என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே திருநள்ளாறு பேட்டை மணல்மேட்டு தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் தினேஷ் (வயது26). இவரது நண்பர் பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் மதுபாலன் (26). இருவரும் நேற்று முன்தினம் இரவு பேட்டை பகுதியில் இருந்து திருநள்ளாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டினார்.

    காரைக்கால் அருகே விழிதியூர் சாலை பேட்டை சங்கரன்தோப்பு பகுதியில் சென்றபோது அதே வழியாக சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்றை கடக்கும் போது, மண் சறுக்கியதில் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் தினேஷ் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தினேசை திருநள்ளாறு சமுதாய நலவழிமையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மதுபாலன் லேசான காயத்துடன் தப்பினார். இதுதொடர்பாக மதுபாலன் கொடுத்த புகாரின் பேரில், டிராக்டர் டிரைவர் பேட்டை தோப்பு தெருவைச்சேர்ந்த பரமசிவம் மகன் ராஜமூர்த்தி (31) மீது, திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கவர்னர் கிரண்பேடி செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையில் கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது.

    யூனியன் பிரதேசமான புதுவையில் தனக்குத்தான் அதிகாரம் என கவர்னர் கிரண்பேடி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு வருகிறார் என்றும், மாநில வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்றும் நாராயணசாமி, அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கவர்னர் கிரண்பேடியை கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா போராட்டம், ஊர்வலம் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து புகார் செய்ய நாராயணசாமி டெல்லி சென்றார்.

    ஆனால், குடியரசு தின விழா பணிகளில் ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததால் சந்திக்க முடியவில்லை. பின்னர் நேரம் ஒதுக்கித்தருவதாக கூறினார். இதனால் நாராயணசாமி புதுவை திரும்பினர்.

    இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் இன்று மாலை டெல்லி செல்கின்றனர்.

    அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர். அப்போது புதுவை மக்களிடம் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க பிரதிகளையும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கின்றனர். அரசுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளதை விளக்கி கூறுகின்றனர். நாளை மறுநாள் காலை புதுவை திரும்புகின்றனர்.
    கிருமாம்பாக்கத்தில் கார் மோதி டிக்கெட் பரிசோதகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே கரையாம்புத்தூர் நேருநகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் தனியார் பஸ்சில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். கடந்த 3-ந் தேதி சொந்த வேலை காரணமாக கிருமாம்பாக்கத்துக்கு சென்ற அவர், புதுச்சேரி-கடலூர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தின்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற வீராணம் பகுதியை சேர்ந்த தேவநாதன் என்பவரும் காயமடைந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தேவநாதன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுவை அருகே நாட்டு மருந்து கடையில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை திலகர் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 41). இவர் திலகர் நகர் மெயின்ரோட்டில் நாட்டு மருந்து கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் இவர் தனது 2 மகன்களிடமும் கடையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வெளியே சென்றார். அப்போது கடைக்கு வந்த 2 வாலிபர்கள், அப்பா எங்கே? என்று சிறுவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் வெளியில் சென்று உள்ளார் என்று செல்போனில் விளையாடிக்கொண்டே கூறியுள்ளனர்.

    அதன்பின் சிறிதுநேரம் கழித்து கடைக்கு வந்த பாலாஜி கல்லாவை திறந்து பார்த்தபோது, இதில் வைத்திருந்த ரூ.29 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதுதொடர்பாக தனது மகன்களிடம் விசாரித்தபோது 2 வாலிபர்கள் வந்ததை தெரிவித்தனர். அவர்கள் தான் பணத்தை திருடி சென்றிருப்பார்கள் என்று பாலாஜி கருதினார். இதுகுறித்து கோரிமேடு போலீசில் பாலாஜி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மூலக்குளம்:

    புதுவை ரெட்டியார்பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டு மாடியில் குடும்பத்துடன் படுத்து தூங்கியுள்ளார்.

