search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காய குடோனில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    வெங்காய குடோனில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை

    வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி எச்சரித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.30-க்கு விற்ற வெங்காயம் கடந்த ஒரு வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்து நேற்று ரூ.80 வரை விற்பனையானது. சாம்பார் வெங்காயம் ரூ.120க்கு விற்கப்பட்டது.

    வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு சார்பில் கிலோ ரூ.45 விலைக்கு வெங்காய விற்பனையை தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் புதுச்சேரியில் வெங்காய விலை குறையவில்லை. வியாபாரிகள் சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து நேற்று கூட்டுறவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சரான கந்தசாமி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள வெங்காய விற்பனை கடைகளில் ஆய்வு செய்தார். குடோன்களில் உள்ள வெங்காயத்தையும் பார்வையிட்டார்.

    அப்போது வெங்காயத்தை அதிக விலைக்கு விற்கக் கூடாது என வியாபாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். கனமழை காரணமாக புதுவைக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக அவரிடம் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஆய்வின்போது அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா காரணமாக தற்போது மக்கள் வருமானமின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை பயன்படுத்தி வெங்காயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளேன். யாராவது பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் விலைப்பட்டியலை வைக்கவும், அதை அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுவை அரசு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ மூலம் வெங்காயத்தை வாங்கித்தர முடியாத நிலை உள்ளது. ஏனெனில் இதற்காக தமிழகத்தில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவைக்கு இதுபோல் கோப்பு அனுப்பினால் வெங்காய விலை குறைந்த பின்னர்தான் கவர்னரிடமிருந்து ஒப்புதல் வரும்.

    கடந்த 6 மாதங்களாக குடிநீருக்காக ஆழ்குழாய் கிணறுகூட அமைக்க முடியவில்லை. ஏதாவது ஏரி சங்கத்திடம் புகார் பெற்று ஆழ்குழாய் கிணறு அமைப்பதை நிறுத்தி விடுகிறார். அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிகளுக்கு உதவிகள் செய்ய முடியவில்லை. இலவச வேட்டி-சேலை வழங்க முடியவில்லை. அனைத்து உதவிகளையும் பணமாக வழங்குங்கள் என்று கவர்னர் கூறுகிறார்.

    பணத்தை சாப்பிட முடியுமா? கவர்னர் பணத்தை சாப்பிடுவாரா? உணவைத்தான் சாப்பிட வேண்டும். முதியோரின் வங்கிக் கணக்கிற்கு செல்லும் பணத்தை குடும்பத்தினர் எடுத்து செலவு செய்து விடுகிறார்கள். அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் 10 ஆயிரம் பேருக்கு சம்பளம் இல்லை. 9,500 காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை.

    பல மாநிலங்களில் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் புதுவையில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது. வெங்காயத்துக்காக மத்திய அரசிடம் மானியம் பெறலாம். அரசின் திட்டங்களுக்கு நிதியுதவி பெறலாம். ஆனால் இவை எதையும் கவர்னர் செய்யமாட்டார். இதனால் புதுவை அரசால் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்து வழங்க முடியாத நிலை உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.
    Next Story
    ×