என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை நகராட்சி அலுவலக திறப்பு விழா அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெறாததால் விழாவினை நிறுத்த கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு செயலாளர் அருண் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    கடற்கரை சாலையில் உள்ள புதுவை நகராட்சி கட்டிடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து பழமை மாறாமல் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு இருந்தது.

    அந்த அழைப்பிதழில் முதல்-அமைச்சர் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துரை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் கவர்னர் கிரண்பேடி பெயர் இதில் குறிப்பிடப்படவில்லை. தனது பெயர் குறிப்பிடப்படாதது ஏன்? என்று கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக முன்னாள் கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளரும், ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனருமான டாக்டர் அருணிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் கட்டப்பட்ட புதுவை மேரி கட்டிடம் (நகராட்சி கட்டிடம்) திறப்பு விழா காண இருப்பதாக எனது கவனத்துக்கு வந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டிடத்தை மீண்டும் கட்டுவதற்கு மத்திய அரசு புதுவை மாநிலத்துக்கு முழு நிதியுதவியையும் மானியமாக தந்து உதவியது.

    இது மத்திய அரசினால் கடலோர பேரழிவு அபாய குறைப்பு திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்களில் ஒன்று. மத்திய அரசு கடலோர பேரழிவு அபாய குறைப்பு திட்டத்தின்கீழ் ரூ.244 கோடி உலக வங்கியிடமிருந்து கடனாக பெற்று அந்த தொகையை 100 சதவீத மானியமாக புதுச்சேரி அரசுக்கு பல பணிகளுக்காக வழங்கியது.

    எனவே மத்திய அரசின் பிரமுகர்களை இந்த திறப்பு விழாவுக்கு அழைப்பதே முறையானதாகும். இதுசம்பந்தமாக தலைமை செயலாளர் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அணுகி அவர்களுக்கு உகந்த தேதியை பெறவேண்டும். அதுவரை திறப்பு விழாவானது ஒத்திவைக்கப்பட வேண்டும்.

    மேலும் எதிர்காலத்தில் மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்பட்ட அனைத்து திட்டங்கள், பணிகள் திறப்பு விழாக்களுக்கு மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்கவேண்டும். இதுசம்பந்தமாக தலைமை செயலாளர் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவார்.

    இவ்வாறு அந்த குறிப்பில் கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    தாய், தந்தையை இழந்து தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு போலீசார் பண உதவி செய்தனர்.
    மூலக்குளம்:

    புதுவை அருகே கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 20). வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. தாய், தந்தையை இழந்து தவித்த இவரை அவரது பெரியம்மா அன்னபூரணி வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் கிருத்திகாவுக்கும், சாரம் பகுதியை சேர்ந்த மணி என்கின்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பொருளாதார சிக்கலில் இருந்த அன்னபூரணி, திருமண செலவுக்கு கஷ்டப்பட்டார்.

    இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சமூக வலைதளமான வாட்ஸ்-அப்பில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு உதவுமாறு பதிவிட்டிருந்தார்.

    இதை பார்த்த புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தார். இதுபற்றி தனது போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பியாரே ஜான், நாகமுத்து, சிவசங்கரன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சிறு தொகையை உதவியாக பெற்றனர்.

    இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்தது. இதை அறிந்த போலீசார் மணமக்கள் கிருத்திகா- மணி ஆகியோரை போலீஸ் நிலையம் வரவழைத்து வெற்றிலை பாக்கு, பழம், வளையல், பட்டு சேலை, வேட்டி, சட்டை மற்றும் 10 ஆயிரம் ரொக்க பணத்தை வழங்கினர்.

    இந்த உதவியால் கிருத்திகா, மணி மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்து போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
    புதுவையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 707 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 19 பேருக்கு தொற்று உறுதியானது. 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 96 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதில் 39 ஆயிரத்து 372 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் 126 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 167 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 38 ஆயிரத்து 423 பேர் குணமடைந்துள்ளனர். 656 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 4 ஆயிரத்து 370 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
    பஸ் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க சிறப்பு பஸ் விட கோரிக்கை விடுக்கப்பட்டது.
    பாகூர்:

    புதுச்சேரியில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 9 மாதங்களுக்கு பிறகு புதுவையில் கடந்த ஜனவரி 4-ந் தேதி முதல் அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    1, 3, 5, 7, 9, 11 ஆகிய வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளிலும், 2, 4, 6, 8, 10, 12 ஆகிய வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனி கிழமைகளிலும் நடக்கிறது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

    இந்த நிலையில் அரசு பள்ளிகள் மதியம் 12.30 மணி வரை நடை பெறுவதால் மதிய உணவு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ- மாணவர்களுக்கு ஒரு ரூபாய் சிறப்பு பஸ் சேவையும் இல்லை. இதனால் தனியார் பஸ்களையே மாணவர்கள் நம்பியுள்ளனர்.

