என் மலர்
விருதுநகர்
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26-ந் தேதி நடக்கிறது.
- தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள், விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 26-ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வரவேண்டும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- இதுகுறித்து முன்னாள் துணைவேந்தர்-அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டியை சேர்ந்தவர் நல்ல தம்பி (வயது 58), முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி. இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது சகோதரர் ரவிச்சந்திரன் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது மனைவி வள்ளி கொடைக்கானல் மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
அப்போது கொடைக்கா னலில் வசித்து வந்த விஜய் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் தனது மனைவிக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தரும்படி கேட்டுக்ெகாண்டார்.
இதுதொடர்பாக அவரும், நானும் மதுரை குறிஞ்சி நகரில் உள்ள வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகியோர் சந்தித்து பேசினோம்.
அப்போது வேலைக்கு ரூ.25 லட்சம் தரும்படி கூறினார். இதைத்தொடர்ந்து விஜய் சிவகாசியில் உள்ள வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளியை சந்தித்து எனது முன்னிலையில் ரூ.15 லட்சம் கொடுத்தார்.
இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் எழுத்தர் பணி வாங்கி தரும்படி கேட்ட ஜெனிபர், சந்திரா, கிருஷ்ணம்மாள், சுகன்யா ஆகியோரிடம் இருந்து ரூ.23 லட்சம் வாங்கி ரவிச்சந்திரனிடம் கொடுத்தேன்.
இதன் பின்னர் கணிதம், வேதியியல் பேராசிரியர் பணிக்காக கிரிஜா, சத்யா ஆகியோர் ரூ.45 லட்சம் ரவிச்சந்திரனிடம் கொடுத்தனர். மேலும் பூபாலன் என்பவர் பஞ்சாயத்து கிளாக் பணிக்காக ரூ.12 லட்சம் ரவிச்சந்திரனிடம் கொடுத்தார். மொத்தம் ரூ.95 லட்சம் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளியிடம் எனது முன்னிலையில் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் கொடுத்த பணத்தை திரும்பி தரும்படி வற்புறுத்தினார். அப்போது ரவிச்சந்திரன் என்னிடம் ரூ.25 லட்சம் மட்டும் கொடுத்தார். இதில் ரூ.15 லட்சத்தை மட்டும் விஜயிடம் கொடுத்ேதன்.
இந்தநிலையில் எனக்கு அறுவை சிகிச்சை நடை பெற்றதால் ரவிச்சந்தி ரனிடம் இருந்து பணத்தை பெற முடியவில்லை. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி பெற்ற பணத்தை வாங்கி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேலை வாங்கி தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்
இருக்கன்குடியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த ராமர் பூசாரி என்பவர் கூறியுள்ளார். இதனை நம்பி குருசாமி ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.
பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- 2 பேரை சரமாரியாக தாக்கிய 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கொட்டகையில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அர்ச்சுனா நதி படுகையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை கொட்டகை உரிமையாளர் ராமதாஸ் தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்டுள்ள வாக்குவாதத்தில் ராமதாஸை அந்த கும்பல் தாக்கியது. இதை தடுக்க வந்த விக்ரம் என்பவரும் தாக்கப்பட்டார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் விசரணை நடத்தி நெல்லையை சேர்ந்த அய்யப்பன், குமரேசன், ராகுல், வெள்ளைபாண்டி மற்றும் 6 பெண்கள் உள்பட 26 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு; மனைவி- குழந்தை படுகாயம் அடைந்தனர்.
- விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் கம்மாபட்டி தெருவை சேர்ந்தவர் பவுன்குரு (வயது 28). இவர் சொந்தமாக ஆட்ேடா வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (21) என்ற மனைவியும், 1 வயது கபிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. வருகிற 29-ந் தேதி குழந்தைக்கு காது குத்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக உறவினர்களை அழைக்கும் பணியில் பவுன்குரு, அவரது மனைவி தீவிரமாக இருந்தனர். சம்பவத்தன்று காடனேரி பகுதியில் உள்ள உறவினரை அழைப்பதற்காக பவுன்குரு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆட்டோவில் புறப்பட்டார்.மருதநத்தம் விலக்கு ரோட்டில் சென்றபோது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக பவுன்குரு ஆட்டோவை திருப்பினர்.
இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்த நடுரோட்டில் தலைகுப்பிற கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குரு பரிதாபாக இறந்தார்.புவனேஸ்வரி,
1 வயது குழந்தை படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சித்தி விநாயகர் சிலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது.
- சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராஜபாளையம்
ராஜபாளையம் தர்மாபுரம்தெரு மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர் நற்பணிமன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு 35-வது ஆண்டு விநாயகர் சதூர்த்தி வீதி உலாவை நடத்துகிறார்.
இதையொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மும்பையில் வடிவமைக்கப்பட்ட மும்பை சித்தி விநாயகர், வல்லப விநாயகர் சிலை இன்று அதிகாலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது. மேலும் நடப்பு தமிழ் வருடத்தை போற்றும் வகையிலான சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ஆரோக்கிய அற்புத மேரியின் பேச்சில் சந்தேகம் அடைந்த மணிகண்டன், தனது பணத்தை திருப்பிதரும்படி கேட்டுள்ளார்.
- ஆனால் அவரது பணத்தை ஆரோக்கிய அற்புதமேரி திருப்பி கொடுக்கவில்லை.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த பொன்னகரம் கே.கே.நகரில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 34). இவருக்கு ராஜபாளையத்தை அடுத்த நல்லமங்கலம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய அற்புத மேரி (30) என்பவர் அறிமுகம் ஆனார்.
அப்போது மணிகண்டனிடம் தனக்கு சென்னை தலைமை செயலகத்தில் தெரிந்தவர்கள் உள்ளனர். அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று ஆரோக்கிய அற்புதமேரி ஆசைகாட்டி உள்ளார். இதனை நம்பிய மணிகண்டன் 3 தவணையாக அவருக்கு பணம் கொடுத்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். முதல் தவணையாக ரூ.3 லட்சமும், 2-வது தவணையாக ரூ.4 லட்சமும், 3-வது தவணையாக ரூ.1 லட்சமும் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட ஆரோக்கிய அற்புதமேரி வேலை கிடைத்துவிடும் என்று பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து மணிகண்டனுக்கு முதலில் ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளி வேலை வாங்கி கொடுத்துள்ளார். அங்கு மணிகண்டன் 6 மாதம் மட்டும் பணிபுரிந்துள்ளார்.
இந்த நிலையில் ஆரோக்கிய அற்புத மேரியின் பேச்சில் சந்தேகம் அடைந்த மணிகண்டன், தனது பணத்தை திருப்பிதரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவரது பணத்தை ஆரோக்கிய அற்புதமேரி திருப்பி கொடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து மணிகண்டன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆரோக்கிய அற்புதமேரி மேலும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
ஆரோக்கிய அற்புதமேரியிடம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வீரமணிகண்டன் என்பவர் ரூ.4 லட்சமும், முத்துக்கிருஷ்ணன் என்பவர் ரூ.4 லட்சமும், உதயகுமார் என்பவர் ரூ.5.50 லட்சமும், இன்னொரு மணிகண்டன் ரூ.13 லட்சமும் என மொத்தம் ரூ.26.50 லட்சம் கொடுத்து ஏமாந்து உள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தும் தகவல் தெரியவந்ததும் ஆரோக்கிய அற்புதமேரி, அவரது கணவர் ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தினர் திடீரென தலைமறைவாகி விட்டனர். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஒரு இளம்பெண் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆக்கி போட்டியில் உலக சாதனை படைத்த சிவகாசி மாணவிக்கு மேயர் பாராட்டு தெரிவித்தார்.
- சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவி
சிவகாசி
சிவகாசியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் ஜியாஸ்ரீ (வயது 9). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் மாணவி ஜியாஸ்ரீ, சிவகாசி பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாட்சியாபுரம் பஸ் நிறுத்தம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஆக்கி விளையாடிக் கொண்டே சென்று 39 நிமிடம் 30 வினாடியில் சென்று சாதனை படைத்தார். அவரது பெயர் முதன்முறையாக நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், உறுப்பினர்கள் ராஜேஷ், வெயில்ராஜ் மற்றும் ரேணு நித்திலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.
- இளம்பெண்ணுடன் பழகியதை கண்டித்ததால் விஷம் குடித்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 31). இவர் ரெடிமேடு ஆடை கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். தனது வீட்டு மாடியில் ரெடிமேடு ஆடைகளை உற்பத்தி செய்யும் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தி வந்தார்.
அப்போது அவர் அங்கு வேலைக்கு வந்த ஒரு இளம்பெண்ணிடம் நெருங்கி பழகி வந்தார். இதுபற்றி அறிந்த முத்துக்கிருஷ்ணனின் தாய் கண்டித்துள்ளார். மேலும் அவரது மனைவி ரேசிகா கணவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த முத்துக்கிருஷ்ணன் விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அங்கு சற்று உடல்நலம் பெற்றதும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது முத்துக்கி ருஷ்ணன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தி னர் அவரை மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார்.
இதுபற்றி தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
- அவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
சிவகாசி
விருதுநகர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் சாத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் வழிகாட்டுதலின்படி கோட்ட அளவிலான போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருள் விளைவுகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கிடையே போட்டிகள் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இதில் விளக்க காட்சி வழங்குதல், கதை எழுதுதல், கவிதை கூறுதல், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் ரங்கோலி கோலப்போட்டி ஆகிய போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்தது. விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 25 பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகளை சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர்.
ரங்கோலி கோல ேபாட்டியில் 23 அணிகள் பங்கேற்று, '' போதையில்லாத உலகம், போதையில்லாத பாதை'' போன்ற
கருத்துகளை கோலங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.
பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனுவியல் பொறியியல் துறையின் 3-ம் ஆண்டு மாணவிகள் பிரிஸ்கில்லா மெர்வின், ஜீவ கிருத்திகா ஆகியோர் ரங்கோலி போட்டியில் 2-ம் பரிசு பெற்றனர். விருதுநகரில் நடந்த 75-வது சுதந்திர தினவிழாவின் போதுகலெக்டர் மேகநாத ரெட்டி, வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
வெற்றி பெற்ற மாணவிகளை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, மின்னியல் மற்றும் மின்னனுவியல் பொறியியல் துறைத்தலைவர் முனிராஜ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
- சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
- இதுபற்றிய புகாரின்பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியப்பாவை கத்தியால் குத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அய்ய னார் (வயது 66), விவசாயி. இவரது தம்பி பச்சையப்பன். இவர்களுக்கு சொந்தமான நிலம் அருகருகே உள்ளது.
இந்த நிலையில் அய்ய னார் வயலில் இருந்த வேலியை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பச்சையப்பனின் மகன் அய்யனார் (25) பெரியப்பா அய்யனாரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இரவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனை அய்யனார் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது தம்பி மகன் அய்யனார் அங்கு வந்து தனது பெரியப்பா வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அய்யனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின்பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியப்பாவை கத்தியால் குத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
- முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
துறைத் தலைவர்குமரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் செந்தில்குமார் கலந்து கொண்டு ''ஸ்பின்ட்ரோனிக்ஸ் பயன்பாடுகளுக்கான காந்த நானோ துகள்களின் தொகுப்பு'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், நானோ தொழில்நுட்பம். நானோ காந்தப் பொருட்களின் பண்புகள் மற்றும் தற்காலத்தில் ஸ்பின்ட்ரோனிக்ஸ், பயன்பாடுகள் பற்றி விளக்கினார். மேலும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சி படிப்புக்கான வாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் இயற்பியல் துறையைச் சேர்ந்த 20 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இயற்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவி ரிஸ்வானா வரவேற்றார். 2-ம் ஆண்டு மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.






