search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நமச்சிவாயம்
    X
    நமச்சிவாயம்

    காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என புதுவை மக்கள் முடிவு செய்துவிட்டனர்- நமச்சிவாயம்

    காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என புதுவை மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் மாவட்ட பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டம் தவளக் குப்பத்தில் நடந்தது.

    மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வடிவேல் வரவேற்றார். மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், தங்க விக்ரமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், மாநில பொதுச் செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன் குமார், மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    பாராளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான தகுதி உள்ளதாக கூறியிருந்தார். சுமார் 30 ஆண்டாக மத்தியில் ஆட்சியில் இருந்த நீங்கள் ஏன் புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவில்லை.

    எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முதல்- அமைச்சராக இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என மத்திய காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை வைத்தார். அப்போது பிரதமர் அலுவலக இணை மந்திரியாக இருந்த நீங்கள்(நாராயணசாமி) ஏன் இதனை செய்யவில்லை. உங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? புதுவை மக்களுக்கு பாதகம் செய்வது யாராக இருந்தாலும், அவர்களை பா.ஜனதா எதிர்க்கும்.

    13 வகையான கோப்புகள்தான் கவர்னர் ஒப்புதலுக்கு போகும். மற்ற கோப்புகள் முதல்-அமைச்சர், அமைச்சருடன் முடிந்து விடும். இப்படித்தான் சட்டம் இருந்தது. நீங்கள் தானே கோர்ட்டிற்கு சென்று சட்டப்படியான அங்கீகாரத்தை கவர்னருக்கு வாங்கி கொடுத்தீர்கள்.

    எம்.பி, மத்திய மந்திரி, முதல்-அமைச்சராக பதவி வகித்த நாராயணசாமி புதுவை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இனிமேலும் உங்களுக்கு தேர்தல் தேவையா? என்பதை மக்களிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்.

    மக்களை பொறுத்தவரை இனி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கக்கூடாது என முடிவு செய்து விட்டனர். புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமையும்போது மாநிலத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும். பா.ஜனதா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி போல சித்தரிக்கின்றனர். இதனை மக்கள் நம்ப தயாராக இல்லை.

    புதுவை மக்கள் பெருவாரியான ஆதரவுடன் பா.ஜனதாவை ஆட்சியில் அமரவைப்பர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×