என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
புதுச்சேரியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,290 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 52 பேருக்கு தொற்று உறுதியானது. 18 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 214 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 1,132 பேர், முன்கள பணியாளர்கள் 208 பேர், பொதுமக்கள் 1,104 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 32 ஆயிரத்து 603 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
புதுவையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. அதேபோல் உயிரிழப்பும் எப்போதாவதுதான் ஏற்பட்டது.
ஆனால் நேற்று 52 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 24 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் பாதிப்பு 2 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது சுகாதாரத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதேபோல் கடந்த காலங்களில் சோதனை பணிகளில் செவிலியர்கள், துணை செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் நடமாடும் முகாம்களை அமைத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெற நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் தற்போது அத்தகைய முகாம்கள் காணப்படுவதில்லை. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட சுமார் 112 ஊழியர் களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணிநீட்டிப்பு வழங்கவில்லை. இதனால் அவர்களும் பணிக்கு வரவில்லை. அவர்களுக்கு பணிநீடிப்பு வழங்குவதற்கான கோப்பும் அரசிடம் நிலுவையில் உள்ளது.
இத்தகைய குறைபாடுகளை களைந்து பணியாளர்களை முழுவீச்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினால் மட்டுமே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் தற்போது தேர்தல் காலம் என்பதால் பிரசாரம், பொதுக்கூட்டம், வாக்குசேகரிப்பு என மக்கள் கூட்டம் அலைமோதும். அப்போது தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது என்பது இயலாததாகவே மாறிவிடும்.
Next Story