என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாணரப்பேட்டையில் தனியார் நிறுவன மானேஜரின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை அலைன் வீதியை சேர்ந்தவர் ரவிகுமார் (வயது 46). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு வீட்டில் தூங்கினார். நள்ளிரவு திடீரென கார் உடைக்கும் சத்தம் கேட்டு ரவிகுமார் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது 2 பேர் காரின் பின் பக்க கண்ணாடி, வலது பக்க கண்ணாடி மற்றும் கார் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வதை கண்டு ரவிகுமார் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் விசாரித்த போது கார் கண்ணாடியை உடைத்தவர்கள் வாணரப்பேட்டை சித்தி விநாயகர் வீதியை சேர்ந்த அமரேஷ் மற்றும் முதலியார் பேட்டையை சேர்ந்த ஜெயராமன் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ரவிகுமார் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர்கள் குறித்து முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அமரேஷ் மற்றும் ஜெயராமன் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள். 

    புதுவைக்கு மாநில அந்துஸ்து வழங்குவதில் மத்திய பா.ஜனதா அரசும், மாநில காங்கிரஸ் அரசும் மக்களை ஏமாற்றி விட்டன என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் அ.ம.மு.க. வேட்பாளர் அறிமுகம், பிரசார பொதுக்கூட்டம் ரோடியர் மில் திடலில் நடந்தது.

    கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் 5.15-மணிக்கு மேடைக்கு வந்தார். அவர் வந்தவுடன் புதுவை தலைவர் வேல்முருகன் 10 நிமிடம் வரவேற்று பேசினார்.

    இதனைத்தொடர்ந்து தினகரன் பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவைக்கு மாநில அந்துஸ்து வழங்குவதில் மத்திய பா.ஜனதா அரசும், மாநில காங்கிரஸ் அரசும் மக்களை ஏமாற்றி விட்டன. 30 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன் என்று கூறி தி.மு.க.தான் புதுவை அரசு கவிழ பிள்ளையார் சுழி போட்டது.

    மாநில அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துணையாக இருக்கும் தி.மு.க.வும், பா.ஜனதாவுக்கு துணையாக இருக்கும் அ.தி.மு.க.வும் எந்தவித பதிலும் கூறாமல் வேடிக்கை பார்க்கின்றன. இவர்களை விரட்ட வேண்டும். அதற்கு அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    எங்கள் அணி வெற்றி பெற்றால் மாநில முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    5 நிமிடத்தில் பேச்சை முடித்துவிட்டு கிளம்ப நினைத்தபோது எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், தங்கள் வேட்பாளர்கள் பெயர்களையும் வாசியுங்கள் என கோ‌ஷமிட்டனர். இதனால் அந்த கட்சியின் பட்டியலையும் படித்து விட்டு, போதுமா? என கேட்டுவிட்டு அங்கிருந்து 5.30-க்கு புறப்பட்டார்.

    முக கவசத்சை கழற்றாமல் 5 நிமிடம் மட்டுமே அவர் பேசி சென்றதால் வேட்பாளர்கள் சோகமடைந்தனர். மாலை 5.40 மணிக்கே கூட்டமும் கலைந்து சென்றது. இசை குழுவினர் தொடர்ந்து கச்சேரியை தொடர்ந்தனர்.

    காங்கிரஸ் சார்பிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. கூட்டணி தொகுதி பங்கீட்டில் 15 தொகுதி பெற்றாலும், காங்கிரஸ் 14 தொகுதியில்தான் போட்டியிடுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    மொத்தமுள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தைகள் தலா ஒரு தொகுதி பிரித்துக் கொண்டன.

    இதில் காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் ஏனாம் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மனுதாக்கல் இறுதி நாளில் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என காங்கிரசார் காத்திருந்தனர். ஆனால் கட்சித்தலைமை யாரையும் அறிவிக்கவில்லை.

    காங்கிரஸ் சார்பிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. கூட்டணி தொகுதி பங்கீட்டில் 15 தொகுதி பெற்றாலும், காங்கிரஸ் 14 தொகுதியில்தான் போட்டியிடுகிறது. வெளியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வருபவர்களுக்கு சீட் வழங்கியதால்தான் கட்சி சரிவை சந்தித்தது.

    ஏனாமில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லாடி கிருஷ்ணாராவுக்கு காங்கிரஸ் அமைச்சர் பதவி அளித்தது. அதன்பின் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மல்லாடி ஆதரவாளர்களாக மாறினர். அவர் தற்போது என்.ஆர்.காங்கிரசுக்கு சென்று விட்டார்.

    இதனால் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் கூடாரம் மொத்தமாக காலியாகி விட்டது. தேர்தலில் போட்டியிட வேட்பாளர் யாரும் இல்லை. இதனால் ஏனாம் தொகுதியில் போட்டியிடும் முடிவை காங்கிரஸ் கட்சி கடைசிநேரத்தில் கைவிட்டுள்ளது.

