search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட 485 பேர் வேட்புமனு தாக்கல்

    அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் போட்டியிட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்த பட்சமாக கதிர்காமம் தொகுதியில் 9 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தல் அடுத்த (ஏப்ரல்) மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என்று பணியில் இறங்கினார்கள்.

    இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதற்கு அடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படவில்லை.

    அதன்பின் 15-ந்தேதி முதல் பல்வேறு அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.

    இதனால் கடைசி நாளான நேற்று சுயேச்சைகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். காலை 10.30 மணிமுதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்வதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பின்னரே வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.

    கதிர்காமம் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் கணேசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சதானந்தம், தே.மு.தி.க. சார்பில் மோட்சராஜன், சுயேச்சையாக பிரேமானந்த் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்திராநகர் தொகுதியில் பா.ம.க. சார்பில் வடிவேலு, தே.மு.தி.க. சார்பில் ஏழுமலை, மக்கள் நீதி மய்யம் சார்பில் சக்திவேலு, சுயேச்சையாக கார்த்திகேயன் மனு தாக்கல் செய்தனர்.

    தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரனும், அ.ம.மு.க. சார்பில் தமிழ்செல்வமும், நாம் தமிழர் கட்சி சார்பில் தேவநாதனும், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சண்முகமும், தே.மு.தி.க. சார்பில் நரசிங்கமும், சுயேச்சையாக அனுசுயா, மணிகண்டன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் (மாற்று வேட்பாளர்) மல்லாடி உதயலட்சுமியும், சுயேச்சையாக மல்லாடி உதயலட்சுமி, கோலப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், கோலப்பள்ளி பாரதி, கோலப்பள்ளி லீலாவதி, பிரபாவதி, சூர்ய சந்திர சேகரா, துர்கா பிரசாத் பொம்முடி, கல்லா வெங்கட ரத்னம், சூரிமில்லி சுப்பாராவ், கவுதம் ராம்ஜி, கோலப்பள்ளி ரத்னம், அ.ம.மு.க. சார்பில் ரமே‌‌ஷ் பாபு ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    நெல்லித்தோப்பு தொகுதியில் மை இந்தியா பார்ட்டி சார்பில் அறிவுமணியும், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பசுபதியும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் அனிபர்வும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகமும், புதுச்சேரி வளர்ச்சி கட்சி சார்பில் ஜெனோவியாவும், சுயேச்சையாக முருகன், டில்லிபாபு, சிவசந்தோ‌‌ஷ், பிரித்திவிராஜன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    அரியாங்குப்பம் தொகுதிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தெரேசாவும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் முகமது காசிமும், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்துருவும், தே.மு.தி.க. சார்பில் லூர்துசாமியும், சுயேச்சையாக குமாரவேல், கார்த்திக் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மணவெளி தொகுதியில் குமரகுரு சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

    லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் வேலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ‌ஷாஜகான் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ரெட்டியார்பாளையம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அங்கு போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாமுவேலுவும் மனு தாக்கல் செய்தார். மாகியில் ஜானகி என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    காரைக்கால் நிரவி-திருமலைராயன்பட்டினம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மனோகரனும், சுயேச்சையாக ஸ்ரீதரும், திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணனும், பாஜ.க. சார்பில் ராஜசேகரனும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. நேற்று மட்டும் 218 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிட ஒட்டுமொத்தமாக 485 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதில் அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் போட்டியிட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்த பட்சமாக கதிர்காமம் தொகுதியில் 9 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
    Next Story
    ×