search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் கிரண்பேடி
    X
    புதுவை கவர்னர் கிரண்பேடி

    புதுவையில் முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கியதில் முறைகேடு: விசாரணை நடத்த கவர்னர் உத்தரவு

    முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் செலவிடப்பட்ட விபரங்கள் குறித்து உடனடியாக தலைமை செயலர், தலைமை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் மதிப்பீடு செய்ய வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    பிரதமர் நிவாரண நிதி மற்றும் அனைத்து மாநிலங்களிலும் முதல்-அமைச்சர் நிவாரண நிதி தனி பிரிவு இருக்கும்.

    அரசு துறைகளில் இருந்தும், பல்வேறு தொழில் அதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் சமூக பங்களிப்போடு இந்த பிரிவுக்கு நிதி அளிப்பார்கள். இந்த நிதியை பதவியில் இருக்கும் பிரதமரும், முதல்- அமைச்சர்களும் தங்களுக்கு வரும் கேட்பு மனுக்களை பரிசீலித்து அதற்கேற்ப நிதி உதவி வழங்குவார்கள்.

    பிரதமர், முதல்-அமைச்சர் பரிந்துரை செய்தவுடன் அவர்களின் அலுவலகம் மூலம் நிவாரண உதவி கோரியவர்களுக்கு காசோலை வழங்கப்படும்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கியதில் தவறுகள் உள்ளது.

    உடல்நலக்குறைவு என்ற ஒரே காரணத்தை குறிப்பிட்டு சில பகுதிகளை சேர்ந்த 62 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பியிருக்கலாம். அதைவிடுத்து முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டிய அவசியம் என்ன? என கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 62 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உடல் நலக்குறைவு, ரத்த அழுத்தம் என நோயின் தன்மையை குறிப்பிட்டு நிதி பெற்றுள்ளனர். இது பொது நிதி முறைகேடு என்ற சந்தேகம் எழுகிறது.

    இதனை உடனடியாக ஆய்வு செய்யும்படி தலைமை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் கேட்டுள்ளேன். வழிகாட்டுதல்கள் இருந்தால் இந்திய தணிக்கை துறை தலைவரின் அவசர சிறப்பு தணிக்கை கோரவும் தலைமை செயலரிடம் அறிவுறுத்தி உள்ளேன்.

    கடந்த காலங்களில் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு என செய்திகள் வந்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை.

    ஆனால் தற்போது இந்த பட்டியலில் தேவையான ஆதாரங்கள் உள்ளது. கொரோனா தடுப்பு காலத்தில் முதல்-அமைச்சர் ஒரு மாத சம்பளத்தை வழங்கினார். அரசு ஊழியர்களின் சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டு நிதி வழங்கப்பட்டது.

    எனவே இந்த நிதி ஒரு பொதுவான நிதி. அவசரமாக உதவி கிடைக்க முடியாதவர்களுக்கு உடனடி தேவைக்காக இந்த நிதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

    பட்டியலில் இடம் பெற்றுள்ள 62 பேரையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தி இருக்கலாம்.

    நிவாரண நிதியை பொறுப்புடனும், அக்கறையுடனும் செலவிட வேண்டும். முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் செலவிடப்பட்ட விபரங்கள் குறித்து உடனடியாக தலைமை செயலர், தலைமை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் மதிப்பீடு செய்ய வேண்டும்.

    இந்த அறிக்கையை 2 வாரத்துக்குள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் நிவாரண நிதி கடைசியாக எப்போது தணிக்கை செய்யப்பட்டது என்ற விபரமும் இல்லை. எனவே மத்திய தணிக்கை துறையிடம் முதல்-அமைச்சர் நிவாரண நிதி குறித்து தணிக்கை செய்யவும் முறையாக கோரியுள்ளேன்.

    இவ்வாறு செய்வது நிர்வாகத்திற்கு எதிராக வீணான கேள்விகள் எழுவதை தவிர்க்கச்செய்யும்.

    இவ்வாறு கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.

    மேலும் இந்த பதிவுடன் 62 பேர் முதல்-அமைச்சர் நிவாரண நிதி உதவி பெற்ற பட்டியலையும் கவர்னர் கிரண்பேடி இணைத்துள்ளார்.

    வழக்கமாக பிரதமர், முதல் அமைச்சர் நிவாரண நிதியின் செலவுகள் தணிக்கை செய்யப்படுவதில்லை.

    அந்த நிவாரண நிதி குறித்து கேள்வியும் எழுப்ப முடியாது? இந்நிலையில் கவர்னர் கிரண்பேடி முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையில் கடுமையான மோதல் இருந்து வருகிறது.

    சில நாட்கள் முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். கவர்னருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இத்தகைய சூழலில் முதல்-அமைச்சர் நிவாரண நிதி தொடர்பாக கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    Next Story
    ×