என் மலர்
விருதுநகர்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கு நடந்தது.
- இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ''காளீஸ் கணித மன்றம்'' சார்பில் ''தரவு பகுப்பாய்வின் தற்போதைய போக்கு'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் வீணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கணிதவியல் துறைத் தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்வு என்பது மூலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நமக்குத் தேவையான முடிவுகள் மேற்கொள்ளப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும். தரவு பகுப்பாய் விற்குப் பயன்படக்கூடிய கருவிகள் மற்றும் நுட்பங்கள் பற்றி விளக்கினார். தரவு பகுப்பாய்விற்கு உறுதுணையாக இருக்கும் மென்பொருள்களின் வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றின் நன்மைகள் மற்றும் வரம்புகள் பற்றி எடுத்துரைத்தார். தரவு பகுப்பாய்விற்கு நிகழ் நிலையில் கிடைக்கப்பெறும் மென்பொருள்கள் பற்றி செய்முறை விளக்கம் அளித்தார். "Tableau" என்ற மென்பொருளின் Excel பதிப்பு பற்றி விரிவான செய்முறை விளக்கம் அளித்தார்.
இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.
- இளம்பெண் உள்பட3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை சபாஷ்புரத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ஹரினி(18). இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இதனால் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமன் அளித்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(24). மில் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. மாரீஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த மாரீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த செந்தில்குமார்(23). அச்சகத்தில் வேலை பார்த்தார். இவருக்கு சில ஆண்டுகளாக உடல்நலம் பாதித்து இருந்துள்ளார். இதனால் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
- விபத்தில் சிக்கிய 5 பேரும் பலியாகி இருப்பது சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கனஞ்சாம் பட்டியில் மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
கடந்த 19-ந் தேதி வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்த சத்திரப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி, அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.
வெடி விபத்தில் சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி (வயது26), மாரிமுத்து (50), ராஜ்குமார் (35) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். 60 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்த இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 21-ந் தேதி மாரிமுத்து, கருப்பசாமி ஆகிய 2 பேர் பரிதாபமாக இருந்தனர்.
ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய 5 பேரும் பலியாகி இருப்பது சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே வெம்பக் கோட்டை போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் மாயக்கண்ணன், அவரது மனைவி ஆறுமுகத்தாய், ஒப்பந்ததாரர் கந்தசாமி, போர் மேன் கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடக்கிறது.
- இன்று முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை நடக்கிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.
சிறப்பு மருத்துவர்கள் குழு முகாமிற்கு வருகை தந்து மாணவர்களின் இயலாத் தன்மைக்கேற்ப மருத்துவச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், UDID அட்டை பதிவேற்றம் செய்தல் உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரைத்தல், அறுவைச் சிகிச்சை பரிந்துரை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தல் போன்ற செயல்பாடுகள் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த முகாம் இன்று (24-ந் தேதி) விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், 27-ந் தேதி காரியாபட்டி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 31-ந் தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பிப்ரவரி 2-ந் தேதி திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
7-ந் தேதி அருப்புக் கோட்டை சி.எஸ்.ஐ (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியிலும், 9-ந் தேதி சிவகாசி எ.வி.டி. நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், 14-ந்தேதி ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், 16-ந் தேதி சாத்தூர் எட்வர்டு நடுநிலைப் பள்ளியிலும், 21-ந் தேதி வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ந் தேதி வத்ராயிருப்பு ஒன்றியம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 28-ந் தேதி ஸ்ரீவில்லி புத்தூர் ஒன்றியம் ஊரணிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது.
முகாமிற்கு வரும்பொழுது மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம்-8, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல்-2, ஆதார் கார்டு அசல் மற்றும் நகல் - 2, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். மேலும் ஏற்கனவே தேசிய அடையாள அட்டை வைத்திருப்போர் அசல் மற்றும் அனைத்துப் பக்கங்களின் நகல்கள் கொண்டு வர வேண்டும்.
இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறளாளி மாணவர்களும், பெற்றோர்களும் பயனடையலாம் என்று விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
- விருதுநகரில் நகை சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி செய்த 2 பேர் மதுரை கோர்ட்டில் அடைக்கப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், முத்துமாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த கருப்பசாமி உள்ளிட்ட சிலர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நகை சீட்டு நடத்தி ரூ. 43 லட்சம் மோசடி செய்ததாக நகைக்கடை அதிபர் பாலாஜி வரதராஜன் மற்றும் பால விக்னேஷ், பாவாளி பவுன்ராஜ், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சுப்பிரமணியன் மனைவி முத்துமாரி ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பவுன்ராஜ், முத்துமாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாலாஜி வரதராஜன் உள்ளிட்ட 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பால விக்னேஷ், கார்த்திகேயன் ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது.
- இவர்களுக்கு 5-ம் தொகுதி பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5-ம் தொகுதி பயிற்சி கிருஷ்ணன் கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் நடந்தது. வட்டார வளமைய மேற்பர்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கினார். ஆசிரிய பயிற்றுநர் செல்வம், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளித் துணை ஆய்வாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார். பயிற்சியைத் தொடங்கி வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் பேசினார். பயிற்சியின் கருத்தாளர்களாக கிறிஸ்டி தங்கநாயகம், ஜஸ்டின் தங்கராஜ், வரமணி அப்பன்ராஜ், பிரைட்டி சிங் ஆகியோர் செயல்பட்டனர். இதில் 110 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 5-ம் தொகுதி பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இந்த பேரணியில் 32 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சிவகாசி
சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றம் சார்பில் கல்லூரி வளாகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள் கட்டாய ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புனர்வை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இதை முதல்வர் பாலமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாலை விபத்துக்களைத் தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி அறிவுறுத்தினார். இந்த பேரணியில் 32 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- கதவை திறந்து சுஹைல் வெளியில் வந்ததும் அனுராம் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டான்.
- வீட்டில் திருடன் சிக்கிய வீடியோவையும் விலாவாரியாக விளக்கி புதிய வீடியோ ஒன்றை யூடியூபர் சுஹைல் வெளியிட்டுள்ளார்.
கோவை:
சினிமா நட்சத்திரங்களுக்கு போட்டியாக இன்று சமூக வலைதளங்களில் யூ டியூபர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு பெயரில் 'யூ டியூப் சேனல்' ஒன்றை தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியோ, இல்லை வீட்டில் இருப்பவர்களுடன் வீடியோ எடுத்தோ வெளியிடுகிறார்கள். சப்ஸ்கிரைபர்கள் அதிகரிக்க... அதிகரிக்க யூ டியூபர்களின் வாழ்வில் பணமழை கொட்ட தொடங்கி விடுகிறது. சினிமா நட்சத்திரங்களை போன்று புகழ் வெளிச்சமும் கிடைக்க தொடங்கி விடுகிறது.
இதனால் யூ டியூப் சேனல்களை தொடங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யூடியூப் சேனல்களை நடத்துவோர் தங்களின் ஒவ்வொரு அசைவுகளையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் என்பவர் 2 யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். "சுஹைல் விவாகர்", "சைபர் தமிழா" ஆகிய பெயர்களில் இவர் நடத்தி வரும் யூடியூப் சேனல்களில் பல வீடியோக்களை போட்டுள்ளார். தனது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள், சிறுவர்களின் விளையாட்டுகள் தொடர்பாகவும் வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கோவை கே.ஜி.சாவடி பிச்சனூர் பகுதியில் சுஹைல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றை கட்டினார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை எடுத்து தனது வீட்டுக்கு வழிகாட்டும் வகையில் விரிவான தகவல்களை அதில் தெரிவித்து இருந்தார்.
சுஹைலின் யூடியூப் சேனலை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். 19½ லட்சம் பேர் "சப்ஸ் கிரைப்" செய்து சுஹைலின் வீடியோக்களை லைக் செய்து வந்துள்ளனர்.
புதிதாக தான் கட்டியுள்ள வீடு தொடர்பாக சுஹைல் போட்டிருந்த வீடியோவில் தனது வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களையெல்லாம் தெரிவித்து இருந்தார். இதனை பலர் லைக் செய்து கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்கான அனுராம் என்ற 25 வயது வாலிபரும் சுஹைலின் யூடியூப் சேனலுக்கு மிகப் பெரிய ரசிகராக இருந்துள்ளார். சுஹைல் போட்டிருந்த புது வீடு வீடியோவை அனுராமும் பார்த்தார். அப்போது அவருக்கு கோவையில் உள்ள சுஹைலின் வீட்டுக்கு சென்று கொள்ளையடிக்கும் எண்ணம் ஏற்பட்டது.
