என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது.
    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) வருடாந்திர பயிற்சி முகாம் 10 நாட்கள் நடக்கிறது. 

    இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி,  திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். மேல்நிலைப்பள்ளி, கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, வி.வி.டி. மேல்நிலைப்பள்ளி, மணப்பாடு செயின்ட் ஜோசப்  மேல்நிலைப்பள்ளி, விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாகலாபுரம் எஸ்.ஏ.என். மேல்நிலைப்பள்ளி, ஆறுமுகநேரி கே.ஏ. மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவ, மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றனர். 

    இவர்களுக்கு தூத்துக்குடி என்.சி.சி. கமாண்டிங் ஆபிசர் சுனில் உத்தம் பயிற்சி அளிக்கிறார். இந்த பயிற்சி முகாமின் தொடக்க விழா நடந்தது. பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி ஆகியோர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர். 

    இதில் அடிப்படை உடற்பயிற்சி, ஆயுதங்கள் கையாளும் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், மேப் ரீடிங், டிரில் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 
    மேலும் தேசிய ஒருமைப்பாடு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பி.எஸ்.ஆர். கல்லூரி நிர்வாகம் சார்பில் தங்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பயிற்சியின் முடிவில் முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்க ளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

    பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை பி.எஸ்.ஆர். கல்லூரி நிர்வாகம், தேசிய மாணவர் படையின் இணை அதிகாரி மாதவன் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர். 
    வத்திராயிருப்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளைக்கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை, புலி, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன. 

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி புலிகள் அதிகம் உள்ள பகுதி என கண்டறியப்பட்டு கடந்தவருடம் இப்பகுதியினை மேகமலை புலிகள் சரணாலயமாக மத்திய அரசு அறிவித்தது.

    இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பை சுற்றியுள்ள மலையடிவார கிராமப்பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடைமலை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கிடைமலை மாடுகளை இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தான் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள். 

    ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மேய்ச்சலுக்கு கிடை மலை மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்து செல்லக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் வனத்துறையினர் மலை மாடுகளை மலைப்பகுதிகளில் மேய்க்க அனுமதிப்பதில்லை. 

    அப்படி மீறி சென்றாலும் மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்களை கைது செய்து அபராதம் விதித்து வருவதால் வனத்துறையினரும், பொதுமக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இந்தநிலையில் கிடை மலை மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் அனுமதிக்கவேண்டும், கோர்ட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் முன்பு மாடுகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 

    இந்த ஆர்ப்பாட்டத்தினால் வத்திராயிருப்பில் இருந்து அர்ச்சுனாபுரம் செல்லும் சாலை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிக்குமார் தலைமை தாங்கினார். 

    தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்தையா, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சுந்தரபாண்டியன், மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தின் நிர்வாகிகள் சுரேஷ்குமார், ராதாகிருஷ்ணன், மாரிமுத்து, கருப்பையா, முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி மேல்முறையீட்டு மனுக்களை வழங்கலாம் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் கூறினார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழக அரசின் ஆணையின்படி பொது நகைக் கடன் தள்ளுபடி திட்டம் 2021 - ன் கீழ் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகள் பட்டியல் https://virudhunagar.nic.in என்ற வலை தளத்திலும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வலைதளமான www.vrdccbank.in-லும் 8.4.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த அரசாணையின்படி தள்ளுபடிக்கு தகுதியான பட்டியல் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 8.4.2022 முதல் 7.5.2022 வரை ஒருமாத காலத்திற்குள் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  செந்தில்குமார் தெரி வித்துள்ளார்.
    ராஜபாளையம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறி இருப்பதாவது:-

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனையை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கும்,  சுகாதாரத்துறை அமைச்சருக்கும், இதற்கு பரிந்துரை செய்த  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருக்கும்,

     தொழில்துறை அமைச்சருக்கும் ராஜபாளையம் தொகுதி மக்கள் சார்பாகவும் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

    மேலும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை  மருத்து வனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட இருப்பதால் இனிவரும் காலங்களில் இருதய அடைப்பு மற்றும்  அவசர மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அல்லது பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலை இருக்காது.  

    இதனால் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழை, எளிய பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள். மேலும் உயிர் இழப்புகளும் எதுவும் ஏற்படாது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    பள்ளி மாணவிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் அல்லல்பட்டியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிளாஸ்டிக் கம்பெனியில் பணிபுரிகிறார்.

    அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு 14 வயது, 2வது மகளுக்கு 13 வயது. முதல் மகள் 9ம் வகுப்பும், 2வது மகள் 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் விருதுநகரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.

    இந்த நிலையில் 9ம் வகுப்பு படிக்கும் தொழிலாளியின் மகள் பள்ளியில் வகுப்பை கவனிக்காமல் சோகமாக இருந்திருக்கிறார். இதனை கவனித்த வகுப்பு ஆசிரியை அவரது நோட்டை வாங்கி பார்த்திருக்கிறார். அப்போது அதில், “இனியும் வாழக்கூடாது” என எழுதி இருந்தார்.

    அதுகுறித்து ஆசிரியை, மாணவியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் தனக்கு வாழ விருப்பம் இல்லை என தெரிவித்திருக்கிறார். என்ன காரணம் என்று மாணவியிடம் ஆசிரியை கேட்டுள்ளார். அப்போது தனது தந்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியை பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். மாணவியின் நிலை கண்டு மனம் வருந்திய அவர்கள், அதுபற்றி போலீசில் புகார் செய்ய முடிவு எடுத்தனர். மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த அவலம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

    மாணவியின் பெற்றோர் இருவரும் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையிலேயே வீடு திரும்புவார்களாம். அக்காள், தங்கை இருவரும் சேர்ந்தே பள்ளிக்கு சென்று வந்துள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி உடல்நலம் பாதித்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நாட்களில் அவரது தந்தை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பாராம். அப்போது அவர் மகள் என்றும் பாராமல் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்திருக்கிறார்.

