என் மலர்
விருதுநகர்
- ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டத்தில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- முடிவில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர சபை கூட்டம் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடந்தது. முதல் தீர்மானமாக சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் மக்கள் சேவை பணிகளை 2022- 23-ம் ஆண்டுக்கான தமிழக அரசால் சிறந்த முதல் நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை ரூ.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர், திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குநர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியின் உள் மற்றும் வெளி அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 63 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம் பொறியாளர் தங்கபாண்டியன், மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர் சந்திரா, சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- ரூ.6 கோடி மதிப்பீட்டில் நவீன திருமண மண்டபத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- ரூ.6 கோடி மதிப்பீட்டில் விரைவில் திருமண்டபம் அமைக்க வரைபடம் மற்றும் மதிப்பீடு தயார் செய்யப்படும் என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோவில் நிலத்தில் குளிர்சாதன வசதியுடன் நவீன திருமண்டபம் அமைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைச்சர் மதுரை அறநிலையத்துறை இணை ஆணையரிடம் கூறி திருமண்டபம் அமைப்பது குறித்து கோப்பு தயார் செய்ய கூறியிருந்தார், அதனைத் தொடர்ந்து மாயூரநாதர் சுவாமி கோவில் அருகில் உள்ள கோவில் நிலத்தில் ஏழை, எளிய மக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்தும் நோக்கத்தில் திருமண மண்டபம் அமைய உள்ள இடத்தை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், ஏழை எளிய மக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்த தனியார் திருமண்டபங்களுக்கு இணையாக குளிர்சாதன வசதியுடன் நவீன திருமண்டபம் அமைக்கப்படுகிறது.
இது விருதுநகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்ட கலந்துரையாடல் அரங்கம் போன்று 1000 பேர் அமருவது போலும், 300 பேர் அமர்ந்து உணவருந்தும் கூடத்துடன் வரைபடம் அமைக்க வேண்டும் என்றார்.
மேலும் இந்த திருமண்டபம் அமைக்க ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 கோடி வழங்குவதாகவும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
இணை ஆணையர் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து ரூ.4 கோடியுடன் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் விரைவில் திருமண்டபம் அமைக்க வரைபடம் மற்றும் மதிப்பீடு தயார் செய்யப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் ராஜா, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா கவுன்சிலர் செந்தில்குமார், மனோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கலசலிங்கம் பல்கலை கழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் தொடங்கியது.
- பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களிடம் கலந்துரையாடி வாழ்த்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் ஸ்மாட் இந்தியா ஹேக்கத்தான்-2022, மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மத்திய அரசு புதிய கண்டுபிடிப்புகள் குழுவும், ஏ.ஐ.சி.டி. ஆகியவற்றுடன் இணைந்து 5 நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழா பல்கலைக்கழக துணைத்தலைவர் சசிஆனந்த் தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக மல்ட்டிகோர்வேர் நிறுவனத்தின் துணைத்தலைவர் சுப்ரமணியம் பங்கேற்று பேசினார்.
பதிவாளர் வாசுதேவன், ஆலோசகர் ஞானசேகரன் கலசலிங்க பல்கலைகழக புதிய கண்டுபிடிப்பு குழு தலைவர் டெனி கலசலிங்கம் ஆகியோர் பேசினர். பல்கலை சர்வதேச உறவு இயக்குநர் சரசு,கல்வித்துறை இயக்குநர் கோடீஸ்வரராவ் மற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களிடம் கலந்துரையாடி வாழ்த்தினார்.
- ராஜபாளையம் அருகே பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
- இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜ குல ராமன் கண்மாயில் போர்வெல் அமைத்து கிராம மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனுமதி பெறாமல் ஒருவர் போர்வெல் அமைத்து குடிநீர் எடுப்பதால் கீழ ராஜகுல ராமன் கிராம மக்களுக்கு சரியாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் இன்று காலை கீழராஜகுலராமன் சாலையில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை தாசில்தார் ரங்கநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடிநீரை அனுமதியின்றி எடுக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாசில்தாரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தாசில்தார் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் சப்ளை சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும்.
- 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் http://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின் படி, 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04562-252701-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
- சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
சிவகாசி
மத்திய அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு இணைந்து ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022'' என்ற தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மென்பொருள் தொழில்நுட்ப போட்டி சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 2 நாட்கள் நடந்தது.
