என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.
    • மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக உள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் கிராமத்தில் கடந்த 2009-ல் தி.மு.க. ஆட்சியின் போது ரூ.2.46 கோடி செலவில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்டு 12 வருடங்களுக்கும் மேலான நிலையில் சமத்துவபுரத்தில் எந்தவொரு மராமத்து பணிகளும் மேற்கொள் ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு திட்டம் 2022 -23 நிலை-2 திட்டத்தின் கீழ் நரிக்குடி சமத்துவ புரத்தில் உள்ள வீடுகளை புனரமைக்க வேண்டி நரிக்குடி யூனியன் பி.டி.ஓ.,வாக இருந்த பிரின்ஸ் தலைமையிலான அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிப்புக்கு ஏற்றவாறு நிதிகளை வழங்கும் வகையில் கடந்த 1 வருட காலமாக ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன் பின்னர் சமத்துவ புரத்தில் குடியிருந்து வரும் பயனாளிகளே தங்களது வீட்டிற்கான மராமத்து பணிகளை மேற்கொண்டு 2 மாத காலத்திற்குள் பணி களை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் பாதிப்புக்கு தகுந்தவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்பட்ட தாக தெரிகிறது.

    ஆனால் மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக இருப்ப தால் சேதமடைந்த வீடுகளில் வர்ணம் பூசுதல், சிறு சிறு பழுதுகள் பார்த்தல் போன்ற மராமத்து பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும், கதவு, கழிவறை, வீட்டின் மேற்கூரையில் தட்டு ஓடு பதித்தல் போன்ற ஒவ்வொரு பணிக்கும் வீட்டின் உரிமையாளர்கள் செலவிட ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு நிர்ணயம் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால் சிமெண்டு, மணல்,தட்டு ஓடுகளின் தற்போதைய விலைவாசி உயர்வு, வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி ஆகியவற்றை வைத்து கணக்கிட்டு பார்க்கும் போது தற்போது வழங்கப்பட்டுள்ள குறைவான தொகையால் மராமத்து பணிகளை இன்னும் தொடங்க முடியாத சூழ்நிலையே உருவாகி இருப்பதாக அந்த பகுதி பெண்கள் தெரிவித்தனர்.

    • தொழிலாளி மர்மமாக இறந்தார்.
    • லூர்துராஜ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவரது மகன் லூர்துராஜ்(வயது36). அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவரது முதல் மனைவி சில வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார். இதை யடுத்து லூர்துராஜ், பிரியங்கா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் லூர்து ராஜ் மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படு கிறது. இதில் பிரியங்கா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று லூர்து ராஜ் அதே பகுதியில் உள்ள ரோட்டில் கை, கால்களில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லூர்துராஜ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் செயல்பட்டு வரும் சேவுகன் என்பவரது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் மட்டும் மழை பெய்த நிலையில் இடி, மின்னல் அதிகமாக இருந்தது. மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் செயல்பட்டு வரும் சேவுகன் என்பவரது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் அனுப்பங்குளம் பகுதியில் இடி, மின்னல் அடித்தப்படி இருந்தது. அப்போது சேவுகனின் பட்டாசு ஆலையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்னல் தாக்கி தீ பிடித்தது.

    இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    மேலும் பட்டாசு ஆலையின் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. பட்டாசு ஆலை பூட்டப்பட்டிருந்த நேரத்தில் மின்னல் தாக்கி தீ பிடித்ததால் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
    • தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் முத்துராமலிகாபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது97). இவர் முதலில் ராமசாமி என்பவரை திருமணம் செய்துள்ளார். இதில் அன்னலட்சுமி (75) என்ற மகள் உள்ளார்.

