மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்கலாம்

மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார். இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்கலாம்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவனம் வளர்ப்பு நிதி ஒதுக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 சதவீதம் தீவனம் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.

ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2022-23-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7ஆயிரத்து500 வரையும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

மேலும், இந்த திட்டத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூலை 2-ம் வாரத்திற்குள் அளிக்க வேண்டும்.

இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com