.46 கோடி ஒதுக்கீடு, காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரி ஊழியர் சம்பளத்துக்காக ரூ.3.16 கோடி ஒதுக்கீடு,

    புதுச்சேரி ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளி ஊழியர் சம்பளத்துக்காக ரூ.34.83 லட்சம் ஒதுக்கீடு, புதுச்சேரி புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை ஊழியர் சம்பளத்துக்காக ரூ.54.70 லட்சம் ஒதுக்கீடு, ஏ.எப்.டி.யில் 676 ஊழியர்களுக்கு பகுதி இழப்பீட்டுக்காக ரூ.6.65 கோடி வழங்குதல், ரூ.742 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு பதிலாக மத்திய அரசிடமிருந்து கடன்பெறுவது தொடர்பான கடிதம் உள்ளிட்ட பல கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.

    இந்த தகவலை கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் தெரிவித்துள்ளார்.
    இந்திய எல்லையில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலில் இருந்து 75 கடல் மைல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லையில், இலங்கை மீனவர்கள் 6 பேர், ஒரு விசைப்படகில் எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர், அவர்களை விசாரித்தபோது இலங்கை மீனவர்கள் என தெரியவந்தது. எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக 6 மீனவர்களையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர், அவர்களின் படகையும் பறிமுதல் செய்து, அவர்களை காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர். 6 மீனவர்களிடம், இந்திய கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கொல்லத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது42). தொழிலாளியான இவர், தனது உறவினர் உமாசங்கருடன் (35) காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பிள்ளைத்தெருவாசலில் சென்ற போது, சாலையின் நடுவே திடீரென வந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் நகர போக்குவரத்து போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் இறந்தார். உமாசங்கர் தொடர் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நெட்டப்பாக்கம்:

    நெட்டப்பாக்கம் லலிதா கார்டனை சேர்ந்தவர் பாலாஜி (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஹரிபிரியா. இவர் தனது குழந்தைகளுடன் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். பாலாஜி மட்டும் இங்குள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று பாலாஜி வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்ட முயன்றார். அப்போது கதவில் இருந்த சாவியை காணவில்லை. எனவே வேலைக்கு நேரமாகி விட்டதால் மாற்று சாவியை கொண்டு வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி செலவுக்கு பணம் எடுப்பதற்காக வீட்டின் பீரோவை திறந்தார். அப்போது அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், மோதிரம் உள்பட 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1000 ரொக்க பணத்தை காணவில்லை.

    பாலாஜியை தினமும் கண்காணித்து வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டு கதவில் இருந்த சாவியை எடுத்து வைத்துக்கொண்டு அவர் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டை திறந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். திருடுபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.

    நகை, பணம் திருடு போனதால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி வீட்டில் பணம், நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    புதுச்சேரி மாநில மக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களின் கடலோர பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் வலை பின்னும் கூடம் சேதம் அடைந்ததால் புதிதாக வலைபின்னல் கூடம் கட்டித்தரவேண்டும் என்று மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தினர்.

    அதன்பேரில் உலக வங்கி நிதி உதவியுடன், திட்ட அமலாக்க முகமையினால் காரைக்கால் மண்டபத்தூர், அக்கம்பேட்டை, காளிக்குப்பம், கோட்டுச்சேரிமேடு கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு, திரு-பட்டினம் பட்டினச்சேரி உள்ளிட்ட 8 கிராமங்களில் ரூ.20 கோடி செலவில் 10 மீனவர் பணிமனைகள் மற்றும் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிமனைகள் திறப்பு விழா திரு-பட்டினத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். பின்னர் மற்ற மீனவ கிராமத்தில் கட்டப்பட்ட பணி மனைகளை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் நேரில் திறந்து வைத்தனர்.

    விழாவில் அமைச்சர்கள் கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் சிங்காரவேல், சந்திரமோகன், கருணாநிதி, மதியழகன், டி.பிரபு, சிவகணேஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மீனவ மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பணிமனைகளில் மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். மீனவர்களுக்கு காப்பீடு, மீன்பிடி தடைக்காலம் நிதி மற்றும் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்த அரசு வழங்கி வருகிறது.

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையே, தமிழக அரசும் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் அம்மை, போலியோ போன்ற பொதுவான நோய்களுக்கு எவ்வாறு தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டதோ, அதேபோல் அனைத்து மாநில மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடவேண்டும். இதற்காக மத்திய அரசு நிதி வழங்கினாலும், வழங்கா விட்டாலும் புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை எங்கள் அரசும் இலவசமாக போடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வில்லியனூர் அருகே வாத்துப் பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஒரு வீட்டில் பெண் சிறுமிகள் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக குழந்தைகள் நல மையத்துக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கீழ்சாத்தமங்கலம் ஏரிக்கரையோரம் இருந்த குடிசையில் 7 வயது முதல் 13 வயது வரையில் 5 சிறுமிகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த குழந்தைகள் 5 பேரையும் பத்திரமாக மீட்டு தனியார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

    இந்த குழந்தைகளை அடைத்து வைத்தது யார்? என்பது குறித்து விசாரித்ததில் அந்த பகுதியில் வாத்துப் பண்ணை நடத்தும் 3 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ராவிடம் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கோர்க்காடு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘காஞ்சீபுரம் மாவட்டம் செய்யாறை சேர்ந்த ஆறுமுகம் கரும்பு வெட்டும் கூலித்தொழிலுக்காக புதுச்சேரி கிராமப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வாத்து மேய்க்கும் பணிக்காக தனது 5 பெண் குழந்தைகளையும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ. 15 ஆயிரம் வாங்கிக் கொண்டு வாத்து மேய்க்கும் பண்ணையில் கொத்தடிமைகளாக விட்டுள்ளார். அந்த குழந்தைகளை தனியாக வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இரவில் வீட்டில் பூட்டி வைத்து விடுவார்களாம். தற்போது அந்த குழந்தைகளை மீட்டு தனியார் காப்பகத்தில் வைத்துள்ளோம். அவரது தந்தை ஆறுமுகத்திடம் விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக வாத்து மேய்க்கும் பண்ணை முதலாளி, அவரது மனைவி மற்றும் மகன் மீது புகார் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
    டாக்டர் பரிந்துரை சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும் என்று மருந்து கடைகளுக்கு கலெக்டர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதனை செய்யாமலும், மருத்துவர்களை சந்திக்காமலும் நேராக மருந்துக் கடைகளுக்கு சென்று சுயமாக மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டால் அது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கக் கூடும்.

