என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,290 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 52 பேருக்கு தொற்று உறுதியானது. 18 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது.

    அவர்களில் 214 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 1,132 பேர், முன்கள பணியாளர்கள் 208 பேர், பொதுமக்கள் 1,104 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 32 ஆயிரத்து 603 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    புதுவையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. அதேபோல் உயிரிழப்பும் எப்போதாவதுதான் ஏற்பட்டது.

    ஆனால் நேற்று 52 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 24 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் பாதிப்பு 2 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது சுகாதாரத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதேபோல் கடந்த காலங்களில் சோதனை பணிகளில் செவிலியர்கள், துணை செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் நடமாடும் முகாம்களை அமைத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெற நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் தற்போது அத்தகைய முகாம்கள் காணப்படுவதில்லை. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட சுமார் 112 ஊழியர் களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணிநீட்டிப்பு வழங்கவில்லை. இதனால் அவர்களும் பணிக்கு வரவில்லை. அவர்களுக்கு பணிநீடிப்பு வழங்குவதற்கான கோப்பும் அரசிடம் நிலுவையில் உள்ளது.

    இத்தகைய குறைபாடுகளை களைந்து பணியாளர்களை முழுவீச்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினால் மட்டுமே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் தற்போது தேர்தல் காலம் என்பதால் பிரசாரம், பொதுக்கூட்டம், வாக்குசேகரிப்பு என மக்கள் கூட்டம் அலைமோதும். அப்போது தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது என்பது இயலாததாகவே மாறிவிடும்.
    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    தேங்காய்திட்டு நேரு நகரை சேர்ந்தவர் சந்திரமவுலீஸ்வரர் (வயது 47). இவரது மனைவி சுப்ரியா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சந்திரமவுலீஸ்வரர் குடிநீர் சுத்திகரிப்பு மிஷின் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

    கடந்த ஒரு வருடமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் எலி மருந்து தின்று மயங்கி கிடந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலை சந்திரமவுலீஸ்வரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் முதல்வராக இருந்த நாராயணசாமி போட்டியிடாததால் காங்-தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

    நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் விலகி பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. கவர்னர் கிரண்பேடியின் முட்டுக் கட்டையால் தேர்தலின் போது அறிவித்த திட்டங்களை காங்கிரசால் நிறைவேற்ற முடியவில்லை.

    இந்த காரணங்களால் காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது எனக்கூறி கூட்டணியில் உள்ள தி.மு.க. அதிக தொகுதிகளை கேட்டு வந்தது.

    அதோடு கூட்டணிக்கு தி.மு.க.வே தலைமை தாங்கும் என்றும், யார் அதிகமாக எம்.எல்.ஏ.க்களை பெறுபவரே முதல்- அமைச்சர் என வலியுறுத்தினர்.

    இதனால் தொகுதி பங்கீடை இறுதி செய்ய நீண்ட இழுபறி நிலவியது. இறுதியில் காங்கிரசுக்கு 15, தி.மு.க.வுக்கு 13, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற 9 தொகுதிகளை விட கூடுதலாக 4 தொகுதிகளை தி.மு.க. பெற்றுள்ளது.

    கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் நாராயணசாமி இடம்பெறவில்லை.

    அவரது தொகுதியான நெல்லித்தோப்பு தி.மு.க. வுக்கு ஒதுக்கப்பட்டது. 5 மாநில தேர்தல்களில் தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் முதல்வராக இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

    ஆனால், புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி மட்டும் போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தனர். தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏ.வாக போட்டியிடாத நாராயணசாமி முதல்- அமைச்சர் ஆனார்.

    தற்போது மாநில தலைவராக ஏ.வி.சுப்ரமணியன் உள்ளார். ஆனால். இவர் முதல்- அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை.

    காங்கிரசை பொறுத்த வரை வழக்கமாக தேர்தலுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்றவர்கள் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள். அதுபோன்ற நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை தாங்குகிறார். இவரையும் கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என பா.ஜனதா அறிவித்துள்ளது.

