என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • வெடி விபத்து நடந்த ஆலை உரிமம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் ரகு(வயது40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆலை உரிமையாளர் ரகு மற்றும் அவரது உறவினர் முகேஷ்(20) ஆகியோர் நேற்று இரவு விதிகளை மீறி பட்டாசு ஆலை வெளியே பேன்சி ரக வெடிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    அப்போது மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கின. இந்த வெடி விபத்தில் ரகு, முகேஷ் ஆகியோர் உடல் கருகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்து நடந்த ஆலை உரிமம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார்.
    • ஏமாற்றமடைந்த ஈஸ்வரன் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 41). பா.ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசுத்துறை தொடர்பு பிரிவு செயலாளரான இவர் ஜவுளி வியாபாரமும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதன் மூலம் அவர் ஏராளமான சொத்துக் களை வாங்கி குவித்துள்ளார்.

    இந்நிலையில் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவரை சந்தித்தார். இவரும் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார். அவர் மூலம் ஏராளமான நிலங்களை விற்பனை செய்துள்ளார்.

    இதற்கிடையே ஈஸ்வரனிடமும் எதிர்காலத்தில் நல்ல விலைக்கு போகும் ஒரு இடம் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். அதனை வாங்கிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார். அதனை நம்பிய ஈஸ்வரன், சத்தியராஜிடம் இரண்டு தவணைகளாக ரூ.51 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் சத்தியராஜ் கூறியபடி நிலம் எதுவும் வாங்கித் தரவில்லை.

    நண்பர் என்பதால் சில காலம் பொறுத்திருந்தார். இருந்தபோதிலும் பணத்தையும் திருப்பிச் செலுத்த மறுத்ததோடு ஈஸ்வரனுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் போலீசார் சத்தியராஜ் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். நில மோசடியில் பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊராட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க. நிர்வாகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்த தேர்தலில் வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வேலானூரணி ஊராட்சி யில் ஊராட்சி மன்ற தலைவ ராக அ.தி.மு.க.வை சேர்ந்த அங்காளஈஸ்வரி உள்ளார்.இந்த நிலையில் வேலா னூரணி ஊராட்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேலானூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் உலக தேவன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பூமிநாதன் ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்த தேர்தலில் வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பூமிநாதன் வேலானூரணி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார். இந்த நிகழ்ச்சியில் நரிக்குடி ஒன்றிய (பொறுப்பு) தலைவரும், நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செய லாளருமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன், வேலாணூ ரணி ஊராட்சி மன்ற தலைவர் அங்காள ஈஸ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள், ஊராட்சி ஊழி யர்கள் மற்றும் நிர்வாகிகள், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
    • பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம் பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றித்திற்குட் பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.106.36 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி பின்புறம் தேசிய நெடுஞ் சாலையிலிருந்து துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரையிலான சாலை பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக் டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தினை பார் வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயிற்சி பெறுவர் களின் எண்ணிக்கை, அவர் களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, பட்டம் புதூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் உறிஞ்சிக்குழியுடன் வடி கால் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

    மேலும், கோட்டநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ. 27.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடங் களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு பயி லும் மாணவர்களுடன் கலந் துரையாடினார்.

    பின்னர், ராமக்குடும்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடத்தை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளாச்சி முகமை) தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வீட்டில் பதுக்கிய வாலிபரை கைது செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்சுழி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையி லான தனிப்படை போலீசார் தமிழ்பாடி பகுதியிலுள்ள ஒத்தவீடு பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.அப்போது ஆறுமுகம் (வயது34) என்பவரது வீட்டில் சோதனை நடத்தி னர். அங்கு 160 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஆறுமு கத்தை கைது செய்தனர். இதையடுத்து திருச்சுழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்துள்ளனர்.
    • மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக கிருஷ்ண குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக சிதம்பர பாரதி (ஆவியூர்), சேகர் (குரண்டி), ஜெகன் (செங்குன்றாபுரம்), அய்யனார் (அதிவீரன் பட்டி), கார்த்திகேயன் (விருதுநகர்), திலீபன் மஞ்சுநாத் (சிவகாசி ரிசர்வ் லைன்).

    தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளராக தனுஷ் எம்.குமார் எம்.பி. நியமனம் செய்யப் பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக தங்கம் ரவி கண்ணன் (ஸ்ரீவில்லி புத்தூர்), பாபு (அருப்புக் கோட்டை), பாசறை ஆனந்த் (ராஜபாளையம்), கார்த்திக் (ராஜபாளையம்), கே.கார்த்திக் (வெம்பக்கோட்டை).மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    • மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.
    • குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    இன்றைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் பாலியல் தொல்லைகளால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

    இவர்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் இதற்காக அமைக்கப்பட்ட போக்சோ நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெறலாம்.

    இங்கு வரும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் 30 நாட்களுக்குள் சாட்சியம் பெறப்பட்டு வழக்கை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.

    நாடு முழுவதும் மாவட்டம் தோறும் போக்சோ கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்சோ கோர்ட்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த ஆண்டு நீதிபதியாக பூரணஜெய் ஆனந்த் பொறுப்பேற்றார். அப்போதிருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் போக்சோ வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்படுகிறது. சாட்சிகளின் உண்மை தன்மை மூலம் வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

    • பேட்டரியால் இயங்கும் மின்கல வண்டிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்.
    • குப்பைகளை எளிதில் சேகரித்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திலுள்ள ஊராட்சி மன்றத்தலைவர் தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ஊராட்சி களின் பயன்பாட்டிற்கு பேட்டரியால் இயங்கும் மின்கல வண்டிகளை நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி (கிராம ஊராட்சி) வழங்கி னார்.

    இந்த வாகனங்களுக்காக 70 சதவீத பங்குத்தொகை தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தின் மூலமாக வும், மீதமுள்ள 30 சதவீத பங்குத்தொகை 15-வது நிதிக்குழு மானியத்திலும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 2023-24 நிதியாண்டிற்காக நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள நரிக்குடி, மானூர், புல்வாய்க் கரை, சேதுபுரம், வேளானூரணி, கட்டனூர், வீரசோழன், மினாக்குளம் மற்றும் பூமாலைப்பட்டி உள்பட 14 ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்றத்தலைவர்களின் விருப்பத்திற்கிணங்க ஊராட்சிகளின் பயன்பாட்டிற்காக சுமார் 17 மின்கல வண்டிகள் வழங்கப்பட உள்ளது.

    மேலும் நரிக்குடி ஊராட்சிக்கு 2 பேட்டரி வண்டிகளும், அதிகபட்சமாக வீரசோழன் ஊராட்சிக்கு 3 பேட்டரி வண்டிகளும் வழங்கப்பட உள்ளது. இதனால் ஊராட்சி களிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று குப்பைகளை எளிதில் சேகரித்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இந்த நிகழ்ச்சியின் போது ஊராட்சி செயலர்கள், பி.டி.ஓ., உமா சங்கரி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உள்பட யூனியன் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ராஜபாளையத்தில் ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

    ராஜபாளையம்

    ராமசுப்பிரமணிய ராஜா 88-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தது. ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, அவரது மகன் பி.வி.அபினவ் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அபினவ வித்யாதீர்த்த பாரதீ பாடசாலையில் அமைந்துள்ள ராமசுப்பிரமணிய ராஜாவின் திருஉருவ சிலைக்கு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்து நினைவு ஜோதி ஓட்டத்தை வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார்.

    நினைவு ஜோதியை ராம்கோ டெக்ஸ்டைல் பிரிவு ஊழியர்கள் ஏந்தி வந்தனர். இந்த ஓட்டம் சாரதம்பாள் கோவில் ராமசுப்பிரமணிய ராஜா இல்லமான ராமமந்திரம் வழியாக ராஜபாளையம் மில்ஸ் வந்தடைந்தது. அங்கு நினைவு ஜோதியை வெங்கட் ராமராஜா ஸ்தாபனம் செய்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நேற்று முன்தினம் டி.எம்.கிருஷ்ணா இசைநிகழ்ச்சியும், நேற்று சஞ்ஜய் சுப்பிரமணியன் இசை நிகழ்ச்சியும் நடந்தன.

