என் மலர்
விருதுநகர்
- சதுரகிரி கோவிலில் நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
- பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலையில், கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, நாளை (25-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும். எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்பட உள்ளது. ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்படும்.
சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெளியூர் பஸ்கள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பஸ் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.
சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (ஸ்ரீவில்லிபுத்தூர்) திலீப்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன், வத்திராயிருப்பு வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் அ.தி.மு.க.வினர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார்.
சிவகாசி
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையொட்டி குலதெய்வ கோவிலான மூலிப்பட்டி தவசலிங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினார். சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, காதுகேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடினார். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கேக்கை வெட்டி மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நாளைய பாரதம் அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார். தொடர்ந்து மருத்துவ முகாம், லட்சம் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது கூறியதாவது:-
ஆதரவற்றோர், காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கு நாம் செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். பொது வாக கொடுக்கின்ற கட்சி என்று சொன்னால் அது அ.தி.மு.க.தான்.
ஏழைகளுக்கு கொடுப்பதில் சந்தோசப் படக்கூடிய கட்சி அ.தி.மு.க.. அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள். அ.தி.மு.க.தொண்டர்கள் எப்போதுமே ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பிறந்தநாள் விழாவின் போது ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.வினர் தங்களால் முடிந்த அளவு ஏதாவது ஒரு உதவி செய்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லி புத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்ட துணை செயலாளர் அழகுராணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம் (எ)ராஜ அபினேசுவரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், நாளைய பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பாலபாலாஜி, மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் மாரீஸ்குமார், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், நடிகர் பிரபாத்.
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், சித்துராஜபுரம் பாலாஜி, விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, ராஜபாளையம் ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், ராஜபாளையம் நகர செயலாளர் பரமசிவம், வக்கீல் துரைமுருகேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாணடியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் கலைச்செல்வி, ராஜபாளையம் மகளிரணி ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
- சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்-ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, ஆண்டாள் பிறந்த தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் வளாகத்திலேயே தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
விழா நிகழ்ச்சிகள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி இன்று காலை ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்-ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதிகாலையில் கொடி பட்டம் மாடவீதி. 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது.
பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி கொடியேற்றினார். இன்று முதல் 31-ந் தேதி வரை தினமும் ஆண்டாள்-ரங்க மன்னார் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
தேரோட்ட நிகழ்ச்சிகள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியதால் ஆண்டாள் கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், ஆணையாளர் செல்லத்துரை, நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- குடும்பம் வறுமையில் வாடியதால் குட்டி ராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
- குட்டி ராணியின் மூத்த மகள் கலைவாணி தானும் தற்கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சம்சிகாபுரம் அரண்மனைக்காரர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவரது மனைவி குட்டிராணி (45). இவர்களுக்கு கலைவாணி (22) உள்பட 3 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நாகராஜ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் மனமுடைந்த குட்டிராணி 2 முறை தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரது உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து காப்பாற்றினர்.
குடும்பம் வறுமையில் வாடியதால் குட்டி ராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அறிந்த அவரது மூத்த மகள் கலைவாணி தானும் தற்கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 21-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அவர்களை உறவினர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கு அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கலைவாணி நேற்று பரிதாபமாக இறந்தார். குட்டி ராணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து குட்டி ராணியின் தாய் மாமா செந்தில்குமார் என்பவர் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
- விவசாய கடன் அட்டை அனைத்து விவசாயிகளும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
எம்.எஸ்.எம்.இ. திட்டத்தினை விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு பிரதமரிடமிருந்து முதல் பரிசு பெற்றமைக்கு கலெக்டருக்கு, மாவட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றிடும் திட்டத்தின் கீழ், விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த மணிமாறன், ஸ்ரீநாத் பிரகதீஸ்குமார் ஆகியோருக்கு அக்ரி கிளினிக் அமைக்க தலா ரூ.1லட்சம் மானியமாக வழங்கும் செயல்முறை ஆணையை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் மரங்கள் நடுவதற்கு தகுதியான இடங்களை கண்டறிந்து வனத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சிதுறையின் மூலம் மரக்கன்றுகளை நட விவரம் சேகரிக்கப்பட உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தில் தற்போது பெரும் மாற்றம் செய்யப்பட்டு விவசாயிகளின் ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் நில விபரங்களை பதிவு செய்து நல்ல முறையில் நடைபெற்று வருவதால் பதிவு செய்யாதவர்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.