காணொலி காட்சி மூலம் நடந்த தொடக்கவிழாவில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்,ஏ.ஐ.சி.டி.இ.சேர்மன் பேராசிரியர் அனில் சகஸ்ரபுதே, மத்திய கல்வி அமைச்சரக செயலாளர் சஞ்சய்மூர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ. துணைத்தலைவர் பேராசிரியர் பூனியா, பெர்சிஸ்டன்ட் சிஸ்டம் நிறுவனர் ஆனந்த் தேஷ் பாண்டே, மத்திய கல்வி அமைச்சரக செயலாளர் மோனிகா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரி உள்பட நாடு முழுவதும் 75 அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் இந்த இறுதி சுற்று திறன்களை அறியும் இறுதி போட்டி நடைபெறுகிறது. பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். ஆர்த்தி ஸ்கேன்ஸ் இயக்குநர் அருண்குமார், கல்லூரியின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். இதில் மத்திய கல்வி அமைச்சரகத்தை சேர்ந்த, ஏ.ஐ.சி.டி.இ.-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மைய தலைவர் உத்யன் மவுரியா, ஐ.சி.டி.அகாடமியின் தமிழ்நாடு கிளை தலைவர் பூர்ணபிரகாஷ், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் பிரதிநிதி சோம சுந்தரம், புராடக்ட் டிசைனர் தாமரைக்கண்ணன், ஹேக்கத்தான் அலுமினி, டீன் மாரிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இறுதி சுற்றில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மக்கள் தொடர்பு திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர், சங்கரலிங்காபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். இதில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் வருவாய்த்துறை மூலம் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம் 2 பயனாளிக்கு தலா ரூ.1000 மதிப்பிலும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 4 பயனாளிக்கு தலா ரூ.1000 மதிப்பிலும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை 2 பயனாளிக்கு தலா ரூ.1000 மதிப்பிலும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.24,000 மதிப்பிலும், பட்டா மாறுதல் உத்தரவு 4 பயனாளிகளுக்கும், உணவுப்பொருட்கள் வழங்கல் துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் இலவச தையல் எந்திரம் 6 பயனாளிகளுக்கு ரூ.32 ஆயிரத்து 868 மதிப்பிலும், இலவச தேய்ப்பு பெட்டி 5 பயனாளிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 355 மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு காய்கறி பரப்பு விரிவாக்கம் மற்றும் கொய்யா, மா, பாகல் விதைகளும், வேளாண்மைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு மின் விசை தெளிப்பான், தென்னங்கன்று, குதிரைவாலி விதை ஆகியவைகளும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு கன்று பெட்டகமும், 3 பயனாளிகளுக்கு தீவன விதைகளும் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு 89 ஆயிரத்து 223 மதிப்பலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 20 மனுக்கள் ஏற்கப்பட்டது. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் அரசின் நலத்திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட செயல்விளக்க கண்காட்சியை கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டார்.
இந்த முகாமில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி ராஜசேகரன், வட்டாட்சியர் செந்தில்வேலன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டில் குட்கா, புகையிலையை பதுக்கி வைத்து ராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
- மாரிமுத்துவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் வடக்கு மலையடிபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக ராஜபாளையம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி உத்தரவின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முனிசிபல் காலனியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவர் தனது வீட்டில் குட்கா, புகையிலையை பதுக்கி வைத்து ராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாரிமுத்துவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
- 40 வயது பெண்ணை கடத்தி ஒரு கும்பல் ஆவார்.
விருதுநகர்
கடந்த 2 நாட்களுக்குமுன்பு அருப்புக்கோட்டை பகுதியில் 40 வயது பெண்ணை கடத்தி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.
இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரை மாவட்டம் பேரையூர் வெங்கடாஜலபுரத்தை சேர்ந்த போராளி என்ற பிரபாகரன், விஜயன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இன்று காலை விருதுநகர் ேஜ.எம்.-2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முன்பு சரண் அடைந்தனர்.
- மரத்தில் கார் மோதிய விபத்தில் ஓட்டல் அதிபர் பரிதாப இறந்தார்.
- உயிருக்கு போராடிய அவரது மனைவி சாந்திலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர்
சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 51).இவர் அதே பகுதியில் இயற்கை உணவகம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவர் தனது மனைவி சாந்திலட்சுமியிடம் காரில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் இருவரும் நள்ளிரவு நேரத்தில் காரில் ஊருக்கு புறப்பட்டனர். இரவு 1.30 மணியளவில் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் கார் சென்றுகொண்டிருந்தது. உப்போடை பகுதியில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த பஞ்சாட்சரம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய அவரது மனைவி சாந்திலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அதனை கடத்திய காளிராஜ் (28), ரேவந்த் (27) ஆகிய 2 பேரை ைகது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருச்சுழி அருகே உள்ள மேலக்கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது அங்குள்ள பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 94 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் பூமிநாதன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஸ்ரீவில்லி புத்தூர் ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் 14 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர் பால கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே நத்தத்துபட்டி பகுதியில் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்திய காளிராஜ் (28), ரேவந்த் (27) ஆகிய 2 பேரை ைகது செய்தனர்.
- தொழிலாளி மர்மச்சாவு அடைந்தார்.
- ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மார்க்கநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (75). பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கருப்பசாமி என்பவர் ஆதரவின்றி இவரிடம் வந்தார். தங்கவேல் அவருக்கு வேலை கொடுத்து வீட்டிலேயே தங்க அனுமதி அளித்தார்.
கருப்பசாமியை தேடி யாரும் வரவில்லை. இந்த நிலையில் நேற்று விஷேசத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கருப்பசாமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை தேடிச்சென்ற போது அங்குள்ள மெயின் ரோட்டில் காயங்களுடன் கருப்பசாமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே தங்கவேல் அவரை மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்றார். ஆனால் சிறிது நேரத்திலேயே கருப்பசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் மோதி கருப்பசாமி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.