    ஆனால், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் ரங்கசாமிதான் முதல்- அமைச்சர் என தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

    முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிக்காதது புதுவை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஏனாமில் ரங்கசாமிக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் வேட்பாளரை தேடி வருகின்றனர். கடந்த காலங்களில் புதுவை காங்கிரசுக்கு ஏனாம், மாகி கை கொடுக்கும் தொகுதிகளாக இருந்தது.
    புதுச்சேரி:

    புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

    15 தொகுதிகளில் காங்கிரஸ், போட்டியிடுவது என ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் ஏனாமை தவிர்த்து 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஏனாம் தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.

    காங்கிரசில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணா ராவ் பதவியை ராஜினாமா செய்து என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார். ஏனாமில் ரங்கசாமி போட்டியிடுவார் என அறிவித்த மல்லாடி பிரசாரம் செய்து வருகிறார்.

    ஏனாமில் ரங்கசாமிக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் வேட்பாளரை தேடி வருகின்றனர். கடந்த காலங்களில் புதுவை காங்கிரசுக்கு ஏனாம், மாகி கை கொடுக்கும் தொகுதிகளாக இருந்தது. மாகி தொகுதியில் முன்னாள் அமைச்சர் வல்சராஜ் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

    மார்க்சிஸ்டு ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என வல்சராஜ் அறிவித்துள்ளார். இதனால் மாகி தொகுதியில் வட்டார காங்கிரஸ் தலைவர் வேட்பாளராக களம் இறங்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மார்க்சிஸ்டு ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் போட்டியிடுகிறார்.

    இதனால் மாகி தொகுதியிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏனாம், மாகியில் நீண்டகாலமாக காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று 2 தொகுதிகளை தந்தது. தற்போது 2 தொகுதிகளும் கை நழுவியுள்ளது.

    புதுவையில் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ள பாமக முதல் கட்டமாக 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. - பா.ஜனதா- பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    புதுவையிலும் இக்கூட்டணி நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புதுவை பா. ஜனதா கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாரதிய ஜனதா 9 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.

    பா.மக.வுக்கு 3 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என அக்கட்சி மாநில அமைப்பாளர் தன்ராஜ் வற்புறுத்தி வந்தார். ஆனால் பாரதிய ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒரு தொகுதி கூட வழங்கவில்லை.

    இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து புதுவை பா.ம.க. விலகியது. தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக 9 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    மண்ணாடிப்பட்டு - வெங்கடேசன், அரியாங்குப்பம் - சிவராமன், மங்கலம் - மதியழகன், தட்டாஞ்சாவடி -கதிர்வேல், லாஸ்பேட்டை நரசிம்மன், மணவெளி - கணபதி, இந்திரா நகர் வடிவேல், ஊசுடு (தனி)- கலியபெருமாள், திருபுவனை (தனி) - சாண்டில்யன்.
    பணம் கேட்டு மிரட்டல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பெண் தாதா எழிலரசியை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தொழில் அதிபரான இவரது 2-வது மனைவி எழிலரசி (வயது 45). இவர் காரைக்கால் நேதாஜிநகரில் வசித்து வருகிறார். எழிலரசி மீது, முன்னாள் அமைச்சர் சிவக்குமார், ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா, திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை கூலிப் படையை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் பெண் தாதாவாக அவர் வலம் வந்தார்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு எழிலரசி, விக்ரமன் ஆகியோர் காரைக்கால் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டினர். இதுதவிர ராதாகிருஷ்ணனின் முதல் மனைவியின் மகன் அஜேஸ்ராமுவை மிரட்டி மதுபான கடை ஒன்றை வாங்கிய வழக்கும் உள்ளது. இந்த வழக்குகளில் எழிலரசி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் எழிலரசி பா.ஜ.க.வில் இணைந்ததாக கூறப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அவர், திருமலைராயன்பட்டினத்தில் போட்டியிடப்போவதாக முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    இந்தநிலையில் நேற்று திருமலைராயன்பட்டினத்துக்கு எழிலரசி காரில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்ரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று எழிலரசியை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட எழிலரசி சார்பில், திருமலைராயன்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    புதுவையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    மூலக்குளம்:

    முத்திரையர்பாளையம் பாம்பாட்டி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (36). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த காமாட்சி வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

    மற்றொரு புறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    அரியாங்குப்பம் - ஜெயமூர்த்தி,

    மணவெளி - அனந்தராமன், 

    ஏம்பலம் - கந்தசாமி, 

    நெட்டப்பாக்கம் - விஜயவேணி, 

    நெடுங்காடு - மாரிமுத்து, 

    திருநள்ளாறு - கமலக்கண்ணன்

    காரைக்கால் வடக்கு - ஏ.வி.சுப்ரமணியன், 

    மாஹே - ரமேஷ், 

    ஊசுடு - கார்த்திகேயன், 

    கதிர்காமம் - செல்வநாதன், 

    இந்திராநகர் - கண்ணன் 

    முத்தியால்பேட்டை - செந்தில்குமரன், 

    காமராஜ்நகர் - ஷாஜஹான், 

    லாஸ்பேட்டை - வைத்தியநாதன் ஆகியோர் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் உடன் இணைந்து பா.ஜனதா, அதிமுக போட்டியிடுகிறது. பா.ஜனதா 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.
    புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பா.ஜனதா, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. பா.ஜனதா 9 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    1. காலாப்பட்டு - கல்யாணசுந்தரம்
    2. காமராஜ்நகர்- ஜான்குமார்
    3. நெல்லித்தோப்பு- ரச்சர்ட்
    4. மண்ணாடிப்பட்டு- நமச்சிவாயம்
    5. ஊசுடு- சாய் ஜெ. சரவணகுமார்
    6. மணவெளி- ஏம்பலம் செல்வம்
    7. லாஸ்பேட்டை- சாமிநாதன்
    8. திருநள்ளாறு- ராஜசேகர்
    9. நிரவி- மனோகர்

    அதிமுக வேட்பாளர்கள் விவரம்:-

    1. உப்பளம்- ஏ. அன்பழகன்
    2. உருளையன்பேட்டை- ஓம்சக்தி சேகர்
    3. முத்தியால்பேட்டை- வையாபுரி மணிகண்டன்
    4. முதலியார் பேட்டை- பாஸ்கர்
    5. காரைக்கால் தெற்கு- கே.ஏ.யு. அசனா.
    புதுவையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள 28 தொகுதிகளிலும் இக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    அதாவது 14 பெண்கள், 14 ஆண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். இந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் ரோடியர் மில் திடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் 28 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகிறார். அப்போது அவர் விவசாயி சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    இதற்காக ரோடியர் மில் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேடை அமைக்கும் பணிகள் இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகின்றன.
    கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், விரைவில் என்ஆர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் என்.ஆர். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 14 தொகுதிகளை பா.ஜனதா அ.தி.மு.க. பிரித்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த கூட்டணியில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    ஆனாலும் இன்று சிலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்திராநகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரசில் போட்டியிடும் ஏ.கே.டி.ஆறுமுகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதேபோல முத்தியால்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க.வில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.

    என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் அவர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். 

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், விரைவில் என்ஆர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார். கூட்டணி கட்சி தலைவர்களுடன் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் பலரும் மனு தாக்கல் செய்வதற்கு தயாராக உள்ளனர். நாளை மேலும் பலர் மனுதாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதே நேரத்தில் நாளை அனைத்து கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லாஸ்பேட்டையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி சின்னதச்சூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41) எலக்ட்ரீசியன். புதுவை லாஸ்பேட்டை நந்தா நகரில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் வேலை செய்தார்.

    அப்போது 3-வது மாடியில் கட்டிங் மி‌ஷினில் மின் இணைப்புக்காக ஒயரை இணைத்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிவக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×