    புதுவை சட்டமன்ற தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய பொது, காவல் மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாவட்டத்தில் சுமார் 1,324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 200 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்க 220 ஊழியர்களை மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க், துணை மாவட்ட தேர்தல் அதிகாரி சக்திவேல் தேர்ந்தெடுத்துள்ளனர்.

    புதுவை சட்டமன்ற தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய பொது, காவல் மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    இவர்களுக்கு வருகிற 22, 23 தேதிகளில் அலுவல் பணி பாதிக்காத வகையில் மாலை நேரத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த 220 நுண்பார்வையாளர்களும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பொதுப் பார்வையாளர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவார்கள்.
    புதுச்சேரி மாவட்டத்தில் பட்டாசு வெடிமருந்து தயாரிப்பதற்கும், வைத்துக்கொள்வதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை துணை மாவட்ட தேர்தல் அதிகாரி சக்திவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி வெடிப்பொருட்கள், வெடி மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், பொது அமைதி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதுச்சேரி மாவட்டத்தில் பட்டாசு வெடிமருந்து தயாரிப்பதற்கும், வைத்துக்கொள்வதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

    அதன்படி வருகிற 23-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையும் மற்றும் மே 1-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையும் இந்த தடை அமலில் இருக்கும். இதை மீறுவோரின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். உரிய சட்ட விதிமுறைகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கைப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் போட்டியிட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்த பட்சமாக கதிர்காமம் தொகுதியில் 9 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தல் அடுத்த (ஏப்ரல்) மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என்று பணியில் இறங்கினார்கள்.

    இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதற்கு அடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படவில்லை.

    அதன்பின் 15-ந்தேதி முதல் பல்வேறு அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.

    இதனால் கடைசி நாளான நேற்று சுயேச்சைகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். காலை 10.30 மணிமுதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்வதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பின்னரே வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.

    கதிர்காமம் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் கணேசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சதானந்தம், தே.மு.தி.க. சார்பில் மோட்சராஜன், சுயேச்சையாக பிரேமானந்த் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்திராநகர் தொகுதியில் பா.ம.க. சார்பில் வடிவேலு, தே.மு.தி.க. சார்பில் ஏழுமலை, மக்கள் நீதி மய்யம் சார்பில் சக்திவேலு, சுயேச்சையாக கார்த்திகேயன் மனு தாக்கல் செய்தனர்.

    தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரனும், அ.ம.மு.க. சார்பில் தமிழ்செல்வமும், நாம் தமிழர் கட்சி சார்பில் தேவநாதனும், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சண்முகமும், தே.மு.தி.க. சார்பில் நரசிங்கமும், சுயேச்சையாக அனுசுயா, மணிகண்டன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் (மாற்று வேட்பாளர்) மல்லாடி உதயலட்சுமியும், சுயேச்சையாக மல்லாடி உதயலட்சுமி, கோலப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், கோலப்பள்ளி பாரதி, கோலப்பள்ளி லீலாவதி, பிரபாவதி, சூர்ய சந்திர சேகரா, துர்கா பிரசாத் பொம்முடி, கல்லா வெங்கட ரத்னம், சூரிமில்லி சுப்பாராவ், கவுதம் ராம்ஜி, கோலப்பள்ளி ரத்னம், அ.ம.மு.க. சார்பில் ரமே‌‌ஷ் பாபு ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    நெல்லித்தோப்பு தொகுதியில் மை இந்தியா பார்ட்டி சார்பில் அறிவுமணியும், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பசுபதியும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் அனிபர்வும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகமும், புதுச்சேரி வளர்ச்சி கட்சி சார்பில் ஜெனோவியாவும், சுயேச்சையாக முருகன், டில்லிபாபு, சிவசந்தோ‌‌ஷ், பிரித்திவிராஜன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    அரியாங்குப்பம் தொகுதிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தெரேசாவும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் முகமது காசிமும், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்துருவும், தே.மு.தி.க. சார்பில் லூர்துசாமியும், சுயேச்சையாக குமாரவேல், கார்த்திக் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மணவெளி தொகுதியில் குமரகுரு சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

    லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் வேலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ‌ஷாஜகான் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ரெட்டியார்பாளையம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அங்கு போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாமுவேலுவும் மனு தாக்கல் செய்தார். மாகியில் ஜானகி என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    காரைக்கால் நிரவி-திருமலைராயன்பட்டினம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மனோகரனும், சுயேச்சையாக ஸ்ரீதரும், திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணனும், பாஜ.க. சார்பில் ராஜசேகரனும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. நேற்று மட்டும் 218 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிட ஒட்டுமொத்தமாக 485 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதில் அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் போட்டியிட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்த பட்சமாக கதிர்காமம் தொகுதியில் 9 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
    புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து இருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் மே 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். 

