search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textile Trade"

    • முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார்.
    • ஏமாற்றமடைந்த ஈஸ்வரன் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 41). பா.ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசுத்துறை தொடர்பு பிரிவு செயலாளரான இவர் ஜவுளி வியாபாரமும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதன் மூலம் அவர் ஏராளமான சொத்துக் களை வாங்கி குவித்துள்ளார்.

    இந்நிலையில் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவரை சந்தித்தார். இவரும் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார். அவர் மூலம் ஏராளமான நிலங்களை விற்பனை செய்துள்ளார்.

    இதற்கிடையே ஈஸ்வரனிடமும் எதிர்காலத்தில் நல்ல விலைக்கு போகும் ஒரு இடம் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். அதனை வாங்கிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார். அதனை நம்பிய ஈஸ்வரன், சத்தியராஜிடம் இரண்டு தவணைகளாக ரூ.51 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் சத்தியராஜ் கூறியபடி நிலம் எதுவும் வாங்கித் தரவில்லை.

    நண்பர் என்பதால் சில காலம் பொறுத்திருந்தார். இருந்தபோதிலும் பணத்தையும் திருப்பிச் செலுத்த மறுத்ததோடு ஈஸ்வரனுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் போலீசார் சத்தியராஜ் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். நில மோசடியில் பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×