என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
    • இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் இரவு 10 மணியளவில் ஐஸ் சாப்பிட்ட சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    அடுத்தடுத்து ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 3 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மொத்தம் 35 சிறுவர், சிறுமிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    குல்பி ஐசில் ஏதேனும் மயக்க மருந்து கலந்துள்ளதா? அல்லது கெட்டுப்போன ஐசை வாங்கி சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் குல்பி ஐஸ் விற்பனை செய்த மர்ம நபரை விக்கிரவாண்டி போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் முட்டத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இன்று காலை காட்டுச் சிவிரி ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.
    • அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இன்று காலை காட்டுச் சிவிரி ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது புதர் பகுதியை தூய்மை செய்ய முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு இருந்து வெளியேறிய விஷ தேனீக்கள் அங்கு பணிபுரிந்து வந்த பெண்களை விரட்டி விரட்டி கொட்ட ெதாடங்கியது.இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்துள்ளனர்.இதன் காரணமாக அவர்கள் வலி தாங்க முடியாமல் அலற தொடங்கினர்.

    சில பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர்.இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் படுக்கை கிடைக்காமல் காயமடைந்தவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விஷத்தேனீக்கள் கொட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீர தீர செயல்புரிந்த குழந்தைகள் பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • மத்திய அரசால் பதக்கம், சான்றிதழ், மற்றும் 1,00,000 ரொக்கப்பரிசுடன் வழங்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமூகசேவை போன்ற துறைகளில் வீர தீர செயல்புரிந்த குழந்தைகள் பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் 2024-ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமூகசேவை போன்ற துறைகளில் வீர தீர செயல்புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசால் பதக்கம், சான்றிதழ், மற்றும் 1,00,000 ரொக்கப்பரிசுடன் வழங்கப்படுகிறது. எனவே தகுதியுள்ள 18 வயதிற்குட்பட்ட இந்திய குடிமகனாக இருக்கும் குழந்தைகள் இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 31-ந்தேதி மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்திட மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்்ள செய்தி க்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
    • பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் நகராட்சியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பொது போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் எம்.சக்கரபானி, அர்ஜுனன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, உதவி ஆணையர் (கலால்) சிவா உட்பட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விழுப்புரம் நகரத்தில் உள்ள பழைய பஸ் நிலையம் அருகில் அரசியல் கட்சியினர், ஊழியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்பினர்கள் பொது கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு மாறாக மேற்படி நிகழ்ச்சிகளை நடத்திட உரிய இடத்தினை தெரிவு செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் மேற்படி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி வழங்கிட போலீஸ் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. புதிய இடத்தில் மேற்படி நிகழ்ச்சிகளை நடத்துவதில் இடர்பாடுகள் ஏதேனும் ஏற்படின் அவற்றை களைவ தற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் கலெக்டர் பழனி உறுதியளித்தார்.

    • கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் இன்று சாலை மறியல்
    • அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள பரதன் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் ஜனனி (வயது 16). ஆலம்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியவர் மீண்டும் வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் மாணவி ஜனனி பள்ளி சீருடையுடன் ஏரியில் உள்ள பொதுக் கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதானைக்காக அனுப்பி வைத்தனர். மேற்படி மாணவி தானாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசீனார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இறந்த ஜனனியின் உறவினர்கள் இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ேடார் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் குறித்து அவர்கள் கூறியதாவது:- பள்ளிக்கு சென்ற ஜனனி பள்ளி சீருடையுடன் கிணற்றில் பிணமாக மீட்ட வழக்கை ேபாலீசார் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இந்த சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

    • பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து பெங்களூருக்கு பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது. லாரியை தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். திண்டிவனம் அடுத்த பட்டணம் அருகே வளைவில் வேகமாக திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் திண்டிவனம் காஞ்சிபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக அக்கம் பக்கத்தினர் லாரியிலிருந்து டிரைவரை மீட்டனர். லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. நேற்று இரவு ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு மகா சர்வ ராஜ்ய தாயினி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் காட்சி அளித்தார். இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா... அங்காளம்மா... என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இரவு 11.30 மணியளவில் தாலாட்டுப் பாடல்கள் பாடி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர் பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தில் மாவட்ட கலெக்ட பழனி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா மற்றும் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • வானூர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
    • ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.

