என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் பொன்பாப்பா பாண்டி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக கட்டிட வரைப்பட அனுமதி பெற ஊராட்சிமன்ற அலுவலகத்தை நாடினார்.

    அப்போது கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய பணத்துடன் இன்று காலை கீழராஜகுலராமன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொன்பாப்பா பாண்டி சென்றார். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் காளி முத்துவை சந்தித்து லஞ்ச பணத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.
    • வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது48). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் கொப்புசித்தம்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளார்.

    விஜயலட்சுமி பந்தல்குடியில் வசித்து வருவதால் கொப்புசித்தம்பட்டியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் உறவினர் பஞ்சவர்ணம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பஞ்சவர்ணம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் 3 காலி மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது சரமாரியாக வீசிவிட்டு தப்பினார். இதில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீட்டின் கதவு முன்பு மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கதவு, ஜன்னல் போன்றவை எரிந்து சேதமாயின.

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஜெய்சங்கர், அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு சிதறிக்கிடந்த வெடி குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.

    கடந்த ஊராட்சி மன்ற தேர்தலின்போது இவரது மனைவி தோல்வியடைந்தார். இது தொடர்பாக விஜயலட்சுமி தரப்புக்கும், தாமரைசெல்வன் தரப்புக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக விஜய லட்சுமிக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாமரை செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

    வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கவர்னர் மீது காங்கிரஸ் புகார் மனு கொடுத்தனர்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கி ரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை யிலான காங்கிரசார், விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் வடலூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்பு ணர்ச்சி காரணமாகவே சிலர் எதிர்க்கிறார்கள்.

    சனாதன தர்மத்தை ஏற்றாலும், எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்.

    யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டு மானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது என கருத்து தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்தை பதிவிட்டிருப்பதும் சமத்து வம், சமதர்மம் நிறைந்த மக்களாட்சி முறையில் உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் சர்ச்சையை ஏற்படுத் தும் வகையில் மதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்தி ருப்பதும் சட்டப்படி குற்றமா கும். எனவே தமிழக கவர் னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இளம்பெண், பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் வில்வராணி(வயது40), இலுப்பைகுளம் நடுநிலைப்பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் வில்வராணியின் தங்கை வீட்டில் தங்கி திருச்சுழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வெளியே செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் வில்வராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டையதேவன் பட்டியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி முத்து லட்சுமி(27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. சிவா திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால் முத்துலட்சுமி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    அங்கிருந்த அவர் குழந்தைகளை விட்டுவிட்டு மாயமானார். எங்கு சென்றார் என தெரிய வில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு முத்துலட்சுமியின் தந்தை கண்ணன், நத்தம்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள ஏ.புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா(80). வெளியே செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மகள் தமிழ்செல்வி அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாற்றுத்திறனாளி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள முத்து ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராதாகுமாரி (வயது55). இவருக்கு சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதனால் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் அளவுக்கு அதிகமாக மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராதாகுமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிகிறத்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே பெரிய பேராளி வடக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் சாந்தி(வயது48). இவர் பிறவிலேயே மாற்றுத் திறனாளி. சமீபத்தில் இவரது தாய் இறந்தார். இதனால் தன்னை பராமரிக்க ஆள் இல்லை என நினைத்து சாந்தி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் 2 முறை தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை காப்பாற்றினர்.

    இந்தநிலையில் தந்தையும், சகோதரரும் வேலைக்கு சென்றிருந்தபோது சாந்தி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பதற்குள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் வடிவேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் தர்மர்(வயது70). இவர் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்களை தாக்கி நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி தாலுகா கட்டனாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அகத்தீஸ்வரன்(வயது42). இவர் பிள்ளையார்குளம் கல் குவாரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது அங்கு வந்த கல்லங்குளம் பகுதியை சேர்ந்த சோனை, ராமச்சந்திரன் உள்பட 6பேர் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.

    அப்போது முதலாளியிடம் சென்று பணம் கேளுங்கள் என்று அகத்தீஸ்வரன் அவர்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் அகத்தீஸ்வரனை தாக்கினர்.

    அதனை தடுக்க வந்த அகத்தீஸ்வரனின் சகோதரருக்கும் அடி-உதை விழுந்தது. மேலும் அவரிடம் இருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் அகத்தீஸ்வரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவநேரி பாலத்தில் நடைபாதைகள் சீரமைக்கப்பட்டது.
    • அந்த நடை பாதைகளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் மருத்துவநேரி கண்மாய் உள்ளது. மிகப்பெரிய கண்மாயான இதன் நடுவே புத்தூர் செல்லும் சாலை உள்ளது. சமீபத்தில் தரைமட்ட ரோட்டை உயர்த்தி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 பக்கமும் நடைபாதை களுடன் பாலம் அமைக்கப்பட்டது.

