என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் பாஜக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
    புதுச்சேரி:

    சட்டமன்ற தேர்தலையொட்டி புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை ரெட்டியார்பாளையம் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள சுரே‌‌ஷ் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பட்டுப் புடவைகளை பதுக்கி வைத்து இருப்பதாக 1950 என்ற தேர்தல் தொடர்பான புகார் எண்ணுக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஜீவானந்தம் தலைமையிலான துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சுரே‌‌ஷ் வீட்டிற்கு விரைந்து சென்று அங்கு சோதனையிட்டனர்.

    அப்போது ஒரு அறையில் சுமார் 50 புடவைகள் கொண்ட 30 அட்டைப் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்தியபோது சுரே‌‌ஷ் பா.ஜ.க.வில் இருப்பதும், அவரது நண்பருக்காக தனது வீட்டில் பட்டுப் புடவைகளை பதுக்கி வைத்து இருந்ததாகவும் கூறி இருப்பதாக தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பட்டுப் புடவைகளின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அவை ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டன. பட்டுப்புடவைகள் வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவைக்கு வந்துள்ள தேர்தல் செலவின பார்வையாளர்கள் இங்குள்ள பல்வேறு குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் மூலமாக தேர்தல் செலவின கணக்குகளை கண்காணித்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பூர்வா கார்க் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் சட்டமன்ற பொதுத்தேர்தலை அமைதியாகவும், நடுநிலையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    தேர்தல் கணக்கு, செலவினம் தொடர்பான விதிமீறல்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் கணக்குகளை ஆராயவும் இந்திய தேர்தல் ஆணையம் புதுவை மாநிலத்திற்கு 9 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமித்துள்ளது.

    அவர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி விவரம் வருமாறு:-

    1.சந்திர பிரகா‌‌ஷ் மீனா-மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு. 2.ஆதித்ய சுக்லா-மங்கலம், வில்லியனூர், உழவர்கரை.

    3. அபராஜித் சர்மா- கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி.

    4. தீப்தி சந்தோலோ-காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, ராஜ்பவன். 5.தேவே‌‌ஷ் குப்தா- லாஸ்பேட்டை, காலாப்பட்டு, உப்பளம், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை.

    6. பிரசாந்த் சுக்லா- நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், மணவெளி.

    7. ‌ஷிவ் பிரதாப் சிங்- ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர். 8-அபிஷேகானந்தராவ்-மாகி,

    9. சஞ்சய் குமார் ஜெயன்-ஏனாம்.

    புதுவைக்கு வந்துள்ள இந்த தேர்தல் செலவின பார்வையாளர்கள் இங்குள்ள பல்வேறு குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் மூலமாக தேர்தல் செலவின கணக்குகளை கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    அரசு குடியிருப்புகளை பராமரிக்க மத்திய பொதுப்பணித்துறை மேற்கொள்வது போல் ஒரு பொதுத்துறை நிறுவனம் மூலம் இதை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
    புதுச்சேரி:

    அரசு பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கருவடிக்குப்பத்தில் பொதுமக்களுக்கு மாசு கலந்த குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கவர்னர் மாளிகைக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து நேற்று காலை கருவடிக்குப்பம் லட்சுமி நகர் அய்யனார் கோவில் வீதிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். அங்குள்ள மேல்நிலை தொட்டியை அவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் மேஜர் சரவணன் நகர், மேட்டுத்தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, ஓடை தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாசு கலந்து செம்மண் நிறத்தில் குடிநீர் வருகிறது. அதை பயன்படுத்த முடியவில்லை என்று கூறி அந்த பகுதி மக்கள் ஒரு பாட்டிலில் தண்ணீரை எடுத்து வந்து காண்பித்தனர்.

    மேலும், இந்த பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான நேரமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஒட்டியுள்ள ஓடையில் கழிவுநீர் கலந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை என்று கூறினர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஒரு திட்ட அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் பல பகுதிகள் மிகவும் மோசமாக உள்ளன. பழைய மின் கட்டமைப்புகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. குடியிருப்புகள் சீரமைக்கப்படுவது இல்லை. எனவே அனைவரும் பாதுகாப்பாக வாழ குடியிருப்புகளை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, அரசு குடியிருப்புகளை பராமரிக்க மத்திய பொதுப்பணித்துறை மேற்கொள்வது போல் ஒரு பொதுத்துறை நிறுவனம் மூலம் இதை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார். தேர்தல் விதிகளுக்கு இணங்க அத்தியாவசிய பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு அவர் சென்றார்.
    லாஸ்பேட்டையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி சின்னதச்சூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41) எலக்ட்ரீசியன். புதுவை லாஸ்பேட்டை நந்தா நகரில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் வேலை செய்தார்.