    விழுப்புரம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிந்துராம் (வயது 40). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் தங்கியுள்ளார். வீடு வீடாக சென்று நகை பாலீஷ் போடும் தொழில் செய்கிறார். இவர் வானூரை அடுத்த எடப்பாளையம் கிராமத்திற்கு நேற்று சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.

    அப்போது அக்கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி தனலட்சுமி (வயது 36), கைகளில் அணியும் தங்க வளையலுக்கு பாலீஷ் போட்டு தரும்படி கொடுத்தார். இதனை வாங்கிய பிந்துராம், தான் வைத்திருந்த ஒரு திரவத்தில் தங்க வளையலை போட்டு எடுத்தார்.வெளியில் எடுத்தபோது தங்க வளையல் 3 துண்டுகளாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, பிந்துராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பயந்து போன பிந்துராம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொதுமக்களிடம் கூறினார்.

    சந்தேகமடைந்த பொதுமக்கள் பிந்துராமை பிடித்து சென்று வானூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிந்துராம், நகை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிந்துராமை கைது செய்த வானூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடமாநில வாலிபர் தங்க நகையை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடி செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல்
    • ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் இன்று கலந்துரையாடினார். இதில் கலெக்டர் பேசியதாவது:-

    ஊராட்சி பகுதிகளில் பணிகள் நடைபெறும் பொழுது பொதுமக்கள் பார்வையிட்டு, தங்கள் ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும், குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தின்போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல், திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து கழிப்பறையினை பயன்படுத்துதல், ஊராட்சி யினை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், உதவி இயக்குநர் பொன்னம்பலம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜீலியட் மேரி விக்டர், முகையூர் ஊராட்சி மன்ற தலைவர் லூயிஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டிலிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
    • அண்ணன், தம்பி இருவரும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அன்டராயநல்லூர் பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வருபவர்கள் அரிதாஸ் (வயது 52), தண்டபாணி (47). அண்ணன், தம்பியான இவர்கள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் அவரவர் குடும்பத்துடன் தனித்தனி அறையில் நேற்று இரவு படுத்து தூங்கினர். இன்று காலை கண் விழித்து எழுந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டில் உள்ள பொருட்கள் உள்ளதா என்று அண்ணன், தம்பி இருவரும் பார்த்தனர்.

    அப்போது வீட்டிலிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதனுள் இருந்த பாதுகாப்பு பெட்டகமும் உடைக்கப்பட்டு 12 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதனையடுத்து அண்ணன், தம்பி இருவரும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், புனிதவதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விவசாயம் செய்து வரும் அண்ணன், தம்பி வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • பெற்றோர்களிடையே தங்களது குழந்தைகளை இடையில் நிறுத்தாமலிருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அங்கன்வாடி பணியாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    விழுப்புரம்:

    மயிலம் ஒன்றியத்தில் மயிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளான கோயில் அடிவாரம், பிள்ளையார் கோயில் தெரு மற்றும் மயிலாடும் பாறை ஆகிய பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம் வட்டாரக் கல்வி அலுவலர் மதன்குமார், தலைமையில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் குழு மூலம் நடைபெற்றது. பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு கள ஆய்வின்போது அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே தங்களது குழந்தைகளை இடையில் நிறுத்தாமல் குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ச்சியாக அனுப்பிவைக்க வலியுறுத்தி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மயிலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் லட்சுமி நரசிம்மன், செந்தில் ராஜா, ஆனந்தி, சுப்பிரமணியன், ஸ்ரீதர், சிவக்குமார், மயிலம் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் , சிறப்புப் பயிற்றுநர் நந்தீஷ்வரி மற்றும் மயிலம் அங்கன்வாடி பணியாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    • பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    விழுப்புரம்:

    சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று காவல்த்துறை, வனத்துறை, தீயணைப்பு ஆகிய துறையினர் ஊர்காவல், தேசிய மாணவர் படையினர், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து பரிசுகளை வழங்கினார்.

    அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 200 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்கள் 20 பேருக்கு ரூ.25,37,246 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தமிழக பாரம்பரிய கலையான மல்லர்கம்ப கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் பழனி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக காந்தி சிலைக்கு கலெக்டர் பழனி, நகராட்சி ