என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று குறைவதால் மக்கள் அலட்சியம் காட்டக் கூடாது- நலவழித்துறை துணை இயக்குனர் வேண்டுகோள்

    கொரோனா தொற்று குறைவதால் மக்கள் அலட்சியத்துடன் இருக்கக் கூடாது. கவனமாக இருக்கவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துடன் நலவழித்துறை இணைந்து, சிறப்பான முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக, நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் தினந்தோறும், 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 16-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், காவல்துறை, வருவாய்த் துறையினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு 3,200 தடுப்பூசிகள் முதல்கட்டமாக வந்துள்ளது. இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு இதுவரை பக்கவிளைவுகளோ, வேறு பிரச்சினைகளோ ஏற்படவில்லை.

    தவறான தகவல்களால், தடுப்பூசி குறித்து அச்சம் மற்றும் ஆர்வமின்மை சிலருக்கு இருந்து வருகிறது. இது குறித்து யாரும் பயம் கொள்ளத்தேவையில்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். எச்.ஐ.வி. உள்ளிட்ட சில பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியை தவிர்க்க வேண்டும்.

    ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊசியை போட்டுக்கொள்ளலாம். வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை காரைக்காலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்த வாய்ப்பை முன் களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எந்தவித அச்சமுமின்றி பயன்படுத்திக்கொள்ளலாம். கொரோனா தொற்று குறைகிறது என மக்கள் அலட்சியத்துடன் இருக்கக் கூடாது. மிகுந்த கவனத்துடன் செயல்பட்டால், காரைக்காலை, கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×