என் மலர்
விருதுநகர்
- ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சிவகாசி,
சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்த காரணமாக சில மாதங்கள் மட்டும் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவில் குறைந்தது.
மக்கள் துணிப்பைக்கு மாறிக்கொண்டிருந்த நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் நிலை தொடங்கியது. தற்போது தமிழகத்தில் 95 சதவீத கடைகளில் மறுசுழற்சிக்கு வாய்ப்பில்லாத பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழில் நகரமாக விளங்கும் சிவகாசியிலும் பிளாஸ்டிக் கவர் பயன்பாடுகள் அதிகரித்தது. இதை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாண்டியராஜ், முத்து பாண்டி, மேற்பார்வையாளர் முத்துராஜ் மற்றும் ஊழியர்கள் கடைவீதி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு குடோனில் 500 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உரிமையாளர் ரவீந்திரனுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகள் சிவகாசி பி.எஸ்.எஸ்.ஏ. ஆறுமுகம் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு 1500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் சந்திரசேகருக்கு ரூ. 20 ஆயிரம் விதிக்கப்பட்டது. சிவகாசியில் நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ பிளாஸ்டிக் கவர், பொருட்களின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.
சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
- துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடந்தது.
துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சிவகாசி கிளையின் வங்கி மேலாளர்கள் காசிராஜன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு 300 மரக்கன்றுகளை வழங்கினர்.
அவைகளை கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மனோஜ்குமார், ராஜூவ் காந்தி, தேவி ஆகியோர் நட்டு ஏற்பாடு செய்தனர்.
- வீடுகள் ஒதுக்கீடு பெற புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இதற்கான விண்ணப்ப–ங்களை அலுவலக நேரத்தில் வருகிற 5-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமத்துவபுரங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை அரசாணைப்படி தகுதியற்ற பயனாளிகளுக்குப் பதிலாக புதிய பயனாளிகளை தேர்ந்து எடுப்பதற்கு ஏதுவாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இனங்களின் அடிப்படையில் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன் விவரம் பின்வருமாறு:- சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளிச்செவல் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் ஆதிதிராவிடர் பிரிவில் 3 வீடுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் 5 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 1 வீடு என மொத்தம் 9 வீடுகள்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செங்கோட்டை ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் பிற்படுத்த–ப்பட்ட வகுப்பு பிரிவில் 1 வீடு மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் ஆதிதி–ராவிடர் பிரிவில் 5 வீடுகள், இதர பிரிவில் 19 வீடுகள், என மொத்தம் 24 வீடுகள்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர் மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் 34 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
மேற்கண்ட சமத்துவபுர வீடுகள் தொடர்பான விவரங்களை சம்பந்த–ப்பட்ட ஊராட்சி ஒன்றி–யத்தினை அணுகி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப–ங்களை அலுவலக நேரத்தில் வருகிற 5-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் செய்தனர்.
- பின்னர் ஆசிரியர் தாமோதரன் கைது செய்யப்பட்டார்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புதுச்சூரங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இங்கு புதுசூரங்குடி, நடுச்சூரங்குடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 268 பேர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் தாமோதரன் மாணவ, மாணவிகளை வகுப்பறையில் ஆபாச வார்த்தையில் பேசுவதும், ஒருமையில் திட்டுவதும் என தொடர்ந்து பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுத்து வருவதாக குற்றம் சாட்டினர். இதை மாணவிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று ஆசிரியர் தாமோதரனை பணியிட மாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன், காவல் ஆய்வாளர் செல்ல பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆசிரியர் தாமோ தரன் கைது செய்யப்பட்டார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, வருவாய் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கோவில் நிர்வாகத்தை பார்ப்பது தொடர்பாக தகராறு இந்த விரோதம் இருந்து வந்தது.
விருதுநகர்
ராஜபாளையம் சோலைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 42). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை பார்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து குருசாமி தரப்பினரும், கண்ணன் தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதுபற்றி குருசாமி ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கண்ணன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் குருசாமி உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
- இதற்காக 400 அடி நீள பிரமாண்ட பந்தல், தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ தலங்களில் முக்கி யமானதாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பூர திருவிழா மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழாவில் முன்புபோல் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆண்டாள் கோவில் பெரிய தேர் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
அதேபோல் கோயில் முன்பு உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பக்தர்கள் ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளை கண்டு களிக்க சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் பல வண்ண துணிகள் மற்றும் யானை பொம்மைகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முத்தாய்ப்பாக ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் இருந்து வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 400 அடி நீளத்திற்கு பக்தர்களை வரவேற்கும் வண்ணம் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் முகப்பு கோயஉட்டை நுழைவுவாயில் போல அமைக்கப்பட்டுள்ளது.
இதனை உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும் ஆச்சரியத்துடன் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் அலங்கார பந்தல் அமைப்பதில் கைதேர்ந்தவர்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள்தான் முதல் இடத்தில் உள்ளனர். இவர்கள் தான் இந்த பந்தலை அமைத்து வருகின்றனர்.
ஆடிப்பூர கொட்டகை மற்றும் பக்தர்களை வரவேற்கும் பந்தலை உள்ளூரையைச் சேர்ந்த பந்தல் அமைப்பாளர் அய்யனார் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்களை வைத்து பார்போர் வியக்கும் வண்ணம் இந்த பிரம்மாண்ட அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தேரோட்டத்தை முன்னி ணட்டு தேரில் அலங்காரங்கள் அமைக்கும் இறுதி கட்ட பணி நேற்று நடைபெற்றது. தேரின் மேல் பகுதியில் கலசங்கள் அமைத்து கொடி கட்டப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்து ராஜா மற்றும் ஊழி யர்கள் செய்திருந்தனர்.
