என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள விசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் பாக்கிய லட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவரை மணிகண்டன் மற்றும் உறவினர்கள் பிரசவத்திற்கான கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு நேற்று முன்தினம் காலை அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வார்டுக்கு பாக்கியலட்சுமி மாற்றப்பட்டார். நேற்று மதியம் 3 மணியளவில் பாக்கியலட்சுமிக்கு உதவியாக இருந்த அவரது மாமியார் கசப்பாயி பிரசவ வார்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட இளம் பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்று விட்டார்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி.சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரித்தனர்.
மேலும் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது இளம்பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பஸ் டிரைவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது இளம் பெண் ஒருவர் குழந்தையுடன் புதுவை செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரியவந்தது.
உடனே கடலூர் போலீசார் புதுவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் புதுவைக்கு வந்து பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர். பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்த போது இளம் பெண் குழந்தையுடன் வந்து ஆட்டோ பிடித்து எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு சென்றது தெரியவந்தது.
உடனே கடலூர் மற்றும் புதுவை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் பண்ருட்டி அருகே உள்ள குமாரமங்கலத்தை சேர்ந்த சிலம்பு மனைவி நர்மதா (வயது19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் குழந்தையை போலீசார் மீட்டனர். பின்னர் கடலூருக்கு கொண்டு சென்று பச்சிளம் குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர்.
முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளாரே? என்று கேட்ட போது முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் எந்தவித முறைகேடும் நடைபெற வில்லை. இது குறித்து யார் வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கடந்த ஆட்சி போல் எங்களுடைய ஆட்சி கிடையாது.
முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கும் போது சம்பந்தப்பட்டவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு அதன் பின்னர் தான் அவர்களுக்கு காசோலை கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக எந்த விசாரணை வேண்டுமானாலும் வைக்கலாம். அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு பட்ஜெட்டில் ரூ.7 கோடியே 80லட்சம் ஒதுக்கியுள்ளோம். அந்த நிதியில் என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முதலில் பகிரங்க விசாரணை நடத்துவோம்.
கவர்னர் மாளிகையில் நிதியை செலவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. தேவையில்லாமல் பணம் செலவு செய்யப்படுகிறது. நாள்தோறும் ஒவ்வொரு விழாக்கள் நடத்தப்படுகிறது.
அதற்கு எந்த நிதி செலவு செய்யப்படுகிறது என்பது குறித்து கணக்கு எதுவும் கிடையாது. கவர்னர் மாளிகையில் செய்யப்படும் செலவு குறித்து விசாரிக்கும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட உள்ளேன்.
புதுவையில் உள்ள வாய்க்கால்களை தூர்வார கவர்னர் கிரண்பெடி சமூக பொறுப்பு நிதியை வசூலித்தார். ஏராளமானோரிடம் காசோலையாக பணம் பெற்றார். அந்த நிதியை நிர்வகிக்கின்ற பொறுப்பு முதல்-அமைச்சருக்கு தான் உண்டு என்று நான் கூறினேன்.
அதன் பின்னர் அவர் வசூலித்த தொகையை மீண்டும் அவர்களுக்கே திருப்பி கொடுத்து விட்டார். இதையடுத்து அந்த நிதியை பெறாமல் வேலையை மட்டும் செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். சமூக பொறுப்பு நிதியை பெற கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வில்லியனூர் பெருமாள்புரத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மனைப்பட்டா பெற தடையில்லா சான்று வழங்கக்கோரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் நேற்று காலை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே திரண்டனர்.
தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார், கொம்யூன் பஞ்சாயத்தை முற்றுகையிடாதபடி தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறிச்சென்று கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளுவின்போது தடுப்பு கட்டை சாய்ந்து விழுந்ததில் பெண் போலீஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா புதுவை வந்தார். 2 நாட்களாக அவர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் மற்றும் புதுவை ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பொருத்தமாக இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். கொரோனாவால் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஒரே மாதிரியாக இருக்க அறிவுறுத்தியுள்ளோம்.
புதுவையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 952-ல் இருந்து 1564 ஆக உயர்த்தியுள்ளோம்.
தேர்தல் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து கொரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்த தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
புதுவையிலும், தமிழகத்திலும் தற்போது மது விலையில் மாற்றமில்லை. அண்டை மாவட்டங்களுக்கு புதுவையில் இருந்து மது மற்றும் சாராயம் கடத்தப்படுவதை தடுக்க கிடங்குகளில் மது வகைகள், இலவச பொருட்கள், வேட்டி,சேலை, பரிசுப்பொருட்கள் ஆகியவை பதுக்கப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும்.
அதற்காக கலால் துறை, மத்திய அமலாக்கத்துறை மற்றும் இதுதொடர்பான துறை அதிகாரிகளிடம் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பணம் பரிசு பொருள் தந்ததற்காக தமிழகத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. பணம், பரிசுபொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இருப்பதால் ஒரு கட்சிக்கு சாதகத்தை ஏற்படுத்தாதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிக்கலாம் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டைதான் மீண்டும் நாடி முறையிட முடியும் என்றார்.
புதுவை பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் தட்சிணாமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பதிவுத்துறையின் சேவைகளை பொதுமக்களுக்கு நேரடியாக அளிப்பதில் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தும் விதமாக இத்துறையின் சேவைகள் படிப்படியாக கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஆவண பதிவும், திருமண பதிவும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆவணம் மற்றும் திருமண பதிவு செய்வதற்கு இணையவழியாக மனு சமர்ப்பிக்கவும், முன்பதிவிற்குமான சேவை தற்போது நடைமுறையில் உள்ளது. அதேபோல் இணையவழியில் சொத்துக்களின் வில்லங்க விவரங்கள் இத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களை சேர்ந்த சார்பதிவாளர் எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் வில்லங்க விவரங்களை 1969-லிருந்தும், மாகி மற்றும் ஏனாம் பிராந்திய சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் வில்லங்க விவரங்களை 2007-லிருந்தும் பொதுமக்கள் பார்வையிடலாம்.
தற்போது 11-2-2021 முதல் 2007-ம் ஆண்டிலிருந்து பதியப்பட்ட ஆவணங்களின் நகல்களும், 2018 முதல் பதியப்பட்ட திருமண பதிவு சான்றிதழ் நகல்களும் இத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்துறையின் சேவைகளை வலைதள இணைப்பான https://regn.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். அன்றைய தினம் ரோஜா பூக்களுக்கு மவுசு அதிகம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக புதுவைக்கு வந்துள்ளன.
எஸ்.வி.படேல் சாலை, மிஷன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் இவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை, வயலட், ரோஸ் போன்ற வண்ணங்களில் அழகழகான ரோஜா பூக்கள் உள்ளத்தை கவரும் வகையில் உள்ளது. ஒரு ரோஜா பூ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு ரோஜாவின் விலை ரூ.30-க்கு விற்பனைக்கு செய்யப்பட்டது.
இதுகுறித்து பூ வியாபாரி செல்வம் கூறுகையில், ‘கடந்த ஆண்டு காதலர் தினத்தின்போது ரோஜா விற்பனை அமோக இருந்தது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக உற்பத்தி குறைந்ததால் ரோஜா பூவின் விலை சற்று அதிகமாக உள்ளது. இந்த ஆண்டும் எதிர்பார்த்தபடி விற்பனை களைகட்டும் என நம்புகிறோம்’ என்றார்.
பிரதமர் நிவாரண நிதி மற்றும் அனைத்து மாநிலங்களிலும் முதல்-அமைச்சர் நிவாரண நிதி தனி பிரிவு இருக்கும்.
