என் மலர்
விருதுநகர்
- நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்து ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் உற்பத்தியில் நிலம், நீர் மற்றும் இடுபொருட்களே அடிப்படை காரணிகளாக உள்ளன. இவற்றுள் பயிர் சாகுபடிக்கு கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.
சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் 1200 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளை ஊக்குவித்திட துணைநிலை நீர் மேலாண்மை செயல்பா டுகள் திட்டத்தின்கீழ் பாதுகாப்பான குறு வட்டங்களில் புதிய ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு அமைப்பதற்க்கு ரூ.25,000/ எண் மானியத்தில் 475 எண்களும், டீசல் பம்பு செட்டு / மின்மோட்டார் அமைப்பதற்கு ரூ.15,000/ எண் மானியத்தில் 737 எண்களும், பாசன நீர் கொண்டு செல்லும் குழாய், அமைப்பதற்கு ரூ.10,000/எண் மானியத்தில் 499 எண்களும், நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்க்கு ரூ.40,000/எண் மானியத்தில் 211 எண்களும் வழங்கப்பட உள்ளது.
மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்களுக்கு முன்னூரிமை வழங்கப்பட்டு 80 சதவீத இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிறு, குறு விவசாயி சான்று, கணிணி சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், மண் மற்றும் நில பரிசோதனை ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்க ளுடன் விருதுநகர் மாவட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவ லகங்களை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் திண்டுக்கல்லில் 3-வது மாநில அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- இந்த போட்டியை தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ், கவுன்சில் ஆப் இந்தியா இணைந்து நடத்தியது.
அருப்புக்கோட்டை
தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் திண்டுக்கல்லில் 3-வது மாநில அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ், கவுன்சில் ஆப் இந்தியா இணைந்து நடத்தியது. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 படிக்கும் மாணவர் தாமோதரன் கலந்து கொண்டு கேரம் ஒற்றையர் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இதைத்தொடர்ந்து அவர் இந்த மாத இறுதியில் கோவாவில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற தாமோதரன் மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சவுந்தரபாண்டியன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலாளர் காசி முருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் நிர்வாகக் குழுவினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
- இடிந்து விழும் நிலையில் உள்ள பிணவறை உள்ளது.
- விபத்துகளில் மரணம் ஏற்படும் நபர்கள் இந்த பிணவறையில்தான் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனையானது தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மருத்துவமனை ஆகும். மேலும் சிறந்த மருத்துவமனை என முதல்வரால் பாராட்டப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை மற்றும் பெண்கள் மகப்பேறு அவசர கால சிகிச்சை செய்து வருகின்றனர்.
தினமும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடம் சேதம் அடைந்து மோசமான சூழ்நிலையில் உள்ளது. எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. விபத்துகளில் மரணம் ஏற்படும் நபர்கள் இந்த பிணவறையில்தான் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். மருத்துவர்களே அந்தப் பிணவறைக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.
விரைவில் மாவட்ட நிர்வாகம் முதன்மை வாய்ந்த அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக பிணவறை கட்டிடத்தை ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ராம்கோ முன்னாள் சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- ராஜபாளையத்தில் உள்ள திருமலைதிருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் முன்னாள் ராம்கோ சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜாவின் 87-வதுபிறந்தநாள் விழா நடை பெற்றது. விழாவில் அன்னாரது நினைவிடத்தில் கீதாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
இதில் ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, அவரது மகன் பி.வி. அபிநவ் ராமசுப்பிரமணி ராஜா மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து அபிநவ வித்ய தீர்த்த பாரதி வேத பாடசாலையில் அமைந்துள்ள பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா திருஉருவச் சிலைக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னாரது ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார். நினைவு ஜோதியை ராம்கோ டெக்ஸ் டைல்ஸ் பிரிவு ஊழியர்கள் ஏந்தி சாரதாம்பாள் கோவிலில் இருந்து ராம மந்திரம் இல்ல வழியாக ராஜபாளையம் மில்ஸ் வளாகத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டது.
