என் மலர்
விருதுநகர்
- கணவருடன் பைக்கில் சென்ற மனைவியின் கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வன்னிமடை பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி (வயது 42).
இவர் சம்பவத்தன்று தனது கணவருடன் அருப்புக்கோட்டை அஜித்நகரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
அருப்புக்கோட்டை-பந்தல்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்தனர்.
ராமசாமி விலக்கு பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் மாரீஸ்வரியிடம் சேலை சக்கரத்தில் சிக்கி இருப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பி கணவன்-மனைவி மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்தினர்.
அப்போது மர்ம நபர்கள் திடீரென்று மாரீஸ்வரி கழுத்தில் கிடந்த 2 பவுன் 4 கிராம் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
- வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா, வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராமன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள சம்மனேந்தல் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
வீரசோழன் அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி ரகுராமன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரகுராமன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ரகுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய கண்ணனை அந்தப்பகுதியினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிவகாசி அருகே பள்ளி மாணவர், தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
சிவகாசி வெல்லம்சா மியார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீமுருகன். இவரது மகன் ஸ்ரீராம் கார்த்திகேயன் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்ச்சி முடிவுகள் வெளியானது.
இதில் ஸ்ரீராம் கார்த்திகேயன் தோல்வியடைந்ததாக தெரிகிறது. இதனால் அவர் விரக்தியுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்ரீமுருகன் தனது மகனை அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் சேர்த்தார்.
தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து யாருடனும் சரியாக பேசாமல் இருந்த ஸ்ரீராம் கார்த்திகேயன் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டது.
சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட, வினோத்குமார் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
- ஏற்கனவே இருந்த நகராட்சி கழிப்பிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில்உள்ளது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் மதுரை சாலையில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 1000-க்கும் மேற்பட்டபயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த நகராட்சி கழிப்பிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில்உள்ளது.இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்து வருகின்றனர்
இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
உடனடியாக நகராட்சி நிர்வாகம் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி செய்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் 153 பேராசிரியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் உளதர உத்தரவாத அமைப்பின் சார்பில் "நேரம் மற்றும் அழுத்தத்தை கையாளும் முறைகள்" குறித்த ஆசிரியர் மேம்பாடு நிகழ்வு நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மின்னணுவியல் துறையின் இணைப் பேராசிரியர் கவுதமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், நேரத்தையும் அழுத்தத்தையும் சரிவர கையாளும் முறைகள் குறித்து விளக்கினார். வேலையின் முக்கியத்துவம், அவசரம் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். அவசரகதியில் வேலை செய்யாமல் நிதானமாக பணி புரிந்தால் சிறப்பாக அமையும்.
குறிக்கோள்களை அடைவதற்கு நேரமேலாண்மை முக்கியம் ஆகும். அன்றன்று செய்ய வேண்டியவற்றை அன்றே செய்து முடிக்க வேண்டும்.
நமது உடம்பில் அட்ரினலின் வேதிப்பொருள் சுரப்பதால் அழுத்தம் உண்டாகிறது. அழுத்தம் உண்டாவதால் உடல், மனம். குணம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். மனநலத்தை சீராக வைத்திருக்க தினமும் சிறு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தியானம் மற்றும் நல்லுறக்கம் மிகவும் முக்கியம் என்றார்.
உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியா வரவேற்றார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் 153 பேராசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
- 10, 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்க பதவியேற்பு விழா மாவட்ட ஆளுநர் முத்து தலைமையில் நடந்தது. தலைவராக அங்குராஜ், செயலாளராக பால்சாமி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.
மாவட்ட செயலாளர் குருசாமி, ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி ஆளுநர் குமரேசன் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
10 மற்றும் 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
நகராட்சி தூய்மை பணியாளர்கள் 11 பேருக்குபுத்தாடைகள் வழங்கப்பட்டது. 15 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை பெற்று தரப்பட்டது.
- ராஜபாளையம் தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
- இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
ராஜபாளையம்
விருதுநகர்மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ராஜபாளையம் தொகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 செம்மறியாடு, வெள்ளாட்டு குட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் அருகே உள்ள சொக்க நாதன்புத்தூரில் நடந்தது.
பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டம் (2021-22) சார்பில் 100 பயனாளிகளுக்கு 500 ஆட்டு குட்டிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், யூனியன்சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் வழங்கினர்.
விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விதவை என்ற பெயரை கைம்பெண் என மாற்றியமைத்து அவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
அதுபோல் தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களின் வளர்ச்சிக்காக அரசு நகர்ப்புற பேருந்துகளில் இலவச பயணம், மாணவி களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன்வழியில் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எப்போதும் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தி.மு.க.வும், தமிழக முதல்வரும் தான். விரைவில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரப்பப்படவுள்ளது.அதில் ஏழை, எளிய, கைம்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோவிந்தராஜ், உதவி இயக்குநர் ராஜேஸ்வரி முனியசாமி, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளை செயலாளர்கள் அமுதரசன், சின்னதம்பி, சீதாராமன், தங்கப்பன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, மகளிரணி சொர்ணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் 4 ஆயிரம் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட கையேடுகள் வழங்கப்பட்டது.
- எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது. ஆசிரியை ஆனந்தவல்லி வரவேற்றார்.
புத்தகங்களை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி பேசியதாவது:-
நடப்பு கல்வியா ண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2025-ம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 3-ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு ஆகும்.
இதற்காக மாணவர்களுக்கு சிறப்புக் கையேடுகள் அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு படிக்கும் 1272 மாணவர்களுக்கும், 2-ம் வகுப்பு படிக்கும் 1509 மாணவர்களுக்கும், 3-ம் வகுப்பு படிக்கும் 1514 மாணவர்களுக்கும் என மொத்தம் 4295 மாணவ-மாணவிகளுக்கு இந்த கையேடு வழங்க ப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்றுக் கற்பதை பெற்றோர் அறியும்வகையில் வகுப்பறையைப் பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் தனித்திறன்கள் வகுப்பறையில் ஊக்குவிக்கப்படுவது குறித்து விளக்கிக் கூறுவதோடு குழந்தைகளின் திறன்களைப் பெற்றோர் காணும்வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இந்த கருத்துக்களை முதன்மைப்படுத்தி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு) வகுப்பு வாரியாக பெற்றோர் கூட்டம் நடத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆசிரியை ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.
- திரருச்சுழியில் வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.
- வழக்கம்போல் இரவு நேரத்தில் வீட்டில் விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் சுந்தரராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் சுந்தர் -ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இருவரும் தினந்தோறும் இரவு நேரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வழக்கம்போல் இரவு நேரத்தில் வீட்டில் விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.
காலையில் அதிக சத்தத்துடன் பல்பு வெடித்ததாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.
இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்த நிலையில் அருப்புக்கோட்டை தீயணை ப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது குறித்து திருச்சுழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரெயில் நிலையம் பகுதியில் புகை மண்டலமாக தெரிந்ததால் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இணையதளம் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீட்டில் கலெக்டர் பங்கேற்றார்.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் வத்திராயிருப்பு (வார்டு எண். 2) மற்றும் வ.புதுப்பட்டி (வார்டு எண். 7) பேரூராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு சாதாரண தற்செயல் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் நாராயணமடம் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் இருந்து வத்திராயிருப்பு மற்றும் வ.புதுப்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, வருகிற 5-ந் தேதி வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான 3-ம் கட்ட பணிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.
- இடமாற்றம் வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- முனியாண்டி, பழனியம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருது நகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது40) இவரது மனைவி விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மங்காபுரத்தை சேர்ந்த முனியாண்டி, அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் பிரபாகரன் மனைவிக்கு இடமாற்றம் வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ. 5 லட்சம் கேட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரபாகரன், கடந்த 2018-ம் ஆண்டு முனியாண்டியிடம்ரூ.3 லட்சம் கொடுத்து உள்ளார். அதன் பின்னர் மனைவிக்கு இடமாறுதல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த பிரபாகரன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் முனியாண்டி கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி பிரபாகரன் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் முனியாண்டி, பழனியம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே மக்கள் சந்திப்பு இயக்க முகாமில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களை நேரடியாக சந்தித்துவரும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு "மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு இயக்கம்" என்ற தலைப்பில் தெருத்தெருவாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். பின்னர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது எம்.எல்.ஏ. நிதியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டப்படும் என்றார்.
இந்த முகாமில் இலவசமாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல், புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், நகர கவுன்சிலர் அருள் உதயா, ஒன்றிய துணைச்செயலாளர் ஜெயந்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாரிமுத்து, அங்குராஜ், ராமசுப்பு, ராம்நாத், மாரி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






