என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி செய்த பெண்
- ஆரோக்கிய அற்புத மேரியின் பேச்சில் சந்தேகம் அடைந்த மணிகண்டன், தனது பணத்தை திருப்பிதரும்படி கேட்டுள்ளார்.
- ஆனால் அவரது பணத்தை ஆரோக்கிய அற்புதமேரி திருப்பி கொடுக்கவில்லை.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த பொன்னகரம் கே.கே.நகரில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 34). இவருக்கு ராஜபாளையத்தை அடுத்த நல்லமங்கலம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய அற்புத மேரி (30) என்பவர் அறிமுகம் ஆனார்.
அப்போது மணிகண்டனிடம் தனக்கு சென்னை தலைமை செயலகத்தில் தெரிந்தவர்கள் உள்ளனர். அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று ஆரோக்கிய அற்புதமேரி ஆசைகாட்டி உள்ளார். இதனை நம்பிய மணிகண்டன் 3 தவணையாக அவருக்கு பணம் கொடுத்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். முதல் தவணையாக ரூ.3 லட்சமும், 2-வது தவணையாக ரூ.4 லட்சமும், 3-வது தவணையாக ரூ.1 லட்சமும் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட ஆரோக்கிய அற்புதமேரி வேலை கிடைத்துவிடும் என்று பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து மணிகண்டனுக்கு முதலில் ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளி வேலை வாங்கி கொடுத்துள்ளார். அங்கு மணிகண்டன் 6 மாதம் மட்டும் பணிபுரிந்துள்ளார்.
இந்த நிலையில் ஆரோக்கிய அற்புத மேரியின் பேச்சில் சந்தேகம் அடைந்த மணிகண்டன், தனது பணத்தை திருப்பிதரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவரது பணத்தை ஆரோக்கிய அற்புதமேரி திருப்பி கொடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து மணிகண்டன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆரோக்கிய அற்புதமேரி மேலும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
ஆரோக்கிய அற்புதமேரியிடம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வீரமணிகண்டன் என்பவர் ரூ.4 லட்சமும், முத்துக்கிருஷ்ணன் என்பவர் ரூ.4 லட்சமும், உதயகுமார் என்பவர் ரூ.5.50 லட்சமும், இன்னொரு மணிகண்டன் ரூ.13 லட்சமும் என மொத்தம் ரூ.26.50 லட்சம் கொடுத்து ஏமாந்து உள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தும் தகவல் தெரியவந்ததும் ஆரோக்கிய அற்புதமேரி, அவரது கணவர் ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தினர் திடீரென தலைமறைவாகி விட்டனர். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஒரு இளம்பெண் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