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்து மனுத்தாக்கல் செய்யத் தொடங்கியபோதும், ரங்கசாமி வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில், ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால், வேட்பாளர்கள் பெயரை ரங்கசாமி அறிவிக்காமல் இருந்தார். 

    அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்து மனுத்தாக்கல் செய்யத் தொடங்கியபோதும், ரங்கசாமி மவுனமாகவே இருந்தார். அதேசமயம், என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் பலர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை ரங்கசாமி அறிவித்துள்ளார். வேட்பாளர்கள் விவரம்:

    1. திருபுவனை - கோபிகா
    2. மங்கலம் - ஜெயகுமார்
    3. வில்லியனூர்-சுகுமாறன்
    4.உழவர்கரை - பன்னீர்செல்வம்
    5.கதிர்காமம் - ரமேஷ்
    6.இந்திராநகர் - ஆறுமுகம்
    7. தட்டாஞ்சாவடி -ரங்கசாமி
    8. ராஜ்பவன் - கே.லட்சுமி நாராயணன்
    9. அரியாங்குப்பம் - தட்சிணாமூர்த்தி
    10. ஏம்பலம் - லட்சுமிகாந்தன்
    11.நெட்டபாக்கம் - ராஜவேலு
    12. பாகூர் - தனவேலு
    13.நெடுங்காடு - சந்திர பிரியங்கா
    14. காரைக்கால் வடக்கு - திருமுருகன்
    15.மாஹே - அப்துல் ரகுமான்
    16. ஏனாம் - ரங்கசாமி.
    மது குடித்ததை மனைவி கண்டித்ததால் வெல்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சொக்கநாதன் பேட்டை தெற்கு அணைக்கரை வீதியை சேர்ந்தவர் குமார் (வயது39). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் குடி பழக்கத்துக்கு அடிமையான குமார் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி புவனேஷ்வரி தட்டிக்கேட்டார். அதற்கு அவர் பதில் ஏதும் பேசாமல் வீட்டின் கழிவறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார்.

    வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மூத்த மகன் கழிவறையின் மேற்புறம் உள்ள திறந்தவெளியில் பார்த்த போது குமார் துப்பட்டாவால் அங்கிருந்த இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிகொண்டிருந்தார்.

    தூக்கில் இருந்து மீட்டு புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புவனேஸ்வரி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து இருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்தது.

    ஆனால், கடந்த சில நாட்களாக புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 52 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று இதன் தாக்கம் அதிகரித்தது. 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுவை முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. அங்குள்ள பேராசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து மாணவிகள் கல்லூரிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    புதுவையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.2 கோடி கட்டுக்கட்டாக தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் ஆகியவை வினியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், கலால்துறையினர், உள்ளூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாநில எல்லைகளிலும் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பாபு, ஏழுமலை, காவலர் வெங்கடாஜலபதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று எல்லைப்பிள்ளைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்திராகாந்தி சிக்னலில் இருந்து தந்தை பெரியார் நகர் வழியாக சென்ற ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் ஒரு மினி வேனை பேட்ரிக் பள்ளி அருகே மடக்கினர். அந்த மினி வேன் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது எழுதப்படவில்லை.

    இதனால் சந்தேகத்தின் பேரில் அந்த வேனை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது அதில் இருந்த 4 பெட்டிகளில் ரூ.500, 200, 100 என கட்டுக் கட்டாக ரூ.2 கோடி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மினி வேனில் வந்த காவலர் உள்பட 3 பேரிடம் விசாரித்தனர்.

    விசாரணையில் இந்திராகாந்தி சிக்னலில் உள்ள தனியார் வங்கியில் இருந்து பணம் கொண்டு வருவதற்கான ஆவணம் மட்டுமே உள்ளது. பணம் எங்கு செல்கிறது என்பதற்கான சான்று ஏதும் இல்லை. பணம் கொண்டு செல்ல உறுதி அளிக்கும் கடிதத்திலும் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததாக தெரிகிறது. பணம் கொண்டு செல்வதற்கான தேர்தல் துறையின் அனுமதி கடிதமும் இல்லை. இதையடுத்து ரூ.2 கோடியுடன் மினி வேன் பறிமுதல் செய்யப்ட்டது. இதுதொடர்பாக மேல் விசாரணை செய்ய வருமான வரித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
    கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் பாரம்பரிய சுற்றுலா வளாக வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் இன்னும் கொரோனா தொற்றில் இருந்து வெளியே வரவில்லை. கொரோனா நம்மை விட்டு விலகவில்லை. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    தடுப்பூசி போடுவதால் முற்றிலும் கொரோனா வராது என்று சொல்ல முடியாது. அவ்வாறு வந்தால் அதன் வீரியம் குறைவாக இருக்கும். எனவே தான் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

    கொரோனா குறித்து மக்கள் பயப்பட வேண்டாம். நிச்சயமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும். மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×