- சிவகாசி அருகே பண தகராறில் வாலிபர் கடத்தப்பட்டார்.
- சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசியைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 45), தச்சு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்நத பாண்டித்துரை என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வைரமுத்துவின் மகன் முத்துக்குமார் (19) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் விஸ்வநத்தம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது முத்துக்குமாரை, பாண்டித்துரை, மாரி, அலர்ட் ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் தாக்கியதுடன் அவரை கடத்திச் சென்று விட்டனர். இதுபற்றி கருப்பசாமி, வைரமுத்துவுக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தனது மகன் கடத்தப்பட்டது தொடர்பாக சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கடத்திச்சென்ற பாண்டித்துரை உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட வாலிபரை மீட்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தலைமை தாங்கினார்.
விருதுநகர்
விருதுநகரில் புதுவசந்தம் மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு, ராம்கோ சமூக சேவைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு சங்கம், கீதாபவன் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனா ளிகளுக்கான சுயம்வரம் விழாவை நடத்தியது.
கலெக்டர் மேகநாத ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் திருமண வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிக ளுக்கான சுயம்வரம் விழா தனியார் கூட்டமைப்பு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சார்பில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பாக இந்த விழா அமைந்துள்ளது.
இதில் தேர்வு செய்யப்படுவோர், சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, திருமணம் நடத்தி வைக்கப்படும்.
மேலும், மாற்றுத்திற னாளிகள் அனைத்து துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக சாதனை புரிந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் மூலமும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தியா விலேயே முதன் முறையாக தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக உதயம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் தாங்களே எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில், குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும், சிரமத்தினை தவிர்க்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்ப ட்ட 100 நவீன கழிப்பறைகள் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனா ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். மேலும், அனைவரும் மாற்றுத்திறனாளிகளை மற்றவர் என கருதாமல் தங்களில் ஒருவராக பழக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிர்வாக தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் சிம்மசந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, மாவட்ட நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜராஜேசுவரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கலைவிழா போட்டிகள் நடந்தது.
- போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் சங்கீதா இன்பம் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் கலாச்சார கலை மன்றம் மற்றும் சிவகாசி மாநகராட்சி இணைந்து தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கோலப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
இதில் மொத்தம் 158 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில்,தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் பற்றியும், தூய்மை இந்தியா இயக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர். மேலும் கழிவு மேலாண்மை, மீண்டும் மஞ்சைப் பை திட்டம், பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
முதுகலை வணிகவயில் துறை உதவிப்பேராசிரியர் சரஸ்வதி வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் சங்கீதா இன்பம் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை வணிகவியல் உதவிப்பேராசிரியர் சரஸ்வதி செய்திருந்தார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் நன்றி கூறினார்.
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் "இந்திய கப்பற்படை அதிகாரிக்கான நுழைவு வாயில்" என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர், பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.
லெப்டினன்ட் கிருஷ்ணன், இந்திய கப்பல் படையில் பணி அனுபவங்கள் குறித்தும், பணி நியமன முறை குறித்தும், ஊதிய வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தேசிய மாணவர் படை அதிகாரி கணேஷ்பாபு நன்றி கூறினார். இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் 800 பேர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- ஆடி அமாவாசை அன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு.
- மலைப்பாதைகளில் ஆற்று ஓடைகள் மற்றும் வேறு வழிகளில் செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரித்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்தர்கள் வாழும் மலையாக கருதப்படும் இங்கு அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் வழிபட்டால் சிறப்பு என கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆடி அமாவாசை அன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு. வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று முதல் 30-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று சதுரகிரிக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் இன்று மலைக்கு புறப்பட்டனர். காலை 7 மணிக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மலைப்பாதைகளில் ஆற்று ஓடைகள் மற்றும் வேறு வழிகளில் செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரித்தனர். மேலும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். ஆடி அமாவாசைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் நாளை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
- ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை வழக்கில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதன் தொடர்ச்சியாக மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகர் 2-வது வடக்கு தெருவில் குடியிருந்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கர பாண்டியன், அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதி மணி ஆகிய இருவரையும் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை யடித்து சென்றனர். மேலும் அடையாளங்களை அழிக்க மிளகாய் பொடியையும் தூவி விட்டு சென்றனர்.
இந்த வழக்கில் மதுரை சரக ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி பொன்னி ஆலோசனையிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மனோகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகளை பதிவிறக்கம் செய்தும், செல்போன் டவர்களை ஆய்வு செய்து வந்ததில் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், சிலரை அருப்புக்கோட்டையிலும் சிலரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இருந்தும் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சங்கரபாண்டியன் வீட்டில் இருந்த செல்போன் தொலைந்து விட்டதாகவும் அதை தற்போது வரை பயன்படுத்தி வந்த ஒருவரையும், அதன் தொடர்ச்சியாக மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் விசாரிக்க இன்று ஐ.ஜி.அஸ்ரா கார்க் அருப்புக்கோட்டை வருகிறார்.
- மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
- நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்று மரங்களை நட்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் 32-வது வார்டு மடவார்வளாகத்தில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் ''என் குப்பை என் பொறுப்பு'' நிகழ்ச்சி நடந்தது.
நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்று மரங்களை நட்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் பேசிய நகர்மன்றத் தலைவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களும் நகராட்சியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.
வீதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை சேகரிக்காமல் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஐமாணிக்கம், சுகாதார ஆய்வாளர் சந்திரா,கவுன்சிலர் சுரேஷ் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க குழுவினர்கள் பங்கேற்றனர்.






