என் மலர்
விருதுநகர்
- பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- 6-க்கும் மேற்பட்டோர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவரது சரக்கு வாகனத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றார்.
அந்த சரக்கு வாகனம் சாத்தூர் அருகே சந்தையூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலைக்கு சென் றது. அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மணிப்பாரைப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார், சரக்கு வாகனத்தை முந்த முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த முருகன் (28), டிரைவர் மணிகண்டன் (24), ஆகாஷ் (20), முத்துமாரியப்பன் (45), ஜெயப்பிரபு (42), முத்துமாரி (30), பாண்டி கணேஷ் (18), முத்துக்குமார் (20) ஆகியோர் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக காரில் வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எடிசன் (34), நிஷான் (29) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.80 லட்சத்து 79 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
- தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.இங்கு ஆடி மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த வருடம் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடந்தது. விழா நேற்று முடிந்த நிலையில் ேகாவிலில் வைக்கப்பட்டிருந்த 4 தற்காலிக உண்டியல், 10 நிரந்தர உண்டியல், ஒரு கால்நடை உண்டியல், ஒரு அன்னதானம் உண்டியல் ஆகியவை கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.80 லட்சது 79 ஆயிரத்தி 888 பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.
இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர், இந்து அறநிலைய துறை கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் கோவில் அறங்காவலர் குழு தலை வர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு வினர், ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வை யிட்டனர்.
- 2-வது திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிப்பட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜானகி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 26). இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளீஸ்வரி அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். 2020-ம் ஆண்டு வத்திராயிருப்பை சேர்ந்த ஆனந்த் என்பவரை காளீஸ்வரி 2-வதாக திருமணம் செய்துகொண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள ஜெகதாப்பட்டினத்தில் வசித்து வந்தனர். ஆனந்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் காளீஸ்வரியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை கவனித்துக்கொள்வதற்காக சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்தார். நேற்று ஆஸ்பத்திரியில் இருந்த காளீஸ்வரி உணவு வாங்குவதற்காக கடை வீதிக்கு சென்றார். அப்போது அங்கு போதையில் வந்த ஆனந்த் நடு ரோட்டில் மனைவியிடம் தகராறு செய்தார். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை சேதப்படுத்தியதோடு, சரமாரியாக தாக்கினார். இதனால் அவமானம் அடைந்த காளீஸ்வரி தாயாரிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துெகாண்டார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டும் வரவேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்துமாறும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டும் வரவேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
- அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள எட்டக்காபட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவரது மகள் கஸ்தூரி (19). இவர் நாகர்கோவிலில் உள்ள என்ஜினீயர் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கஸ்தூரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முருகன் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் மகள் மாயமானது தொடர்பாக கல்லூரியில் படிக்கும் கடலூர் மாவட்டம் அரசன்குடியை சேர்ந்த கருப்பையா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிபிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி காளீஸ்வரி (29). இவர்களுக்கு கனிஷ்கா என்ற மகளும், சர்வேஷ்வரனும் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று காளீஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழைய ஏழாயிரம் பண்ணை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பெண் மாயமானார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் கார்த்திக் என்பவர் மைனர் பெண்ணை கடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள் கட்டும் பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அனுப்பங்குளம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு செவலூரில் ரூ.3 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 70 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து வேலை உத்தரவு ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அவர் பேசும் போது கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 60 தொகுப்பு வீடுகள் ரூ.3 கோடி மதிப்பிலும், 2 தனிவீடுகள் ரூ.11.30 லட்சம் மதிப்பிலும், அனுப்பங்குளம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 8 தொகுப்பு வீடுகள் ரூ.40 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்து, வேலை உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை தமிழர்க ளுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசின் அனைத்து நலத்திட்ட ங்களும் படிப்படி யாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) உமாசங்கர்,சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டாட்சியர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்) கார்த்திகேயினி, சிவகாசி வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென பெண்ணை தாக்கினர்.
- தலைமறைவாக உள்ள பிரபாகரன், விஜயன் ஆகிய 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெண், நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு செல்வதற்காக பாலவநத்தம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் பஸ் வரவில்லை.
அப்போது அந்த பெண்ணுக்கு அறிமுகமான கரிசல்குளத்தை சேர்ந்த ஒருவர் காரில் அந்த வழியாக வந்துள்ளார். அவர் அந்த பெண்ணிடம் வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி, காரில் ஏற்றி சென்றுள்ளார். பாலவநத்தம்-கோபாலபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி 2 பேரும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த பெண்ணை தாக்கினர். இதை தடுக்க வந்த அந்த பெண்ணுடன் வந்த நபரை சரமாரியாக அந்த கும்பல் தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணை கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். மறைவான இடத்திற்கு சென்ற அந்த கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த பெண் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு டாக்டர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அந்த பெண் அழுதுள்ளார். உடனே இதுகுறித்த தகவல் அருப்புக்கோட்டை டவுன் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டது தெரியவந்தது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 50), ராம்குமார் (25), ஜெயகுமார், அழகுமுருகன்(19), போராளி என்ற பிரபாகரன், விஜயன் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 7 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன், விஜயனை தவிர மற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற பெண்ணை கடத்தி நகை பறிக்கும்போது பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பிரபாகரன், விஜயன் ஆகிய 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி.
- பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு தடை விதித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- அகில இந்திய அளவிலான ஹேக்கத்தான் இறுதிப்போட்டி நடந்தது.
- இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
சிவகாசி
மத்திய அரசால் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்'' போட்டியானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் உள்ள புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான முயற்சியாக நடத்தப்ப–டுகிறது.
மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. இணைந்து இந்த போட்டியை வருடம் தோறும் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் என இரு பிரிவுகளாக நடத்துகிறது. சாப்ட்வேர் பிரிவுக்கான இறுதிசுற்று சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் வருகிற 25-ந் தேதி மற்றும் 26 -ந் தேதிகளில் நடக்கிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள பஞ்சாப், புதுடெல்லி, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கோவா, தெலுங்கானா, கர்நாடகா, பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்குகிறார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகிக்கிறார்.
சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ.யை சேர்ந்த உத்யன் மவுரியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி, வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை ஆன்லைனில் கலந்துரையாடுகிறார். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
- விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (23), ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மம்சாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நரிக்குடி சமத்துவ புரத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 59). மது பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த துரைராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் மாரி கொடுத்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள வீரசோழனைச் சேர்ந்தவர் பிச்சை (51). கூலித்தொழிலாளியான இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதனால் விரக்தியடைந்த பிச்சை வீட்டின் அருகே உள்ள கண்மாய்க்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் முத்துமாரி (57). குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் விபத்தில் மில் தொழிலாளி இறந்தார்.
- இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் வெங்கடேஷ் (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு வெங்கடேஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில் உள்ள சத்திரப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே சென்றது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






