என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தப்பட்ட குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீசார் மீட்டு வந்த காட்சி.
    X
    கடத்தப்பட்ட குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீசார் மீட்டு வந்த காட்சி.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தை 3 மணி நேரத்தில் மீட்பு

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 3 மணி நேரத்தில் புதுவையில் மீட்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள விசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் பாக்கிய லட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவரை மணிகண்டன் மற்றும் உறவினர்கள் பிரசவத்திற்கான கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு நேற்று முன்தினம் காலை அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வார்டுக்கு பாக்கியலட்சுமி மாற்றப்பட்டார். நேற்று மதியம் 3 மணியளவில் பாக்கியலட்சுமிக்கு உதவியாக இருந்த அவரது மாமியார் கசப்பாயி பிரசவ வார்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.

    அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட இளம் பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்று விட்டார்.

    இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி.சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது இளம்பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பஸ் டிரைவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது இளம் பெண் ஒருவர் குழந்தையுடன் புதுவை செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரியவந்தது.

    உடனே கடலூர் போலீசார் புதுவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் புதுவைக்கு வந்து பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர். பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்த போது இளம் பெண் குழந்தையுடன் வந்து ஆட்டோ பிடித்து எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு சென்றது தெரியவந்தது.

    உடனே கடலூர் மற்றும் புதுவை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.

    அவர் பண்ருட்டி அருகே உள்ள குமாரமங்கலத்தை சேர்ந்த சிலம்பு மனைவி நர்மதா (வயது19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் குழந்தையை போலீசார் மீட்டனர். பின்னர் கடலூருக்கு கொண்டு சென்று பச்சிளம் குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×