    பள்ளிக்கூடம் மதியம் 12.30 மணிக்கு முடிவதால் பள்ளி மாணவ- மாணவிகள் தனியார் பஸ் மூலம் வீடு திரும்பி வருகின்றனர். கிராமப்புறங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்கள் வருவதால் அதை தவற விட்டால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

    எனவே பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், நெருக்கியடித்துக்கொண்டு மாணவ- மாணவிகள் பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் பஸ்சில் ஏற முடியாத அளவிற்கு கூட்டம் இருப்பதால் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதை பாா்த்து மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர்.

    கிராமப்புற மாணவ-மாணவிகளின் உயிரோடு விளையாடும் அரசு உடனே இதனை கவனத்தில் கொண்டு மாணவர் சிறப்பு பஸ்சை இயக்கவேண்டும். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறினார்.
    புதுவை:

    ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் பேரியக்கத்தின் சமூக ஊடகத்தில் இணைவோம் என்ற தேர்தல் பிரசார இயக்கம் புதுவையில் நேற்று தொடங்கப்பட்டது. இதனை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், அரசு கொறடா அனந்த ராமன் எம்.எல்.ஏ., சமூக ஊடக பிரிவின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் ஹசிபா அமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அக்கறையின்மை அதிகம் உள்ளது கொரோனா கால நெருக்கடிகள் இதை நமக்கு காட்டியுள்ளன. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பெண்கள் பாதுகாப்பு, மாணவர்களின் கல்வி, பொருளாதாரத்தின் மோசமான நிலை, வேலையின்மை போன்ற பல்வேறு வி‌‌ஷயங்களில் நாங்கள் மக்களின் குரல்களை பிரதிபலித்துள்ளோம்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதா அரசால் ஜனநாயகத்துக்கு மாசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 40 வருடத்தில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

    எல்லையில் போதிய பாதுகாப்பு இல்லை. அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்புவதை மத்திய அரசு தடுத்து நிறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் மனு அளித்தார். அவருக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் மனு அளித்தார். அந்த மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நிகழ்வுகளில் கவர்னர் தலையிடுகிறார் என்றும், சட்ட விதிகளை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து அதிகாரிகளை மிரட்டி நேரடியாக உத்தரவிடுகிறார் என்றும் கூறியிருந்தார்.

    மேலும் புதுவை மக்களிடம் கவர்னரை திரும்பப்பெறக்கோரி பெற்ற கையெழுத்து பிரதிகளையும் நாராயணசாமி ஜனாதிபதியிடம் அளித்தார்.

    அவருடன் சென்ற அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரும் தனித்தனியாக கவர்னர் மீது புகார் மனுவை அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் யூனியன் பிரதேச சட்ட விதிகளின்படியே தான் நடப்பதாகவும், புதுவை கவர்னரின் அதிகாரத்தை சுப்ரீம்கோர்ட்டு உறுதி செய்துள்ளது என்றும் முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளில் 4 பெரிய டிஜிட்டல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறிப்பிட்ட சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் ஏகபோகத்தை உடைத்து நிர்வாகத்தை நேர்மையானதாக, வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்றியுள்ளது.

    முதலில் புதுவையில் அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டது. கொள்முதல், ஒப்பந்தம் சீராக்கப்பட்டது. பணமாக வழங்குவது நிறுத்தப்பட்டு நிதி அனைத்தும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது.

    ஒற்றை டெண்டர் முறை, நியமன டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மறைத்து வைக்கும் வி‌ஷயங்கள் எதுவும் இல்லாமல் போனது. 2-வதாக அனைத்து நலத்திட்ட நிதி, உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இடைத்தரகு ஒழிக்கப்பட்டு எந்த நிலுவையும் இல்லாமல் பயனாளிகளுக்கு நிதி சென்று சேர்ந்தது.

    3-வதாக மத்திய அரசு, ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய உத்தரவுகளின்படி யூனியன் பிரதேச சட்டம், பொது நிதி அதிகார விதிகள் கவர்னர் அலுவலகத்தால் முறையாக பின்பற்றப்பட்டது.

    4-வதாக வாட்ஸ்அப், சமூக வலைதளம், காணொலி காட்சி மூலம் அதிகாரிகளின் அன்றாட நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவு கண்காணிக்கப்பட்டது. ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக அறியப்பட்டது. அனைத்து துறைகளும் புதுப்பிக்கப்பட்ட வலைதளத்துடன் மத்திய அரசின் தொடர்பில் வைக்கப்பட்டது.

    நிர்வாகத்தால் வியத்தகு மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த மாற்றங்களை ஏற்க மறுப்பது அசவுகரியமாகவும், வேதனையாகவும்தான் இருக்கும்.

    இவ்வாறு பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் சமூக வலை தளங்களுக்கும் இணைத்துள்ளார்.

    அனைத்து சாராய கடைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் விற்பனை விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும் என புதுவை கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கலால் துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து மதுபான கடை உரிமதாரர்களும் கலால் விதிப்படி செயல்பட வேண்டும். அனைத்து சாராய கடைகள், மதுபான விற்பனையகங்கள் மற்றும் குடோன்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் முழுமையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    குடோன்களில் உள்ள கேமிராக்கள் அனைத்தும் நேரடி முறையில் பார்க்கும் வகையில் கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும். அதுதொடர்பான முழு விவரத்தை வருகிற 20-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

    அனைத்து சாராய கடைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் விற்பனை விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும். இது, வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இவ்வாறு சுதாகர் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
    புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக உள்ள துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையில் கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவையில் தனக்குத்தான் அதிகாரம் என கவர்னர் கிரண்பேடி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு வருகிறார் என்றும், மாநில வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்றும் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கவர்னர் கிரண்பேடியை கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா போராட்டம், ஊர்வலம் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து புகார் செய்ய நாராயணசாமி டெல்லி சென்றார்.

    ஆனால், குடியரசு தின விழா பணிகளில் ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததால் சந்திக்க முடியவில்லை. பின்னர் நேரம் ஒதுக்கித்தருவதாக கூறினார். இதனால் நாராயணசாமி புதுவை திரும்பினர். 

    இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக உள்ள துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு அளித்தனர். கிரண் பேடியை திரும்ப பெறுவது தொடர்பாக புதுவை மக்களிடம் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க பிரதிகளையும் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர்

    பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசுக்கு கிரண்பேடி தரும் பிரச்சினைகள் குறித்து குடியரசு தலைவரிடம் தெரிவித்தேன். கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க பிரதிகளை குடியரசு தலைவரிடம் வழங்கினேன்.

    புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு எதிராக ஆளுநர் கிரண் பேடி செயல்படுகிறார். நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
    மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சித்திட்டங்களை கவர்னர் கிரண்பேடி தடுத்து நிறுத்துவதையும், முடக்குவதையும் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துக்கூறி உள்ளதாக என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுடெல்லி:

    புதுவை காங்கிரஸ் அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகளை கவர்னர் கிரண்பேடி தடுத்து வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர். இதனால் கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து புகார் செய்து கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனையடுத்து புதுவை மக்களிடம் 30 தொகுதியிலும் கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற ஜனாதிபதியை வலியுறுத்தி கையெழுத்து பெற்றனர்.

    இந்த பிரதியை ஜனாதிபதியிடம் நேரில் சந்தித்து ஒப்படைக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் டெல்லி சென்றனர்.

    டெல்லியில் முகாமிட்ட அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.

    அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து பிரதிகளை வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் கிரண்பேடி எந்த வகையில் இடையூறு விளைவிக்கிறார். அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

    அமைச்சர் கந்தசாமி, தனது துறைகளில் கவர்னர் தலையீடு தொடர்பாகவும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஏனாம் தொகுதியில் கவர்னர் தலையீட்டால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு குறித்தும் தனித்தனியாக மனு அளித்தனர்.

    சுமார் ½ மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஜனாதிபதி சந்திப்பு குறித்து நாராயணசாமியிடம் கேட்டபோது கூறியதாவது:-

    மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சித்திட்டங்களை கவர்னர் தடுத்து நிறுத்துவதையும், முடக்குவதையும் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துக்கூறியுள்ளோம். அதிகார துஷ்பிரயோகம் செய்வது குறித்தும் விளக்கினோம்.

    அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து உத்தர விடுவதையும், மிரட்டுவதையும் தெரிவித்தோம். ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படும் கவர்னரை திரும்பப்பெற வேண்டும்.

    இந்த விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். கவர்னருக்கு எதிராக புதுவையில் நடந்த போராட்டங்கள் குறித்தும் தெரிவித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என புதுவை மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் மாவட்ட பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டம் தவளக் குப்பத்தில் நடந்தது.

    மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வடிவேல் வரவேற்றார். மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், தங்க விக்ரமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், மாநில பொதுச் செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன் குமார், மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    பாராளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான தகுதி உள்ளதாக கூறியிருந்தார். சுமார் 30 ஆண்டாக மத்தியில் ஆட்சியில் இருந்த நீங்கள் ஏன் புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவில்லை.

    எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முதல்- அமைச்சராக இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என மத்திய காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை வைத்தார். அப்போது பிரதமர் அலுவலக இணை மந்திரியாக இருந்த நீங்கள்(நாராயணசாமி) ஏன் இதனை செய்யவில்லை. உங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? புதுவை மக்களுக்கு பாதகம் செய்வது யாராக இருந்தாலும், அவர்களை பா.ஜனதா எதிர்க்கும்.