    ராமசாமி 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனலட்சுமி, முத்துசாமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு மாரியப்பன், பாலகிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அவரது வீட்டில் தனலட்சுமியும், அன்னலட்சுமியும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் சிவராமச்சந்திரன் என்பவர் சந்தேகம் அடைந்து மாரியப்பனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாரியப்பனும், வேலுச்சாமி மகன் சக்தி குமார் என்பவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு தனலட்சுமியும், அன்னலட்சுமியும் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

    அவர்கள் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர்கள் 2 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இது பற்றிய புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, அன்னலட்சுமி ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமி வயது முதிர்வு காரணமாகவும், அன்னலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என்றும், அவர்கள் ராணுவத்தில் பணியாற்றி இறந்த தங்களது உறவினர் ராமசாமி என்பவரின் பென்ஷனை பெற்று வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

    தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் அவர்கள் வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர். இதனால் தாயும், மகளும் இறந்து 2 நாட்களுக்கு பின்னரே தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

    தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாரிடம் ரகளை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் திருச்சி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மல்லாங்கிணறு முடியனூரைச் சேர்ந்த பெரிய முத்து என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரை அவதூறாக பேச தொடங்கினார். மேலும் போலீசாரை வாகன சோதனை செய்யவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்கு பையை போலீசார் சோதனையிட முயன்றனர்.

    அப்போது அந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு அவர் தப்பி ஓடி விட்டார். அந்த சாக்கு பையில் 27 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.

    • தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • மணிகண்டராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கானதாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டப்பணியின் தொடக்க விழா சங்கரன்கோவிலில் நடந்தது.

    இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா, மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தலைமை பொறியாளர் ரகுபதி, தனுஷ்குமார் எம்.பி.,

    தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் ராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத்திட்ட தொடக்க விழா மற்றும் ராஜபாளையம் ஒன்றிய கிராமப்பகுதிகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்றனர்.

    இதில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மாரிமுத்துவை கைது செய்தனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெயமணி (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாலமுருகனுடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை பார்ப்பவர் மாரிமுத்து (21). இவர் அடிக்கடி பாலமுருகன் வீட்டுக்கு வந்து குழந்தையை கொஞ்சுவது போல் நோட்டமிட்டு கொண்டு இருப்பாராம். இதனை ஜெயமணி கண்டித்துள்ளார். இந்த நிலையில் பாலமுருகன் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த மாரிமுத்து ஜெயமணியிடம் அத்துமீறி நடக்க முயன்றார். ஆனால் ஜெயமணி வீட்டின் வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார்.

    இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் ஜெயமணிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு மாரிமுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

    • கல்குவாரியில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • குழு உறுப்பினர் திருமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் மதுரை-கொல்லம் 4 வழிச்சாலை பணிக்காக கல் குவாரி அமைக்கப்பட்டது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்குவாரியில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, 4 வழிச்சாலை பணிக்காக அமைக்கப்பட்ட கல் குவாரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களிடம், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கல்குவாரியில் பணிகளை செய்ய அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜை-அன்னதானம் செய்தனர்.
    • பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற வேண்டியும், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டியும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமையில் இந்த வழிபாடு நடந்தது. அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    இதில் வேலாணூரணி ஊராட்சி மன்றத்தலைவர் அங்காள ஈஸ்வரி மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளை செயலாளர்கள், அணி செயலாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நேரு சிலைக்கு காங்கிரசார் மரியாதை செய்தனர்.
    • தலைவர் ராமர், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளைம்