விழாவை முன்னிட்டு சஞ்சய் சுப்பிரமணியன் கர்நாடகா இசை நிகழ்ச்சியும், ஸ்ரீதேவி ந்ருத்யாலயா குழுவின் அகோபிலம் அகோபலம் நாட்டிய நாடகம் ராஜபாளையத்தில் உள்ள திருமலைதிருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகில் உள்ள வெள்ளைகோட்டையை சேர்ந்தவர் முத்துராசு (32). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன், தலைமை காவலர் அன்பழகன் மற்றும் போலீசார் முத்து ராசுவை பிடித்து விசாரணை செய்தனர். அப்ேபாது அவரிடம் குட்கா பண்டல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, முத்துராசு மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதை பொதுமக்கள் பாராட்டினர்.
- கணவர் “அழகில்லை” என கூறியதால் முகத்தில் தீ வைத்து கொண்ட இளம்பெண் இறந்தார்.
- எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர் பெருங்குடியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி கற்பகம் (வயது 27). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்பகம் தனது முகத்தில் தீ வைத்துக் கொண்டார்.
தீயில் கருகிய அவரது முகம் கோரமானது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தீ வைத்தது குறித்து பேச்சியம்மாள் மகளிடம் விசாரித்துள்ளார். இதில் கணவர் அடிக்கடி "அழகில்லை" எனக்கூறி கேலி கிண்டல் செய்து வந்தார். இதனால் விரக்தியடைந்த தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கற்பகம் பரிதாபமா இறந்தார்.
இதுகுறித்து பேச்சியம்மாள் ெகாடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
- இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவனம் வளர்ப்பு நிதி ஒதுக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 சதவீதம் தீவனம் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.
ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2022-23-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7ஆயிரத்து500 வரையும் மானியமாக வழங்கப்படவுள்ளது.
மேலும், இந்த திட்டத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூலை 2-ம் வாரத்திற்குள் அளிக்க வேண்டும்.
இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் நான்கு வழிச்சாலை அருகே உயர் மின் அழுத்த பாதையில் இன்று மதியம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
- ஒப்பந்த பணியாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் நான்கு வழிச்சாலை அருகே உயர் மின் அழுத்த பாதையில் இன்று மதியம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஒப்பந்த பணியாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த உயர் அழுத்த மின் கோபுர பகுதி மின்கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த மின் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒப்பந்த பணியாளர்கள் வேலுமுத்து (வயது 36) மற்றும் முத்து ராஜ் (26) ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் வேலுமுத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த முத்துராஜ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.
மின் விபத்தில்பலியான வேலுமுத்து சித்தாளம்பு தூரை சேர்ந்தவர் ஆவார். படுகாயமடைந்த முத்துராஜ் வத்திராயிருப்பு அருகே குன்னூரை சேர்ந்தவர் ஆவார்.
உயர் அழுத்த மின் பாதையில் மின்சாரத்தை நிறுத்திவிட்டுதான் தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர். அப்போது ஜெனரெட்டர் இயக்கப்பட்டதால் மின்கம்பிகளில் மின்சாரம் வந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக மின் வாரிய அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புல்லூர் கிராமத்தில் ஆய்வு செய்ததில் மொத்தம் 9 துண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.
- பாண்டிய நாட்டில் சமண மதம் மிக சிறப்பான நிலையில் இருந்ததற்கு இச்சமண பள்ளியே ஒரு சிறந்த உதாரணம்.
விருதுநகர்:
காரியாபட்டி தாலுகா புல்லூர் கிராமத்தில் பழமையான இடிந்த கோவில் ஒன்று இருப்பதாக உள்ளூரை சேர்ந்த போஸ், வீரா, மாரீஸ்வரன் கொடுத்த தகவலின்படி பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மதுரை அருண் சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் கூறியதாவது:-
புல்லூர் கிராமத்தில் ஆய்வு செய்ததில் மொத்தம் 9 துண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. அனைத்தும் வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. 2 அரசர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. முற்கால பாண்டிய மன்னன் மாறன் சடையனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டும், ராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு கொடுத்த நிவந்தம் பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது.
