என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • தலைமை ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • விருதுநகர் மாவட்டத்தில் வழிப்பறி, நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள மாத்திநாயக்கன்பட்டிரோடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் அய்யம்மாள் ராணி (வயது 51). இவர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வங்கிக்கு அய்யம்மாள் ராணி வந்தார். அங்கு பணியை முடித்துவிட்டு சூலக்கரை ஐ.டி. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்தனர்.

    ஆள் நடமாட்டம் பகுதி வந்தபோது மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அய்யம்மாள் ராணி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    இந்த சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் வழிப்பறி, நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் 19-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • கோரிக்கைகளை கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 19-ந் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை சார் பதிவாளர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வராததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் இதன் காரணமாக ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சிக்கு 29 கோடி செலவில் கூட்டுக் குடிநீர்திட்டப் பணிகள் கடந்த 2011 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

    தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி 60 லட்சம் குடிநீர் கொடுப்பதற்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் கடந்த சில வருடங்களாக குறைந்த அளவே கூட்டுக் குடிநீர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு வந்து கொண்டிருக்கிறது. சமீபகாலமாக ஸ்ரீவில்லி புத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் சரிவர வராததால் நகரில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாக அதி காரிகள் உடனடியாக தாமிரபரணி தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் ஆடுகள் வழங்கப்பட்டது.
    • பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை சிபியோ பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்படுகிறது.

    பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் இந்த திட்டத்தின் கீழ் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்100 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆடுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ரகுராமன் எம்.எல்.ஏ. சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பஞ்சவர்ணம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிசந்திரன், துணை இயக்குநர் கோவில்ராஜா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வழிப்பறி சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள், சமூக விரோத கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. தனியாக செல்லும் பெண்கள், பூட்டியிருக்கும் வீடுகள் ஆகியவற்றை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர்.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களிடம் மர்ம கும்பல் நகை பறிப்பில் துணிச்சலாக ஈடுபட்டு வருகிறது. விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    நேற்றும்கூட பட்டம்புதூரை சேர்ந்த பலசரக்கு வியாபாரி முருகேசன் என்பவர் தனது மனைவி ஜீவராணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதுஅவரை மறித்த மர்ம நபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றது. இதுபோன்று விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் ஏராளமானோர் நகை-பணத்தை பறி கொடுத்து போலீஸ் நிலையங்களில் அைலந்து வருகின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் சாத்தூரில் 54 பவுன் நகை திருடுபோனது. இதுதொடர்பாக சாத்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

    போலீசாரின் மெத்தன நடவடிக்கையால் சமூக விரோத கும்பல் துணிச்சலாக கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முதியவர்கள், பெண்கள் தனியாக வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

    இதுதவிர மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை, ரேசன் அரிசி கடத்தல் போன்றவையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    • ராஜபாளையம் வனவருக்கு மிரட்டல் விடுத்த கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ஓட்டல்களில் விறகுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வனச்சரக வனவர் இளவரசன் (வயது 29). வனப்பகுதியில் வெட்டப்படும் மரங்கள் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் விறகுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இது குறித்து விசாரித்தபோது மாலையாபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமி மலைவாழ் மக்களிடம் மரங்களை வெட்ட சொல்லி விறகுகளை வாங்கி ஓட்டல்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அழகர்சாமியை வனவர் எச்சரித்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அழகர்சாமியின் மனைவி பாலத்துக்கனி என்பவர் செல்போன் மூலம் இளவரசனை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளை பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

    இதுகுறித்து இளவரசன் ராஜபாளையம் வடக்கு‌ போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி, அவரது மனைவி பாலத்துகனியை தேடி வருகின்றார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • தமிழ்த்துறைத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பின் சார்பில்"சிகரம் தொடலாம்" என்ற தலைப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், 48 மாணவர்களைக் கொண்டு உருவான கல்லூரி இன்று 3 ஆயிரம் மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் வாழ்வில் 3 ஆண்டுகளை தியாகம் செய்தால் 33 ஆண்டுகள் சிறப்பாக அமையும் என்றார்.

    முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் சவுந்தர மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

    உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா வரவேற்றார். தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அமுதா அறிமுக உரையாற்றினார். துணை முதல்வர்கள் பாலமுருகன்,முத்துலட்சுமி ஆகியோரும் பேசினர்.

    வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர் நளாயினி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    • மனைவியை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வந்த போது விபத்தில் வாலிபர் பலியானார்.
    • ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தேவிப்பட்டினம் கீழமேட்டு தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 24). இவரது மனைவி கவி கவுசல்யா (22). நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கவி கவுசல்யா ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.

    அவரை கணவர் பாண்டி ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, மனைவிக்கு தேவையான துணிகளை எடுத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோட்டில் உள்ள தாய்சேய் நல விடுதி முன்பு சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த பாண்டி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குரூப் 4-க்கான இலவச மாதிரி தேர்வு 17-ந் தேதி நடக்கிறது.
    • தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 7301 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் (குரூப் 4) தேர்வு வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச குரூப்- 4 மாதிரி தேர்வு வருகிற 17-ந் தேதி விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 15-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தங்களது விண்ணப்ப படிவத்தின் நகல், டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணை யத்தால் வெளியிடப்படும் ஹால் டிக்கெட் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கருப்புபால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    குரூப்-4 தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

    மேலும் விபரங்களுக்கு 04562-293613 என்ற எண்ணில் தேர்வர்கள் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • அவர்களிடமிருந்து ரூ. 24,990 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயிலில் தனியார் கிளப் உள்ளது. இதனை முத்தையா என்பவர் மேற்பார்வை செய்து வருகிறார். நேற்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் உத்தரவின் பேரில் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் கிருஷ்ணன் கோயில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கிளப்பில் 13 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 24,990 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கிளப் மேற்பார்யாளர் முத்தையா மற்றும் சீட்டு விளையாடிய 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூய்மை தூதுவராக நியமிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • நல அலுவலர் சரோஜா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி சுத்தமான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் வகையில் அனைத்து உள்ளாட்சிகளிலும் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவர்களிடையே திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்பேரில் கழிவுகளை தரம் பிரித்து தானாக முன்வந்து தினசரி வழங்கி வரும் ராஜபாளையம் நகராட்சி நாடார் ஆரம்ப பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நிஷாந்த் (6) என்பவரை பாராட்டி அவர் குடியிருந்து வரும் நேதாஜி தெரு பகுதியின் தூய்மை தூதுவராக நியமனம் செய்யப்பட்டார்.

    அதற்கான பாராட்டு சான்றிதழை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, மாணவர் நிஷாந்த் படிக்கும் பள்ளிக்கு சென்று மாணவனின் தந்தை முன்னிலையில் சான்று வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதேபோன்று ராமம்மாள் ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் உதயனையும்(10) பாராட்டி மாணவர் குடியிருந்து வரும் மங்காபுரம் பகுதியின் தூய்மை தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை நகராட்சி ஆணையாளர் மாணவன் படித்து வரும் பள்ளிக்கு சென்று பள்ளி வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிகழ்வுகளில் நகர் நல அலுவலர் சரோஜா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • நாளை வரை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    • சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஆனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் நாளை (14-ந்தேதி) வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இன்று பவுர்ணமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவில் அடிவாரத்தில் குவிந்தனர். மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புத்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×