search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லவ் லாக் ட்ரீயில் பூட்டு போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு காதல் ஜோடி.
    X
    லவ் லாக் ட்ரீயில் பூட்டு போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு காதல் ஜோடி.

    எல்லாம் காதல் படுத்தும் பாடு- புதுவையில் காதலர்களுக்காக உருவான ‘லவ் லாக் ட்ரீ’

    புதுவையில் காதலர்களுக்காக உருவான ‘லவ் லாக் ட்ரீ’யில் காதலர்கள் பூட்டு போட்டு தங்களது காதலை கொண்டாடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    காதல் இல்லை என்றால் உலகம் இல்லை. ஒருவருக்கு ஒருவர் காதலை புரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்திய பின்பு உடை, பரிசு பொருட்களை வாரி வழங்கி மகிழ்வது வழக்கம். தமிழர்களின் காதல் என்பது முதலில் வீரத்தில் பேசப்பட்டது. அதன்பின்னர் கிராம பகுதிகளில் கள்ளிச்செடி, பொது இடங்களில் உள்ள சுவர்களில் பெயர் எழுதி காதலை வெளிப்படுத்திய காலம் உண்டு.

    அதனை தொடர்ந்து காதல் கடிதங்கள், தனிமையில் சந்திப்பது என காதலை வளர்த்து வந்தனர். தற்போது அதிநவீன காலத்தில் செல்போன், சமூக வலைதளங்கள் காதலுடன் கை கோர்த்துள்ளன.

    இது இப்படி என்றால் காதலின் நினைவாக பூட்டு போட்டு காதலை போற்றியவர்களும் உண்டு. இதெல்லாம் காதல் படுத்தும் பாடு.

    காதலுக்கு பெயர் பெற்ற பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள சைனி ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் காதலர்கள் தங்களது காதல் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பூட்டை போட்டு பூட்டி அதன் சாவியை சிலர் ஆற்றில் வீசியும், சிலர் பத்திரப்படுத்தியும் வந்தனர். சிலர் அங்கேயே காதல் திருமணம் செய்தும் வந்தனர். இப்படி காதலர்கள் போட்ட பூட்டுகளால் பாலம் முழுவதும் நிரம்பி வழிந்ததால் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் காதலர்கள் விட்டபாடில்லை. அங்குள்ள கம்பங்களில் தொடர்ந்து காதல் சின்னமாய் இப்போதும் பூட்டு போட்டு தங்களது நம்பிக்கைக்கு உரம் சேர்த்து வருகின்றனர்.

    பிரான்ஸ் நாட்டின் ஜன்னல் என்றழைக்கப்படும் புதுச்சேரியிலும் பிரெஞ்சு கலாசாரம் அப்படியே பின்பற்றப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியின் உரிமையாளர் தனது விடுதியின் முன்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லவ் லாக் ட்ரீயை (காதல் பூட்டு மரம்) நிறுவினார்.

    இதை அறிந்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக இங்கு பூட்டு போட்டு புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. வரும் 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரிக்கு வரும் காதல் ஜோடிகள் சாதி, மதம் கடந்து புதுச்சேரியில் உள்ள ‘லவ் லாக் ட்ரீ’யில் பூட்டு போட்டு அதன் முன்பு ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
    Next Story
    ×