    இந்தநிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் வீட்டின் கீழ்தள கதவின் பூட்டினை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அதன்பின் அங்கு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் எழுந்து கீழே வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. அருண்குமார் குடும்பத்துடன் வீட்டின் மாடியில் படுத்திருந்ததை அறிந்து, மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    மேலும் திருட்டு நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    மோட்டார் சைக்கிள்களை திருடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் நித்தீஸ்வரம் குட்டக்கரை தெருவை சேர்ந்தவர் கார்த்திக். வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிள் மாயமானது. மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகர காவல்நிலையத்தில் கார்த்திக் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் படம் மற்றும் வீடியோ ஒன்றை மர்மநபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் (சமூக வலைத்தளம்) பதிவேற்றி இருந்தார். இதை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளை திருடியது காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த சூர்யா (20) மற்றும் 16 வயதுள்ள 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் குட்டக்கரை, நேருநகர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 மோட்டார் சைக்கிள் களையும் பறிமுதல் செய்தனர்.
    ஹெல்மெட் அணிய சொல்வது ஏன்? என்பதற்கு கவர்னர் கிரண்பேடி விளக்கம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும் நடந்தன. கவர்னரை சந்தித்து அபராதம் வசூலிக்கக் கூடாது என பா.ஜ.க.வினரும் வலியுறுத்தினர். இந்தநிலையில் அபராதம் வசூலிக்க தடை விதித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

    நாராயணசாமியின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்று கவர்னர் கிரண்பேடி குற்றஞ்சாட்டினார். தற்போது போலீசார் ஹெல்மெட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ஹெல்மெட் அணிய சொல்வது ஏன்? என்பது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஹெல்மெட் அணியவேண்டும் என்று நான் திரும்ப திரும்ப சொல்வதில் காரணம் இருக்கிறது. எனக்கு 6 வயதாக இருக்கும்போது ஸ்‌‌கூட்டரில் சென்ற எனது தந்தை விபத்தில் சிக்கினார்.

    அவர் ஹெல்மெட் அணியாததால் தலையில் காயம்பட்டு பல நாட்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனது தாயார் என்னையும், எனது சகோதரிகளையும் பார்த்து உங்கள் தந்தை இந்த இரவினை தாண்டிவிட்டால் மறுநாள் பாதுகாப்பானது என்று கூறினார். அப்போது நாங்கள் அடைந்த துயரம் அளவில்லாதது.

    ஹெல்மெட் அணியாதவர்கள் விபத்தில் சிக்கும்போது அவரது குடும்பத்தினரும், அவர்களை சார்ந்தவர்களும் கடும் துயரம் அடைகின்றனர். எனவே தயவு செய்து ஹெல்மெட் அணியுங்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    புதுவை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு நகராட்சி அலுவலக பின்புற பகுதியை சேர்ந்தவர் ஷேக்மொய்தீன். இவரது மகன் அன்வர் பா‌ஷா (வயது 25). மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் அன்வர்பா‌ஷா சண்டை போட்டு வந்துள்ளார்.

    அதேபோல் நேற்று முன்தினமும் அவர் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இதனால் அவரது தாய் மும்தாஜ் பேகம் கோட்டக்குப்பத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அன்வர்பா‌ஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேர்தலுக்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி உண்ணாவிரத நாடகம் நடத்துகிறார் என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
    புதுச்சேரி:

    ரோடியர் மில் திடலில் பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    புதுவை மாநில இளைஞர்களின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. உறுதுணையாக இருக்கும். முதல்-அமைச்சர் நாராயணசாமி தேர்தலுக்கு தேர்தல் மக்களை ஏமாற்ற உண்ணாவிரத நாடகத்தை தொடங்குவார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எங்களை கவர்னர் மாளிகை முன் நடுத்தெருவில் படுக்க வைத்தார்.

    புதுவை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சட்டமன்ற கூட்டத்தையும் நடுரோட்டில் நடத்திய பெருமை அவரையே சேரும். சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் இப்போது காங்கிரஸ் தொண்டர்களை நடுரோட்டில் அமரவைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்.

    தேர்தல் வரும் வரை மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டு தேர்தல்வரும் நிலையில்தான் அவருக்கு கவர்னரைப்பற்றி சிந்தனை வரும். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது என்னை ஏமாற்றினார். பொறுத்துக்கொண்டேன். இப்போது மாநில மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்படுகிறார்.

    காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற தேர்தலின்போது கவர்னர் கிரண்பெடியை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாகவும், இப்போது சட்டமன்ற தேர்தல் வர உள்ளநிலையில் உண்ணாவிரதம் இருந்தால் மக்களை ஏமாற்றி எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று பேசியுள்ளார்.

    புதுவை மக்கள் அரசியல் ஞானம் உள்ளவர்கள். அவர்கள் இனியும் ஏமாற தயாரில்லை. அவரது ஏமாற்று வேலை இனி மக்களிடம் பலிக்காது. நாராயணசாமியின் எண்ணங்களை மக்களிடம் பா.ஜ.க.வினர் கொண்டுசெல்ல வேண்டும்.

    ஹெல்மெட் அணியும் பிரச்சினை தொடர்பாக கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினோம். மக்களுக்கு இடையூறாக இருப்பவர்கள் கவர்னராக இருந்தாலும், முதல்-அமைச்சராக இருந்தாலும் பா.ஜ.க. ஏற்காது. புதுவை மக்களுக்கு சங்கடம் தரும், ஏற்க முடியாத வி‌‌ஷயத்தை யார் செய்தாலும் அதனை எதிர்த்து போராட தயாராக உள்ளோம்.

    தேர்தல் நேரத்தில் கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். நமது எண்ணம், செயல், சிந்தனை முழுவதும் புதுவை மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதாக இருக்கவேண்டும். நம் உணர்வுகளை தூண்டி நாம் தவறு செய்தால் அதில் அரசியல் செய்ய காத்திருக்கின்றனர். அதற்கு நாம் எந்த வகையிலும் இடம்தரக்கூடாது.

    இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

    மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசும்போது, இந்தியாவின் கடைசி காங்கிரஸ் பிரதமர் மன்மோகன்சிங். அதேபோல் புதுவையின் கடைசி காங்கிரஸ் முதல்-அமைச்சர் நாராயணசாமிதான். இன்னும் தொடர்ந்து 50 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி இருக்கும் என்று குறிப்பிட்டார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, தங்க.விக்ரமன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், துணைத்தலைவர்கள் செல்வம், அருள்முருகன், ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர்கள் ஏம்பலம்செல்வம், மோகன்குமார், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் சிவக்குமார், சிறுபான்மையினர் அணி தலைவர் விக்டர் விஜயராஜ், மாநில செயலாளர் அகிலன், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வில்லியனூர் அருகே மின்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உள்ள மங்கலம் தொகுதி உறுவையாறு பேட் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மின்துறையை கண்டித்து அப்பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. 

    இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய ரூ. 5 கோடி கேட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் மணவெளி கலைஞர் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35), கட்டிட தொழிலாளி.

    இவர் வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 2-ந் தேதி இரவு பேஸ்புக் பார்த்தபோது சத்யா, சத்யா பேஸ்புக் ஐ.டி., பக்கத்தில் சமுதாய தலைவர்களை பற்றி சர்சைக்குரிய பதிவு வெளியாகி இருந்தது.

    அதில், புதுவையில் சில சமுதாய தலைவர்களை கொல்ல வேண்டும், மேலும் பிரதமர் மோடியை கொலை செய்ய தயார். விலை ரூ.5 கோடி தர யார் தயார்? என பதிவிட்டிருந்தது.

    இதுகுறித்து தங்கதுரை அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கொலை மிரட்டல் விடுத்தது அரியாங்குப்பம் மணிவெளியை சேர்ந்த சத்தியானந்தம் (40) என தெரிய வந்தது. 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். 

    திருபுவனை அருகே தனியார் கல்லூரி பஸ் டிரைவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
    திருபுவனை:

    தவளக்குப்பம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 51). இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் காலை கல்லூரியில் இருந்து பஸ்சை கிளப்பிக்கொண்டு டீசல் போடுவதற்காக திருபுவனை அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு கண்ணன் சென்றார். அப்போது பஸ் பஞ்சரானது. உடனே அருகில் உள்ள பஞ்சர் கடைக்கு சென்று அங்கிருந்தவரை பஞ்சர் பார்க்க வருமாறு அழைத்தார். அப்போது கண்ணனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கண்ணனுக்கு பத்மபிரியா (44) என்ற மனைவியும், விசாலி (21), நெவர்தன (16) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
    ×