    அதில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நடைபாதைகள் சேதமடைந்ததால் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கி டையே நடைபாதைகளை சீரமைத்து தரும்படி அந்தப் பகுதி மக்கள் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மருத்துவநேரி பாலத்தின் இருபுறமும் உள்ள நடை பாதைகள் சீரமைக்கப்பட்டு பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டு பாலம் பொலிவுபடுத்தப்பட்டது. இதனால் அந்த நடை பாதைகளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகிறார்கள்.

    • கூட்டுறவு விற்பனை இணைய நிறுவனம் உர வகைகளை காட்சிப்படுத்தியது.
    • ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உர வகைகள், ஏடி.டி.42 வகை நெல்விதை, வேப்பம் புண்ணாக்கு துகள்கள் மற்றும் மண்புழு உரம் காட்சிபடுத்தப்பட்டது.

    மேலும் இந்த உரங்கள் தொடர்பான தெளிவான விளக்க உரையுடன் கூடிய பதாகைகளும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விவசாயிகள் புதிய வகை உரங்களை ஆர்வமுடன் விசாரித்து வாங்கி சென்றனர். இந்த கண்காட்சி அரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் பார்வையிட்டார்.

    இந்த கூட்டத்தில் விருது நகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் இணைப்பதிவாளர் ராஜலட்சுமி, இணை பதிவாளர், அலுவலக துணை பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சந்தனராஜ், அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லி புத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் காந்திராஜ், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய விருதுநகர் மண்டல மேலாளர் ஜீவானந்தம், கூட்டுறவு ஒன்றிய பிரசார அலுவலர் செல்வராஜன் மற்றும் ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    • டாஸ்மாக் கடை கொள்ளையில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பள்ளிமடம் பகுதியிலுள்ள அரசு டாஸ்மாக் கடைக்குள் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி வீச்சரிவாள், வாள் உள்ளிட்ட போன்ற பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல், கடையில் இருந்த விற்பனையாளர்களை வெட்டிவிட்டு விற்பனை பணம் ரூ.6லட்சத்து 40ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் மதுக்கடையில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் டாஸ்மாக் கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மேலாயூர் பகுதியை சேர்ந்த தர்ஷிக்சரண்,சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொள்ளை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் போலீசாரால் தோடப்பட்டு வந்த சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பிரவீன் (22) என்பவர் சிக்கினார். செல்போன் சிக்னல் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிந்த திருச்சுழி போலீசார், அங்கு அதிரடியாக சென்று அவரை கைது செய்தனர்.

    அவரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டம் தீட்டியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • அமைச்சர் புதிய கால்நடை மருந்தகங்களை திறந்து வைத்தார்.
    • துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் ரூ. 121.50 லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரகுராமன் கலந்து கொண்டார்.

    விழாவில் அமைச்சர் கூறியதாவது:-

    நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும். அதற்கு இணையாக கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்க ளுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் அதிக அளவில் கால்நடைகளை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் விதமாக வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, ஆனைக்குட்டம், சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், திருவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் தலா ரூ. 40.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 121.50 லட்சம் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கால்நடை மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி படுகாயமடைந்தார்.
    • சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள மேட்ட மலையில் சிவகாசி சாத்தூர் மெயின் ரோட்டில் சரக்கு வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளா னது. இதில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள், 3 சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதிய சரக்கு வாகனம், சாலையோர டீக்கடையில் அமர்ந்திருந்த பட்டாசு ஆலை தொழிலாளி சோலையப்பன்(வயது68)என்பவர் மீதும் மோதியது.

    இதில் படுகாய மடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசார ணையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் நெல்லையை சேர்ந்த சஞ்சய் காந்தி என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் சஎன்று சுதாகர்ரெட்டி உறுதி கூறினார்.
    • மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    தமிழகத்திற்கான பா.ஜ.க. மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து தரப்பினருக்குமான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நாங்கள் மக்களிடம் இதை தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் நடத்தி வருகிறோம். வர இருக்கின்ற நாடாளு மன்ற தேர்தலில் தொடர்ந்து பிரதமர் மோடி நீடிக்க ஆதரவு தருமாறு கேட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பல்வேறு தகவல்களை சொல்லி வருகிறார். நாங்களும் வாக்கு வங்கிக்காக தான் பேசி வருகிறோம். ஆனால் செய்த சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறோம்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. விருதுநகர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும்.

    விருதுநகர் அருகே பட்டம் புதூரில் அறிவிக்கப் படட ஜவுளி பூங்கா திட்டமும் நடைமுறைக்கு வரும். சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தை பொறுத்தமட்டில் அமித்ஷா அறிவித்தபடி வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க. தலைமைக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

    செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் இருக்கும் போது அவர் மீது மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணை கோரினார். ஆனால் தற்போது அதனை எதிர்க்கிறார். தி.மு.க.வில் சேர்ந்தால் ஊழல் மாயமாகி விடும் என்பது முதல்வரின் கருத்தாக உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×