search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரியாபட்டி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி உள்பட 3 பேர் கைது
    X

    காரியாபட்டி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி உள்பட 3 பேர் கைது

    • முத்துராமலிங்கம் நடத்திய ஒர்க்‌ஷாப்பில் மலையரசன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
    • அப்போது சுனிதாவுக்கும், மலையரசனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தைச் சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் (வயது 45). இவர் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். அதன் பின்னர் அவருக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் மதுரை அரசரடியில் பயிற்சி பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முத்து ராமலிங்கம் நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரேந்தல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நாடாகுளம் கண்மாய் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. அருகில் அவர் கொண்டு சென்ற பேக் மற்றும் அவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் கிடந்தது. அவர் விபத்தில் இறந்தது போல் கிடந்தார்.

    இது தொடர்பாக முத்துராமலிங்கத்தின் சித்தப்பா மகன் முருகன் என்பவர் திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் முத்துராமலிங்கம் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா (43) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    முத்துராமலிங்கம் நடத்திய ஒர்க்‌ஷாப்பில் மலையரசன் (25) என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது சுனிதாவுக்கும், மலையரசனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த முத்துராமலிங்கம் மனைவியை கண்டித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சுனிதா, கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு மலையரசனின் உதவியை நாடியுள்ளார். இருவரும் சேர்ந்து திட்டமிட்டபடி முத்துராமலிங்கத்தை சம்பவத்தன்று அடித்துக்கொலை செய்து அவர் விபத்தில் இறந்தது போல் காட்டுவதற்காக சாலையோரம் உடலை வீசிச் சென்றுள்ளனர்.

    இந்த கொலைக்கு மலையரசின் நண்பர் சிவா (23) என்பவரும் உடந்தையாக செயல்பட்டு வந்தார். முத்துராமலிங்கம் கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து அவரது மனைவி சுனிதா மற்றும் கள்ளக்காதலன் மலையரசன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சிவா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மலையரசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று இரவு முத்துராமலிங்கம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நானும், புளியங்குளத்தைச் சேர்ந்த சிவாவும் கட்டையால் அவரை அடித்துக்கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் எடுத்துச்சென்று நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரனேந்தல் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் போட்டுவிட்டு சென்று விட்டோம். அவர் வாகன விபத்தில் இறந்தது போல் காட்டுவதற்காக இவ்வாறு செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.

    சுனிதா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி ஆவார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் அன்னபூரணியுடன் வந்து முத்துராமலிங்கத்தை திருமணம் செய்துள்ளார். பின்னர் புளியங்குளம் அருகே உள்ள அணிக்கலக்கியேந்தல் கிராமத்தில் வசித்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சுனிதா தன்னை விட 20 வயது குறைந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்து கணவரை கொலை செய்த சம்பவம் காரியாபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×