    அப்போது 3-வது மாடியில் கட்டிங் மி‌ஷினில் மின் இணைப்புக்காக ஒயரை இணைத்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிவக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    14 தொகுதிகளை பாஜக- அதிமுக பிரித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது 3 தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மீதமுள்ள 14 தொகுதிகளை பா.ஜ.க. - அ.தி.மு.க. பிரித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது 3 தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனால் அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தங்கள் தலைமையிடம் வலியுறுத்தினர்.

    நீண்ட இழுபறிக்கு இடையே அ.தி.மு.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உப்பளம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
    புதுவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 15 பேருக்கு தொற்று உறுதியானது. 15 பேர் குணமடைந்தனர். இதுவரை 6 லட்சத்து 45 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரத்து 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 190 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 169 பேர் குணமடைந்துள்ளனர்.

    காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் புதுவையில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளது.

    புதுவையில் நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 464 பேர், முன்கள பணியாளர்கள் 386 பேர், பொதுமக்கள் 828 பேர் என மொத்தம் 1,678 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. புதுவையில் ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்து 165 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
    புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு அரசியல் அநாகரிகம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
    புதுச்சேரி:

    இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக்குப்பத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் தற்போது புதுவையில் உள்ள அரசியல் நிலவரம், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    முன்னதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் முன்பு இருந்த கவர்னர் கிரண்பெடிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியால் மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. ஆட்சி முடியும் நிலையில் அவசர அவசரமாக ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது. இது அரசியல் அநாகரிகம். தேவையில்லாமல் நாராயணசாமிக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேடி தந்துள்ளது.

    தற்போது உள்ள கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புதுவையில் நல்லாட்சி அமைய வேண்டும். இங்கு ஆன்மிக அரசியல் தான் வேண்டும். இது தொடர்பாக நான் ரங்கசாமியை விரைவில் சந்தித்து பேச உள்ளேன்.

    புதுவையில் விவேகானந்தருக்கு சிலை அமைக்க வேண்டும். புதுச்சேரி என்றாலே மதுச்சேரி என்று அழைக்கப்படுகிறது. இதனை மாற்ற இங்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கூட்டணி தயவால் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கும் ரங்கசாமி, இவ்விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதும் அ.தி.மு.க.வினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. இடம்பெற்றுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் தலைமை தாங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளை அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் பிரித்துக்கொள்வதில் பெரும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    பா.ஜனதா தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 4 தொகுதிகளை மட்டும் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்குவோம் என கூறுகின்றனர். இது புதுவை அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    குறைந்தபட்சம் 7 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுவையில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றது.

    பா.ஜனதா 18 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே டெபாசிட் பெற்றது. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் படுதோல்வியை சந்தித்தனர்.

    இதேபோல 2014-ல் பாராளுமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், 3-வது இடத்தை அ.தி.மு.க. பிடித்தது. சுமார் 1½ லட்சம் வாக்குகளை அ.தி.மு.க. பெற்றது.

    1977-ம் ஆண்டுக்கு பிறகு புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமையவில்லை. சொற்ப காலம் மட்டுமே அ.தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தது.

    ஆனாலும், புதுவையின் அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க.வுக்கு கணிசமான வாக்கு வங்கி இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆனால், கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜனதாவிடம் கையேந்த வைத்து விட்டார்களே? என அ.தி.மு.க.வினர் புலம்பு கின்றனர்.

    கூட்டணி தயவால் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கும் ரங்கசாமி, இவ்விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதும் அ.தி.மு.க.வினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேல்மட்ட தலைவர்கள் அமைப்பது கூட்டணி அல்ல.

    அடிமட்ட தொண்டர்கள் இணக்கமாக செயல்பட்டால்தான் வெற்றியை ஈட்ட முடியும் என்பதை பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என புதுவை அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.

    காங்கிரசுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்காததை கண்டித்து மங்கலம் தொகுதி நிர்வாகிகள் காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வுக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டு 12 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

    கடந்த முறை காங்கிரஸ் 21 தொகுதியிலும், தி.மு.க. 9 தொகுதியிலும் போட்டியிட்டது. தற்போது தி.மு.க. வுக்கு கூடுதலாக 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட காலாப்பட்டு, நெல்லித்தோப்பு, திருபுவனை, வில்லியனூர், ராஜ்பவன், பாகூர் ஆகிய தொகுதிகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    காங்கிரசுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்காததை கண்டித்து மங்கலம் தொகுதி நிர்வாகிகள் நேற்று காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆய்வு குழு கூட்டம் வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், திக்விஜய்சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க.வுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிர்வாகிகளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், ரகளை நீடித்தது

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த துணை ராணுவத்தினரும் அங்கு விரைந்தனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரசார் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழகத்தில் அதிமுக, திமுக போட்டி போட்டு அறிவிக்கும் அறிவிப்புகள் புதுவை மக்களை ஏக்கத் தோடு பார்க்க வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    பூலோக ரீதியாக புதுவை- தமிழகம் பின்னி பிணைந்துள்ளது. தமிழகத்தின் ஒரு பகுதி புதுவையிலும், அது போல் புதுவை பகுதி தமிழகத்திலும் மாறி, மாறி அமைந்துள்ளது.

    யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் செல்லப்பிள்ளையாக கடந்த காலங்களில் திகழ்ந்தது.

    மத்திய அரசு 90 சதவீத மானியமாக நிதியை புதுவைக்கு வழங்கி வந்தது. இதனால் ஒரு காலகட்டத்தில் புதுவையில் பல்வேறு இலவச திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தினர்.

    ரங்கசாமி காங்கிரஸ் முதல்-அமைச்சராக இருந்தபோது முதியோர் பென்‌ஷன், அனைத்து ரே‌ஷன் கார்டுக்கும் இலவச அரிசி, பொங்கல் பொருட்கள், தீபாவளிக்கு இலவச துணி, பள்ளி மாணவர்களுக்கு காலை ரொட்டி, பால் வழங்கும் திட்டம், சைக்கிள், செருப்பு என பல சலுகைகள் அறிவித்து செயல்படுத்தப்பட்டது.

    2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் முதல்- அமைச்சராக ரங்கசாமி இருந்தபோது இலவச திட்டங்களை நடைமுறைப் படுத்தியதோடு, முதியோர், மாற்று திறனாளிகள் ஓய்வூதியத்தை உயர்த்தி, தேர்தல் அறிவிப்பான இலவச மிக்சி, கிரைண்டரும் வழங்கினார். புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் இத்திட்டங்களை பார்த்து ஏங்கும் நிலை இருந்தது.

    ஆனால் தற்போது இந்நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 2016-ல் அமைந்த காங்கிரஸ் அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய பல திட்டங்களை செயல்படுத்த முனைந்தது.

    ஆனால், முன்னாள் கவர்னர் கிரண்பேடி தடுத்துவிட்டதாக காங்கிரசார் புகார் கூறினர். மத்திய அரசிடமிருந்து நிதியும் குறைந்துவிட்டது. மானியமும் 23 சதவீதமாக குறைந்துவிட்டது.

    இதனால் நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல் படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தது. இதனால் கவர்னரை எதிர்த்து காங்கிரசார் பல கட்ட போராட்டங்களையும் நடத்தினர்.

    ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளில் முற்றிலுமாக நிலைமை தலை கீழாக மாறியது. சமீபத்தில் தமிழகத்தில் பொங்கலுக்கு அனைத்து ரே‌ஷன் கார்டுக்கும் ரூ.2 ஆயிரத்து 500, பொங்கல் பொருட்கள் வழங்கினர். இதனால் புதுவை எல்லை பகுதி மக்கள் ஏக்கத்தோடு பார்த்தனர்.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்த ரே‌ஷன்கார்டுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம், ரே‌ஷன்கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்தம் பருப்பு, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, பெட்ரோல் விலை ரூ.5, டீசல் ரூ.4 விலை குறைப்பு என சுமார் 500 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

    இதேபோல இன்று வெளியாகும் அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியிலும் இதற்கு இணையான இலவச அறிவிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது.

    புதுவையில் கடந்த சில ஆண்டாக ரே‌ஷன்கடைகளே மூடப்பட்டு கிடக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் கூட புதுவை மக்களால் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. போட்டி போட்டு அறிவிக்கும் அறிவிப்புகள் புதுவை மக்களை ஏக்கத் தோடு பார்க்க வைத்துள்ளது.

    பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் சந்தித்து பேசினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாரதீய ஜனதா, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்று உள்ளது.

    ஆனால் கூட்டணியில் பா.ம.க.வுக்கு தொகுதி ஒதுக்கவில்லை. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன் பா.ம.க. செயற்குழு கூடி புதுச்சேரியில் தனித்து போட்டியிட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

    முதற்கட்டமாக 15 தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பட்டியலையும் பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜ் தயாரித்து கட்சி மேலிடத்துக்கு அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில் பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜ் சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் பா.ம.க. வலுவான கட்சி. தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. ஆனால் தொகுதிக்கு 2 ஆயிரம் ஓட்டுகள் பிரியும். இதனை பாரதீய ஜனதா- என்.ஆர் . காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.

    புதுவையில் 4 தொகுதிகள் கேட்டு கடைசியாக 3 தொகுதி கேட்டோம். தொகுதி தரவில்லை என்றால் தனித்து போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜ் சந்தித்து பேசினார்.

    காரைக்கால் உள்ளே வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குட்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
    காரைக்கால்:

    சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அனைத்து வாக்குச்சாவடிகளையும், மாநில எல்லையிலும் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார்.

    இந்தநிலையில் அம்பகரத்தூர், கண்ணாப்பூர், அன்னவாசல் மற்றும் குளக்குடி ஆகிய மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அர்ஜூன் சர்மா நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரிடம் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை, காரைக்கால் உள்ளே வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
    ×