    எனவே பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மருந்துக் கடைகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருமல், காய்ச்சல், சளி, சுவாச பிரச்சினையுடன் வரும் பொதுமக்களுக்கு சுயமாக மருந்து வழங்கக் கூடாது. டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே மருந்து, மாத்திரைகள் வினியோகிக்க வேண்டும்.

    அனைத்து மருந்துக்கடைகள், கிளினிக்குகளில் அருகில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்கள் குறித்த விவரங்களை பொதுமக்களின் பார்வையில் தெரியும்படி எழுதி வைக்க வேண்டும். கொரோனா விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட வேண்டும். மருந்து வாங்குபவர்களின் பெயர், விவரங்களை சேகரிப்பதும் அவசியம். புதுச்சேரியில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு துறை இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி எச்சரித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.30-க்கு விற்ற வெங்காயம் கடந்த ஒரு வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்து நேற்று ரூ.80 வரை விற்பனையானது. சாம்பார் வெங்காயம் ரூ.120க்கு விற்கப்பட்டது.

    வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு சார்பில் கிலோ ரூ.45 விலைக்கு வெங்காய விற்பனையை தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் புதுச்சேரியில் வெங்காய விலை குறையவில்லை. வியாபாரிகள் சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து நேற்று கூட்டுறவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சரான கந்தசாமி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள வெங்காய விற்பனை கடைகளில் ஆய்வு செய்தார். குடோன்களில் உள்ள வெங்காயத்தையும் பார்வையிட்டார்.

    அப்போது வெங்காயத்தை அதிக விலைக்கு விற்கக் கூடாது என வியாபாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். கனமழை காரணமாக புதுவைக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக அவரிடம் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஆய்வின்போது அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா காரணமாக தற்போது மக்கள் வருமானமின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை பயன்படுத்தி வெங்காயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளேன். யாராவது பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் விலைப்பட்டியலை வைக்கவும், அதை அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுவை அரசு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ மூலம் வெங்காயத்தை வாங்கித்தர முடியாத நிலை உள்ளது. ஏனெனில் இதற்காக தமிழகத்தில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவைக்கு இதுபோல் கோப்பு அனுப்பினால் வெங்காய விலை குறைந்த பின்னர்தான் கவர்னரிடமிருந்து ஒப்புதல் வரும்.

    கடந்த 6 மாதங்களாக குடிநீருக்காக ஆழ்குழாய் கிணறுகூட அமைக்க முடியவில்லை. ஏதாவது ஏரி சங்கத்திடம் புகார் பெற்று ஆழ்குழாய் கிணறு அமைப்பதை நிறுத்தி விடுகிறார். அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிகளுக்கு உதவிகள் செய்ய முடியவில்லை. இலவச வேட்டி-சேலை வழங்க முடியவில்லை. அனைத்து உதவிகளையும் பணமாக வழங்குங்கள் என்று கவர்னர் கூறுகிறார்.

    பணத்தை சாப்பிட முடியுமா? கவர்னர் பணத்தை சாப்பிடுவாரா? உணவைத்தான் சாப்பிட வேண்டும். முதியோரின் வங்கிக் கணக்கிற்கு செல்லும் பணத்தை குடும்பத்தினர் எடுத்து செலவு செய்து விடுகிறார்கள். அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் 10 ஆயிரம் பேருக்கு சம்பளம் இல்லை. 9,500 காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை.

    பல மாநிலங்களில் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் புதுவையில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது. வெங்காயத்துக்காக மத்திய அரசிடம் மானியம் பெறலாம். அரசின் திட்டங்களுக்கு நிதியுதவி பெறலாம். ஆனால் இவை எதையும் கவர்னர் செய்யமாட்டார். இதனால் புதுவை அரசால் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்து வழங்க முடியாத நிலை உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.
    தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம்பெண் திடீரென்று உயிரிழந்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி பாக்கமுடையான்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). பொக்லைன் எந்திர ஆபரேட்டர், இவரது மனைவி விஜயலட்சுமி (20). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கர்ப்பமடைந்த விஜயலட்சுமி கொக்குபார்க்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கருக்குழாயில் கர்ப்பம் தரித்திருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன், விஜயலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி திடீரென்று உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் விஜயலட்சுமி இறந்துவிட்டதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்து வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ், கோரிமேடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதன்பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வில்லியனூர் அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே ஒதியம்பட்டில் இருந்து மணவெளி செல்லும் பாதையில் தாங்கல் என்ற இடத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் மேலும் சந்தேகமடைந்து சோதனை போட்டதில் 200 கிராம் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்கள் போட்டு மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்ததில் வில்லியனூர் சிவகணபதி நகரை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 25), அரும்பார்த்தபுரம் வசந்தம் நகரை சேர்ந்த பிரசாந்த் என்ற சுந்தரம் (23) என்பது தெரியவந்தது. 

    இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து 200 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    ×