விவசாய கடன் அட்டை அனைத்து விவசாயிகளும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விவசாய கடன் அட்டை விரும்புவோர் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் விண்ணப்பித்து விவசாய கடன் அட்டை பெறலாம். சர்க்கரை ஆலை நிறுவனத்தினர் உறுதியளித்தவாறு கொள்முதல் கிரைய தொகையினை விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- 50 ஷாட் வெடி, 4 இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி, தொழிலக பாதுகாப்பு துறை சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாக ஆய்வுக்குழு பொன்ராஜ் ஆகியோர் நாட்டார்மங்கலம் என்ற இடத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசு ஆலை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடம் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கு பட்டாசு உற்பத்தி செய்வது தெரியவந்தது. மேலும் 7 மூட்டை கரி மருந்து, 5 கிலோ மணி மருந்து, 50 ஷாட் வெடி, 4 இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராவணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4ல் அடங்கியுள்ள பதவிக்கான போட்டித்தேர்வு (தேர்வுநாள்: 24.07.2022 முற்பகல்) எழுதும் தேர்வர்களின் அனுமதிச்சீட்டில் ராஜபாளையம் வட்டம் ஹால் எண்:29 சத்யாவித்யாலயா, (சி,பி.எஸ்.இ.) பிள்ளையார்குளம், கே.ஆர் நகர் அஞ்சல் (பெருமாள் தேவன்பட்டி கோவில் அருகில்) - 626137 என உள்ள தேர்வர்கள் ஹால் எண்:29 சத்யாவித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராஜீவ் காந்தி நகர், கே.ஆர் நகர் அஞ்சல், ராஜபாளையம் வட்டம்- 626108 (வேட்டைப்பெருமாள் திருக்கோவில் அருகில்) என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் திருச்சுழி வட்டம் ஹால் எண் - 005 மருது பாண்டியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (எம்.டி.ஜி.எச்.எஸ்.எஸ். நரிக்குடி) மதுரைரோடு திருச்சுழி வட்டம் என உள்ள தேர்வர்கள் ஹால் எண்:005 மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, நரிக்குடி, மதுரை ரோடு, திருச்சுழி வட்டம் என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜபாளையம் அருகே உழவர் சந்தையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- அடிப்படை வசதியை மேம்படுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி உழவர் சந்தை புதுப்பிக்கப்படும் என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சியில் செயல்பாடுகளின்றி காணப்படும் உழவர் சந்தைக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதையடுத்து தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. இந்த உழவர்சந்தை வளாகத்தில் ஆய்வு செய்தார். அவருடன் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகளின் நலன் கருதி தளவாய்புரம் உழவர் சந்தைக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர சட்ட மன்ற உறுப்பினரான நானும், ஒன்றிய சேர்மனும் முயற்சி எடுத்து வருகிறோம். கருணாநிதி ஆட்சியில் விவசாயிகள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது உழவர் சந்தை. அதனை மீண்டும் புதுப்பித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் மு.க. ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.
அவரது வழியில் தளவாய்புரத்திலுள்ள உழவர் சந்தைக்கு பேவர் பிளாக் தளம், சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதியை மேம்படுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி யூனியன் சேர்மன் ஒத்துழைப்புடன் உழவர் சந்தை புதுப்பிக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில் தோட்டக்கலை வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி, விற்பனைத்துறை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், உதவிப்பொறியாளர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், கிளைச்செயலாளர் தங்கமணி மயிலேறி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிம்காவின் உறவினர்கள் செல்வராஜ், சின்னத்துரை, ராஜாங்கம் உள்ளிட்ட 20 பேர் 2 கார்களில் இரவு ரகுவரன் வீட்டிற்கு வந்தனர்.