புல்லூரின் பழைய பெயர் திருப்புல்லூர் என்று இக்கல்வெட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இது ஒரு சமண பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது என்றும், இக்கோவிலின் பெயர் திருப்புல்லூர் பெரும்பள்ளி உள்ளிருக்கும் இறைவன் அருகர் பட்டாளகர் என்பதையும் நாம் அறிய முடிகிறது. இக்கோவிலுக்கு நந்தா விளக்கெறிக்க ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதும் இக்கல்வெட்டுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.
பாண்டிய நாட்டில் சமண மதம் மிக சிறப்பான நிலையில் இருந்ததற்கு இச்சமண பள்ளியே ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
- முத்துராமலிங்கம் நடத்திய ஒர்க்ஷாப்பில் மலையரசன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
- அப்போது சுனிதாவுக்கும், மலையரசனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தைச் சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் (வயது 45). இவர் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். அதன் பின்னர் அவருக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் மதுரை அரசரடியில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முத்து ராமலிங்கம் நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரேந்தல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நாடாகுளம் கண்மாய் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. அருகில் அவர் கொண்டு சென்ற பேக் மற்றும் அவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் கிடந்தது. அவர் விபத்தில் இறந்தது போல் கிடந்தார்.
இது தொடர்பாக முத்துராமலிங்கத்தின் சித்தப்பா மகன் முருகன் என்பவர் திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் முத்துராமலிங்கம் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா (43) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
முத்துராமலிங்கம் நடத்திய ஒர்க்ஷாப்பில் மலையரசன் (25) என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது சுனிதாவுக்கும், மலையரசனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த முத்துராமலிங்கம் மனைவியை கண்டித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சுனிதா, கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு மலையரசனின் உதவியை நாடியுள்ளார். இருவரும் சேர்ந்து திட்டமிட்டபடி முத்துராமலிங்கத்தை சம்பவத்தன்று அடித்துக்கொலை செய்து அவர் விபத்தில் இறந்தது போல் காட்டுவதற்காக சாலையோரம் உடலை வீசிச் சென்றுள்ளனர்.
இந்த கொலைக்கு மலையரசின் நண்பர் சிவா (23) என்பவரும் உடந்தையாக செயல்பட்டு வந்தார். முத்துராமலிங்கம் கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து அவரது மனைவி சுனிதா மற்றும் கள்ளக்காதலன் மலையரசன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சிவா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மலையரசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று இரவு முத்துராமலிங்கம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நானும், புளியங்குளத்தைச் சேர்ந்த சிவாவும் கட்டையால் அவரை அடித்துக்கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் எடுத்துச்சென்று நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரனேந்தல் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் போட்டுவிட்டு சென்று விட்டோம். அவர் வாகன விபத்தில் இறந்தது போல் காட்டுவதற்காக இவ்வாறு செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
சுனிதா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி ஆவார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் அன்னபூரணியுடன் வந்து முத்துராமலிங்கத்தை திருமணம் செய்துள்ளார். பின்னர் புளியங்குளம் அருகே உள்ள அணிக்கலக்கியேந்தல் கிராமத்தில் வசித்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சுனிதா தன்னை விட 20 வயது குறைந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்து கணவரை கொலை செய்த சம்பவம் காரியாபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.
- அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மீனாட்சிபுரம் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 59), விவசாயி. இவரது அண்ணன் சமுத்திரம் (60). இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
சமுத்திரம் தனது தம்பிக்கு சொந்தமான இடத்தில் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிமுத்து தனது நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டு இருந்தார். அதில் நாற்றுகள் அழுகி விட்டதால் நேற்று மாலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் எலுமிச்சை நாற்றுகளை அகற்றி விட்டு நிலத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் அண்ணன் ஆக்கிரமித்து இருந்த இடத்தையும் சீர் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அவரது அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.
அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாள் தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சமுத்திரம், மணிகண்டன், தலைமுத்து ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து தகராறில் அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






