என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத பா.ஜனதாவிடம் கையேந்த வைத்து விட்டார்களே?- புதுவை அ.திமு.க.வினர் வேதனை

    கூட்டணி தயவால் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கும் ரங்கசாமி, இவ்விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதும் அ.தி.மு.க.வினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. இடம்பெற்றுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் தலைமை தாங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளை அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் பிரித்துக்கொள்வதில் பெரும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    பா.ஜனதா தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 4 தொகுதிகளை மட்டும் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்குவோம் என கூறுகின்றனர். இது புதுவை அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    குறைந்தபட்சம் 7 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுவையில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றது.

    பா.ஜனதா 18 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே டெபாசிட் பெற்றது. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் படுதோல்வியை சந்தித்தனர்.

    இதேபோல 2014-ல் பாராளுமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், 3-வது இடத்தை அ.தி.மு.க. பிடித்தது. சுமார் 1½ லட்சம் வாக்குகளை அ.தி.மு.க. பெற்றது.

    1977-ம் ஆண்டுக்கு பிறகு புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமையவில்லை. சொற்ப காலம் மட்டுமே அ.தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தது.

    ஆனாலும், புதுவையின் அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க.வுக்கு கணிசமான வாக்கு வங்கி இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆனால், கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜனதாவிடம் கையேந்த வைத்து விட்டார்களே? என அ.தி.மு.க.வினர் புலம்பு கின்றனர்.

    கூட்டணி தயவால் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கும் ரங்கசாமி, இவ்விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதும் அ.தி.மு.க.வினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேல்மட்ட தலைவர்கள் அமைப்பது கூட்டணி அல்ல.

    அடிமட்ட தொண்டர்கள் இணக்கமாக செயல்பட்டால்தான் வெற்றியை ஈட்ட முடியும் என்பதை பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என புதுவை அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×