- அவர்கள் தகராறு செய்து வலுக்கட்டாயமாக சிம்காவை காரில் கடத்தி சென்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எம். நகரை சேர்ந்தவர் ரகுவரன் (வயது 35). இவர் விருதுநகரில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் சிம்கா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இது கலப்பு திருமணம் ஆகும். இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சிம்காவின் உறவினர்கள் செல்வராஜ், சின்னத்துரை, ராஜாங்கம் உள்ளிட்ட 20 பேர் 2 கார்களில் இரவு ரகுவரன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தகராறு செய்து வலுக்கட்டாயமாக சிம்காவை காரில் கடத்தி சென்றனர்.
இதனை தடுத்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஆண்டனி மற்றும் சிம்கா வேலை பார்த்து வந்த நிறுவனத்தை சேர்ந்த ஜெகநாத், ஸ்டீபன் ஆகியோரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி ரகுவரன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் பெண்ணை கடத்தி சென்ற கார்களை பின்தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றனர். இதில் ஒரு காரில் சென்றவர்களை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடத்தி செல்லப்பட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். வங்கி மேலாளர் மனைவியை உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது.
- வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.
வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில், உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகள் உருவாகும் பொழுது அதைத் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த ''டெக்னோ ஸ்கூல்'' நிறுவனம் வளாகத் தேர்வை நடத்தியது. இதில் கணினித் துறைகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் பங்கு பெற்றனர். நிறுவன மேலாளர் சாமுவேல் மார்டின் நிறுவனத்தின் நோக்கம், அறிமுகம், பணியின் தன்மை குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் நிறுவனத்திற்குத் தேவையான பணியா ளர்களை எழுத்துத்தேர்வு, கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்தார்.
இந்த வளாகத் தேர்வி ற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு மையப் பொறுப்பாளர்கள் லட்சுமணக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோர் செய்திருந்தனர். முனைவர் லட்சுமணக்குமார் நன்றி கூறினார்.
- சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மற்றும் நாகர்கோவிலில் உள்ள பிரபல ரோபோடிக்ஸ் நிறுவனமான ''மேட் ஆட்டோமேசன்'' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இதில் பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, மேட் ஆட்டோமேசன் நிர்வாக இயக்குநர் பிரவீன் மேத்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் கல்லூரியில் உள்ள ரோபோடிக்ஸ் ஆய்வு கூடத்தை புதிய தொழில்நுட்பம் மூலம் விரிவாக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் இந்த துறையில் வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி கொள்ள முடியும்.
நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தொடக்க உரையாற்றினார். டீன் மாரிசாமி சிறப்புரையாற்றினார். மின்னனுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் பேசுகையில், ரோபோக்கள் பற்றியும், பல்வேறு துறைகளில் ரோபோக்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் எடுத்துரைத்தார். மருத்துவம், பெயிண்டிங், பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆய்வு, விவசாயி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதை பற்றி எடுத்துரைத்தார்.மேலும் மனிதர்களின் மனதை கட்டுப்படுத்தும் ரோபோ பற்றியும், அதன் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னனுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், மீனா பிரகாஷ், ஐ.ஐ.சி. ஒருங்கிணைப்பாளர் தனம், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.
- இளம்பெண் தீயில் கருகி பலியானார்.
- வீட்டில் பால் காய்ச்சியபோது மணியமுதுவின் சேலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள காரியாபட்டி ரோட்டைச் சேர்ந்த முனியாண்டி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மணியமுது (வயது 23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. முனியாண்டி அதே பகுதியில் புதிதாக வீடுகட்டினார்.
இந்தபணிகள் முடிந்த நிலையில் கடந்த 20-ந் தேதி கிரகப்பிரவேசம் நடந்தது. இந்த நிலையில் முனியாண்டி, மனைவியின் தந்தை சமயனிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது வீட்டில் பால் காய்ச்சியபோது மணியமுதுவின் சேலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இதில் உடல் கருகி காயமடைந்த உங்கள் மகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சமயன் உடனே பதறியடித்துக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மணியமுதுவின் நிலையை பார்த்து கண் கலங்கனார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணியமுது பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சமயன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