    13 வகையான கோப்புகள்தான் கவர்னர் ஒப்புதலுக்கு போகும். மற்ற கோப்புகள் முதல்-அமைச்சர், அமைச்சருடன் முடிந்து விடும். இப்படித்தான் சட்டம் இருந்தது. நீங்கள் தானே கோர்ட்டிற்கு சென்று சட்டப்படியான அங்கீகாரத்தை கவர்னருக்கு வாங்கி கொடுத்தீர்கள்.

    எம்.பி, மத்திய மந்திரி, முதல்-அமைச்சராக பதவி வகித்த நாராயணசாமி புதுவை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இனிமேலும் உங்களுக்கு தேர்தல் தேவையா? என்பதை மக்களிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்.

    மக்களை பொறுத்தவரை இனி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கக்கூடாது என முடிவு செய்து விட்டனர். புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமையும்போது மாநிலத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும். பா.ஜனதா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி போல சித்தரிக்கின்றனர். இதனை மக்கள் நம்ப தயாராக இல்லை.

    புதுவை மக்கள் பெருவாரியான ஆதரவுடன் பா.ஜனதாவை ஆட்சியில் அமரவைப்பர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதுவையில் காதலர்களுக்காக உருவான ‘லவ் லாக் ட்ரீ’யில் காதலர்கள் பூட்டு போட்டு தங்களது காதலை கொண்டாடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    காதல் இல்லை என்றால் உலகம் இல்லை. ஒருவருக்கு ஒருவர் காதலை புரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்திய பின்பு உடை, பரிசு பொருட்களை வாரி வழங்கி மகிழ்வது வழக்கம். தமிழர்களின் காதல் என்பது முதலில் வீரத்தில் பேசப்பட்டது. அதன்பின்னர் கிராம பகுதிகளில் கள்ளிச்செடி, பொது இடங்களில் உள்ள சுவர்களில் பெயர் எழுதி காதலை வெளிப்படுத்திய காலம் உண்டு.

    அதனை தொடர்ந்து காதல் கடிதங்கள், தனிமையில் சந்திப்பது என காதலை வளர்த்து வந்தனர். தற்போது அதிநவீன காலத்தில் செல்போன், சமூக வலைதளங்கள் காதலுடன் கை கோர்த்துள்ளன.

    இது இப்படி என்றால் காதலின் நினைவாக பூட்டு போட்டு காதலை போற்றியவர்களும் உண்டு. இதெல்லாம் காதல் படுத்தும் பாடு.

    காதலுக்கு பெயர் பெற்ற பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள சைனி ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் காதலர்கள் தங்களது காதல் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பூட்டை போட்டு பூட்டி அதன் சாவியை சிலர் ஆற்றில் வீசியும், சிலர் பத்திரப்படுத்தியும் வந்தனர். சிலர் அங்கேயே காதல் திருமணம் செய்தும் வந்தனர். இப்படி காதலர்கள் போட்ட பூட்டுகளால் பாலம் முழுவதும் நிரம்பி வழிந்ததால் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் காதலர்கள் விட்டபாடில்லை. அங்குள்ள கம்பங்களில் தொடர்ந்து காதல் சின்னமாய் இப்போதும் பூட்டு போட்டு தங்களது நம்பிக்கைக்கு உரம் சேர்த்து வருகின்றனர்.

    பிரான்ஸ் நாட்டின் ஜன்னல் என்றழைக்கப்படும் புதுச்சேரியிலும் பிரெஞ்சு கலாசாரம் அப்படியே பின்பற்றப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியின் உரிமையாளர் தனது விடுதியின் முன்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லவ் லாக் ட்ரீயை (காதல் பூட்டு மரம்) நிறுவினார்.

    இதை அறிந்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக இங்கு பூட்டு போட்டு புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. வரும் 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரிக்கு வரும் காதல் ஜோடிகள் சாதி, மதம் கடந்து புதுச்சேரியில் உள்ள ‘லவ் லாக் ட்ரீ’யில் பூட்டு போட்டு அதன் முன்பு ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
    இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி சுகாதாரத்துறை ஊழியர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் முதல்-அமைச்சர் அறிவித்தபடி இடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், டெல்லி மாநிலத்துக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். இதில் அன்புசெல்வம், சுகாதார கூட்டமைப்பு நிர்வாகிகள் லட்சுமி, சத்தியபிரபா, முருகானந்தம், தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் புதுவை அரசுக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தின் காரணமாக புதுவை அரசு மருத்துவமனைகளில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால் வெளிப்புற சிகிச்சைக்கு வந்த நோயாளிகளும், உள்புற நோயாளிகளும் கடும் அவதியடைந்தனர்.
    ×