search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்பு
    X
    மீட்பு

    வாத்துப் பண்ணையில் 5 கொத்தடிமை சிறுமிகள் மீட்பு

    வில்லியனூர் அருகே வாத்துப் பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஒரு வீட்டில் பெண் சிறுமிகள் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக குழந்தைகள் நல மையத்துக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கீழ்சாத்தமங்கலம் ஏரிக்கரையோரம் இருந்த குடிசையில் 7 வயது முதல் 13 வயது வரையில் 5 சிறுமிகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த குழந்தைகள் 5 பேரையும் பத்திரமாக மீட்டு தனியார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

    இந்த குழந்தைகளை அடைத்து வைத்தது யார்? என்பது குறித்து விசாரித்ததில் அந்த பகுதியில் வாத்துப் பண்ணை நடத்தும் 3 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ராவிடம் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கோர்க்காடு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘காஞ்சீபுரம் மாவட்டம் செய்யாறை சேர்ந்த ஆறுமுகம் கரும்பு வெட்டும் கூலித்தொழிலுக்காக புதுச்சேரி கிராமப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வாத்து மேய்க்கும் பணிக்காக தனது 5 பெண் குழந்தைகளையும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ. 15 ஆயிரம் வாங்கிக் கொண்டு வாத்து மேய்க்கும் பண்ணையில் கொத்தடிமைகளாக விட்டுள்ளார். அந்த குழந்தைகளை தனியாக வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இரவில் வீட்டில் பூட்டி வைத்து விடுவார்களாம். தற்போது அந்த குழந்தைகளை மீட்டு தனியார் காப்பகத்தில் வைத்துள்ளோம். அவரது தந்தை ஆறுமுகத்திடம் விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக வாத்து மேய்க்கும் பண்ணை முதலாளி, அவரது மனைவி மற்றும் மகன் மீது புகார் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
    Next Story
    ×