அரசு துறைகளில் இருந்தும், பல்வேறு தொழில் அதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் சமூக பங்களிப்போடு இந்த பிரிவுக்கு நிதி அளிப்பார்கள். இந்த நிதியை பதவியில் இருக்கும் பிரதமரும், முதல்- அமைச்சர்களும் தங்களுக்கு வரும் கேட்பு மனுக்களை பரிசீலித்து அதற்கேற்ப நிதி உதவி வழங்குவார்கள்.
பிரதமர், முதல்-அமைச்சர் பரிந்துரை செய்தவுடன் அவர்களின் அலுவலகம் மூலம் நிவாரண உதவி கோரியவர்களுக்கு காசோலை வழங்கப்படும்.
இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கியதில் தவறுகள் உள்ளது.
உடல்நலக்குறைவு என்ற ஒரே காரணத்தை குறிப்பிட்டு சில பகுதிகளை சேர்ந்த 62 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பியிருக்கலாம். அதைவிடுத்து முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டிய அவசியம் என்ன? என கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 62 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உடல் நலக்குறைவு, ரத்த அழுத்தம் என நோயின் தன்மையை குறிப்பிட்டு நிதி பெற்றுள்ளனர். இது பொது நிதி முறைகேடு என்ற சந்தேகம் எழுகிறது.
இதனை உடனடியாக ஆய்வு செய்யும்படி தலைமை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் கேட்டுள்ளேன். வழிகாட்டுதல்கள் இருந்தால் இந்திய தணிக்கை துறை தலைவரின் அவசர சிறப்பு தணிக்கை கோரவும் தலைமை செயலரிடம் அறிவுறுத்தி உள்ளேன்.
கடந்த காலங்களில் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு என செய்திகள் வந்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை.
ஆனால் தற்போது இந்த பட்டியலில் தேவையான ஆதாரங்கள் உள்ளது. கொரோனா தடுப்பு காலத்தில் முதல்-அமைச்சர் ஒரு மாத சம்பளத்தை வழங்கினார். அரசு ஊழியர்களின் சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டு நிதி வழங்கப்பட்டது.
எனவே இந்த நிதி ஒரு பொதுவான நிதி. அவசரமாக உதவி கிடைக்க முடியாதவர்களுக்கு உடனடி தேவைக்காக இந்த நிதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பட்டியலில் இடம் பெற்றுள்ள 62 பேரையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தி இருக்கலாம்.
நிவாரண நிதியை பொறுப்புடனும், அக்கறையுடனும் செலவிட வேண்டும். முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் செலவிடப்பட்ட விபரங்கள் குறித்து உடனடியாக தலைமை செயலர், தலைமை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த அறிக்கையை 2 வாரத்துக்குள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் நிவாரண நிதி கடைசியாக எப்போது தணிக்கை செய்யப்பட்டது என்ற விபரமும் இல்லை. எனவே மத்திய தணிக்கை துறையிடம் முதல்-அமைச்சர் நிவாரண நிதி குறித்து தணிக்கை செய்யவும் முறையாக கோரியுள்ளேன்.
இவ்வாறு செய்வது நிர்வாகத்திற்கு எதிராக வீணான கேள்விகள் எழுவதை தவிர்க்கச்செய்யும்.
இவ்வாறு கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த பதிவுடன் 62 பேர் முதல்-அமைச்சர் நிவாரண நிதி உதவி பெற்ற பட்டியலையும் கவர்னர் கிரண்பேடி இணைத்துள்ளார்.
வழக்கமாக பிரதமர், முதல் அமைச்சர் நிவாரண நிதியின் செலவுகள் தணிக்கை செய்யப்படுவதில்லை.
அந்த நிவாரண நிதி குறித்து கேள்வியும் எழுப்ப முடியாது? இந்நிலையில் கவர்னர் கிரண்பேடி முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையில் கடுமையான மோதல் இருந்து வருகிறது.
சில நாட்கள் முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். கவர்னருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் முதல்-அமைச்சர் நிவாரண நிதி தொடர்பாக கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.