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகில் உள்ள அவரது சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை கெலுத்தினர். இதில் நாகரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர், சங்கர் கணேஷ், ஐ.என்.டி.யு.சி. தலைவர் பிரபாகரன், மாணவர் காங்கிரஸ் ஸ்ரீமான்ராமச்சந்திர ராஜா, நகர துணை தலைவர் சிவசுப்பிரமணியன், சேவாதளம் பச்சையாத்தான், ரவி, தயானந்தராஜா, வெங்கடேஷ், முருகேசன், சேத்தூர் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று விருதுநகர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் அய்யனார் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ், நகர துணைத் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் குமாரசாமி ராஜா மாலை அணிவித்தார்.இதில் மாநில காங்கிரஸ் மனித உரிமை பிரிவு செயலாளர் ராம அழகு, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் ராமர், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிதி நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம்-பொருட்கள் திருட்டப்பட்டது.
    • கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு இரு சக்கர வாக னங்களுக்கு கடன் அளித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு கடைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த முன்பணம் ரூ.1 லட்சம் மற்றும் வசூல் செய்த சீட்டு பணம் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை அலுவ லகத்துக்குள் வைத்து பூட்டி விட்டு பாக்கியராஜ் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை மீண்டும் அலுவலகத்தை திறப்ப தற்காக வந்தார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தில் வைத்து சென்ற ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணம் திருடுபோய் இருந்தது. மேலும் கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன. மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் பாக்கியராஜ் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் பல இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 11 யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினர்.
    • பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கூடுதல் தலைமை செயலர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா, மேலாண்மை இயக்குநர்(குடிநீர் வடிகால் வாரியம்) தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா,

    எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜ பாளையம் தங்கப் பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களை் சேர்ந்த 1,286 குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சேர்ந்த 45 வழியோர குடியிருப்புகளுக்கான ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    ரூ.48.39 கோடியில் சாத்தூர் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்க டைத் திட்டம், ரூ.251.20 கோடியில் ராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டங்களையும் அமைச் சர்கள் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் ராஜபா ளையம், ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சா த்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகள் பயன்பெற உள்ளன. இதற்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகில் தாமிரபரணி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட உள்ளது. நீர் சேகரிப்பு கிணற்றின் மூலம் பெறப்படும் நீர் புதிதாக வடக்கு குருவிக்குளம் நகர் கிராமத்தில் அமையவுள்ள 17.90 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள உயர்மட்ட மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து 2 பொது தரைமட்ட நீர் உந்து நிலையம் மற்றும் 163 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி களுக்கு 2519.29 கி.மீ நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதில் சாத்தூர் நகராட்சி 3 மண்டலங்கலாக பிரிக்கப்பட்டு, நகரத்தில் உற்பத்தியாகும் கழிவு நீரை பாதாள சாக்கடை திட்ட த்தின் மூலம் சேகரிக்கப்பட உள்ளது. இதில் 6 ஆயிரத்து 500 வீடுகளின் மூலம் உருவாக கூடிய கழிவுநீர் 26.958 கி.மீ. நீளமுள்ள கழிவு நீர் குழாய்கள், 1102 எந்திரங்களை இறக்கும் குழிகள் மற்றும் 3 கழிவு நீரேற்று நிலையங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, இருக்கன்குடி ரோட்டில், நகராட்சி குப்பை கிடங்கிற்கு அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

    ராஜபாளையம் பாதாள சாக்கடை திட்டத்தில் 38,586 வீட்டு இணைப்புகள் மூலம், 5,865 எந்திரத்தை இறக்கும் குழிகளில் இருந்து, கழிவு நீர் உந்து குழாய்கள் மூலம் பெறப்படும் கழிவு நீர், 3 நீரேற்றும் நிலையங்கள் மற்றும் 4 கழிவு நீர் உந்து எந்திரத்தை இறக்கும் குழிகள் மூலமாக உந்தப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படவுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், குழாய்கள் மூலம் கொத்தன்குளம் பகுதியில் அமைந்துள்ள பொதுப் பணித்துறை குளத்தில் சேர்க்கப்படும்.

    இந்த பாதாளச் சாக்கடைத்திட்டம் மூலம் நகராட்சியில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நிலங்கள் அசுத்தம் அடை யாமல் பாதுகாப்பான தாகவும், தூய்மையாகவும் அமையும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தலைமைப் பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், மதுரை) ரகுபதி, மேற்பார்வை பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், கோவில்பட்டி) செந்தூர்பாண்டி, நகர்மன்றத் தலைவர்கள் குருசாமி(சாத்தூர்), பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×