இதையடுத்து புதுச்சேரியில் இருந்து அவர் கோவைக்கு பயணமானார். சுஹைலின் புது வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் சென்ற அனுராம் நைசாக வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார்.
பின்னர் அனுராம் நேற்று காலை 6 மணி அளவில் எழுந்தார். மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கிய அனுராம் வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து சுஹைல் வெளியில் வந்ததும் அனுராம் மறைத்த வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த சுஹைல் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொள்ளையன் அனுராமை பொறி வைத்து மடக்கி பிடித்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவை கே.ஜி. சாவடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கையும் களவுமாக மாட்டிய கொள்ளையன் அனுராமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தனது வீட்டில் திருடன் சிக்கிய வீடியோவையும் விலாவாரியாக விளக்கி புதிய வீடியோ ஒன்றை யூடியூபர் சுஹைல் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இதுவும் 'லைக்'குகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. 'யூ டியூபர்'னா சும்மாவா...?
- விருதுநகர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினமான 26-ந் தேதி (வியாழக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1.4.2022 முதல் 31.12.2022 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம் - ஊரகம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். எனவே 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் சின்னத்தாய். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சின்னதாய் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகாசி அருகே உள்ள வலையப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா (19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் தென்காசி மாவட்டம் ஆவுடையாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக சாமி. இவரது மனைவி பத்மாவதி (32). இவர்களுக்கு 2 வயதில் கவியரசன் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று மனைவி-மகனை வெம்பக்கோட்டையில் உள்ள கோவிலுக்கு ஆறுமுகசாமி அழைத்து சென்றார். சாமி கும்பிட சென்ற பத்மாவதி மகனுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா போட்டி நடக்கிறது.
- முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா மன்றம் சார்பில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி நடந்தது.
வணிகவியல் துறை தலைவர் எம்.குருசாமி போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், இந்த வினாடி-வினா போட்டி மாணவர்களின் அறிவுத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் பலதரப்பட்ட போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு மாணவர்களுக்கு உதவும் என்றார்.
வினாடி-வினா மன்ற ஒருங்கிணைப்பாளர்- வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.கீதா போட்டியை நடத்தினார். வினாடி-வினா போட்டி 2 சுற்றுகளாக நடந்தன. முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.
அதில் 23 குழுக்களாக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெ ண்கள் அடிப்படை யில் 8 குழுக்கள் தேர்ந்தெடு க்கப்பட்டு இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் வரலாறு, பொது அறிவு, அரசியல் மற்றும் விளையாட்டு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.போட்டியின் முடிவில் முதல் பரிசை 3-ம் ஆண்டு வணிகவியல் துறை (நிறுமச் செயலர்) மாணவிகளான ஆர்.ஜனனி, எஸ்.சுவாதி ஆகியோர் வென்றனர். 2-ம் பரிசை 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவிகள் எம்.தேவதர்சினி, கே.எம்.ஹரிணி ஆகியோர் வென்றனர்.
3-ம் பரிசை 2-ம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் ஆர்.விஷ்வா, முதலாமாண்டு வேதியியல் துறை மாணவர் எம்.மணிபாலன் ஆகியோர் பெற்றனர். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர்
கே.தினேஷ் குமார் வரவேற்றார். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜி.பால சுந்தர் நன்றி கூறினார்.வினாடி-வினா, காளீஸ்வரி கல்லூரி, Quiz, Kalishwari College
- சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இறந்தார்.
- இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பட்டாசு தயாரிக்கும் பணியில் திருத்தங்கல் மேலமாட வீதியை சேர்ந்த ரவி(வயது58), சாமுவேல் ஜெயராஜ் உள்பட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அவர்கள் ஆலையில் உள்ள தனி அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதால் திடீரென தீப்பிடித்தது.
இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்தன. இதன் காரணமாக கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது. இதில் சிக்கிய ரவி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் சாமுவேல் ஜெயராஜூம் படுகாயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சாமுவேல் ஜெயராஜை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இருந்த போதிலும் சிகிச்சை பலனிளிக்காமல் சாமுவேல் ஜெயராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கிய ரவி ஏற்கனவே பலியான நிலையில் தற்போது சாமுவேல் ஜெயராஜூம் பலியாகிவிட்டார். இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.