    • விருதுநகரில் நகராட்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் நகராட்சி, அண்ணாமலையம்மாள் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கல்லூரி சாலையில் ரூ.200 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அறிவுத்திறன் பயிற்சி மையம்.

    நமக்கு நாமே திட்டம் மூலம் வி.என்.பி.ஆர் நகராட்சி பூங்காவில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் தயாளன் ராஜேஷ் காலனியில் உள்ள பூங்காவினை ரூ.44 லட்சம் மதிப்பிலும், லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை ரூ.40 லட்சம் மதிப்பிலும் மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பாவாலி சாலையில் உள்ள முஸ்லீம் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பு கட்டடம் அமையவுள்ள இடத்தியும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
    • விருதுநகர் கலெக்டர் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவி களுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாமினை, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை யில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    பின்னர், இம்முகாமின் மூலம் 13 மாணவர்கள் அரசு தொழில்பயிற்சி மையத்திலும், 2 மாணவர்கள் அரசன் கணேசன் தொழில் நுட்ப கல்லூரியிலும், 10 மாணவர்கள் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 4 மாணவர்கள் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியிலும், 13 மாணவர்கள் ஏ.ஏ.ஏ. பொறி யியல் கல்லூரியிலும், 22 மாணவர்கள் ஜெய் சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் என மொத்தம் 64 மாணவர்க ளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வ தற்கான சேர்க்கை ஆணை களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு உலகின் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக திறன்களை வளர்ப்பதற்கும், பள்ளி மாணவர்களுக்கு இந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும், புதுமைப் பெண் என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதந் தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையும், உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலம் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் நமது விருதுநகர் மாவட்டம் 12-ம் வகுப்பில் அதிக தேர்ச்சி விகிதங்கள் பெற்று கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள 7226 மாணவர்களும் 100 சதவீதம் உயர்கல்விக்கு சேர வேண்டும் என்ற நோக்கத் தில் அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களில் முகாம் கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, ராஜ பாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சிவகாசி பகுதிகளில் இது வரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 193 மாணவ, மாணவிகளில் 136 மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழி காட்டுதல் முகாம் நடைபெற்றது.

    இந்திய அளவில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதன்மையிடத்தில் உள்ளது. அதிகமான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெற்று, தமிழகத்திற்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தர வேண்டும்.

    இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் தகுதிக்கேற்ப அவர்களின் திறன் அடிப்படையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் விவேகன்ராஜ், வட்டாட்சியர், அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் நடந்தது.
    • மாணவர்கள் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சுகாதார மேற்பார்வையாளர் பேசினார்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 26-ந்தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் கல்லூரியில் அனுசரிக்கப்பட்டது. விழாவில் விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் வீரபத்திரன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக விழாவுக்கு தலைமை தாங்கினார். முதல்வர் நந்தகுமார் கலந்து கொண்டார்.

    சுகாதார மேற்பார்வை யாளர் வீரபத்திரன் பேசுகையில், மாணவர்கள் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் மூளையை பாதித்து உங்களது நினைவை மாற்றுகிறது. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

    சுகாதாரம் சாரா மேற்பார்வையாளர் பாண்டியன் பேசுகையில், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனக்குழப்பம் ஏற்பட்டு தானே பேசிக்கொள்வது. எதைக்கண்டாலும் பயப்படுவது போன்றவை ஏற்படுகிறது. சிறுநீரகம். கல்லீரல் பாதிப்பு போன்ற வையும், இதயம் சார்ந்த பாதிப்பும் ஏற்படுகிறது. முன்னதாக மாணவர்கள் பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழாவில் மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வடமலாபுரம் சுகாதார ஆய்வாளர் விக்ணேஷ் மற்றும் எம்.புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஷேக் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×