search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    முதல்-அமைச்சர் நாராயணசாமி

    புதுவை மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- நாராயணசாமி அறிவிப்பு

    புதுச்சேரி மாநில மக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களின் கடலோர பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் வலை பின்னும் கூடம் சேதம் அடைந்ததால் புதிதாக வலைபின்னல் கூடம் கட்டித்தரவேண்டும் என்று மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தினர்.

    அதன்பேரில் உலக வங்கி நிதி உதவியுடன், திட்ட அமலாக்க முகமையினால் காரைக்கால் மண்டபத்தூர், அக்கம்பேட்டை, காளிக்குப்பம், கோட்டுச்சேரிமேடு கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு, திரு-பட்டினம் பட்டினச்சேரி உள்ளிட்ட 8 கிராமங்களில் ரூ.20 கோடி செலவில் 10 மீனவர் பணிமனைகள் மற்றும் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிமனைகள் திறப்பு விழா திரு-பட்டினத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். பின்னர் மற்ற மீனவ கிராமத்தில் கட்டப்பட்ட பணி மனைகளை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் நேரில் திறந்து வைத்தனர்.

    விழாவில் அமைச்சர்கள் கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் சிங்காரவேல், சந்திரமோகன், கருணாநிதி, மதியழகன், டி.பிரபு, சிவகணேஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மீனவ மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பணிமனைகளில் மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். மீனவர்களுக்கு காப்பீடு, மீன்பிடி தடைக்காலம் நிதி மற்றும் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்த அரசு வழங்கி வருகிறது.

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையே, தமிழக அரசும் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் அம்மை, போலியோ போன்ற பொதுவான நோய்களுக்கு எவ்வாறு தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டதோ, அதேபோல் அனைத்து மாநில மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடவேண்டும். இதற்காக மத்திய அரசு நிதி வழங்கினாலும், வழங்கா விட்டாலும் புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை எங்கள் அரசும் இலவசமாக போடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×