    அதுமட்டுமின்றி தினமும் இரவில் மாணவியின் தாய் மற்றும் தங்கை ஆகிய இருவரும் தூங்கிய பிறகு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் அடித்து பணிய வைத்துள்ளார்.

    மேலும் இதுபற்றி யாரிடமாவது கூறினால் தாய் மற்றும் தங்கையை கொன்று விடுவேன் என மிரட்டி இருக்கிறார். தந்தையின் மிரட்டலுக்கு பயந்து மாணவியும் அவரது செயல் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை தந்தையின் பாலியல் தொல்லையால் மாணவி அவதிக்குள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில்தான் மாணவியின் செயல்பாட்டை கவனித்த வகுப்பு ஆசிரியை, அவரிடம் விசாரித்தபோது மாணவிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்த தகவல் வெளியானது.

    மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டப்பிரிவு மற்றும் கொலைமிரட்டல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    பள்ளி மாணவிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    ஸ்ரீவில்லிபுத்தூரில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாரதி முன்னிலை வகித்தார்.

    மருந்தாளுநர்  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டய மருந்தாளுநர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் அரசாணை எண்.5ஐ ரத்து செய்ய வேண்டும். மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்துக் கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்எ ன்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். 

    இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார், சுந்தரேசன், இணைச் செயலாளர்கள் பலராமர், பரோசுரின், மற்றும் கமலாதேவி உள்ளிட்ட மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர்.
    விருதுநகர் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர் பலியானார். இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஊழியர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டனர். நாககன்னியாபுரத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி (வயது 20) என்பவர் வேனை ஓட்டினார்.

    காலை 6 மணியளவில் விருதுநகர் சாத்தூர் 4 வழிச்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது. கோவில் புலிக்குத்தி விலக்கு பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    வேனில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர்‌. உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த வல்லநாட்டைச் சேர்ந்த பட்டு ராஜா (28), டிரைவர் ஆசை தம்பி, மூகைதீன் (32), பிரசாத் (37), பால்ராஜ் (55), செல்லச்சாமி (70) உள்பட 11 பேரை மீட்டு விருதுநகர், சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் பலத்த காயமடைந்த பட்டு ராஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அழுகிய நிலையில் வாலிபர் வீட்டில் பிணமாக கிடந்தார்.
    சாத்தூர்

    சாத்தூர் பெருமாள் கோவில் வடக்குமாட வீதியை சேர்ந்த ஞானகுரு என்பவரின் மகன் மருதுபாண்டி (வயது 26), திருமணமாகவில்லை.  இவர் அங்குள்ள மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.  

    இவரது வீடு கடந்த 2 நாட்களாக உள்புறமாக பூட்டிக்கிடந்தது. இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து இன்று காலை கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேக மடைந்த அப்பகுதி மக்கள் உடனே சாத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது மருதுபாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.  அவரது உடல் அழுகி இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மருதுபாண்டி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டுக்கு முன்பு குவிந்தனர்.

    பின்னர் காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சாமி அருளை பெற்றனர்.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    இதையும் படிக்கலாம்...‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ வார்த்தைகளை கொண்டு உருவான மகா மந்திரம்
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் 

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் , நெசவு தொழிலாளி.இவரது மனைவி சாந்தி (வயது39). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
    இந்த நிலையில்  பாலமுருகன் தனக்கு குழந்தை இல்லாததற்கு மனைவிதான் காரணம் என்பது போல் பேசி வந்துள் ளார். இதனால் கணவன்&-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த 23ந்தேதி பாலமுருகன் தென்காசி திருமலைபகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து மனைவியை போனில் அழைத்த போது அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அவர் தொடர்புகொண்டு பேசியபோது சாந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக கிடப்பது தெரிய வந்தது.இதுபற்றிய புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பாலமுருகனை கைது செய்தனர்.


    சாத்தூரில் குடும்ப பிரச்சனை காரணமாக ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில் நிலையம் அருகே ஒரு இளம்பெண் நேற்று முன்தினம் மாலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி ரெயில்வே போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் இறந்தவர் குறித்து விவரம் தகவல் கிடைக்காததால் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் இரவுநேர காவலராக பணிபுரியும் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் சபர்மதி (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் பி.காம் பட்டதாரி ஆவார்.

    சீனிவாசன் தனது மகள் குடும்ப பிரச்சினையின் காரணமாக நேற்று முன்தினம் முதல் காணவில்லை என்று தேடி வந்துள்ளார். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசிலும் புகார் செய்துள்ளார்.

    இந்த நிலையில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை குறித்து போலீசார் தகவல் அளித்தவுடன் சீனிவாசன் குடும்பத்தினருடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அங்கு இறந்தவர் தனது மகள் சபர்மதி என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சுழி அருகே 18 பவுன் நகை கொள்ளை போனது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேஉள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகவள்ளி (வயது 28). இவர் சம்பவத்தன்று தனது 2 மகன்களின் ஆதார் கார்டுகளை வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு திருச்சுழிக்கு சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 18 பவுன் நகையை திருடி கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 5லட்சத்து 55 ஆயிரம் ஆகும். வீடு திரும்பிய கற்பக வள்ளி கதவு உடைக்கப்பட்டு நகை திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் அகிலாண்டாள் (வயது 59). சம்பவத்தன்று இவர் சிவகாசிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.  சாட்சியாபுரம் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அகிலாண்டாள் அணிந்திருந்த 4Ñ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் திருத் தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×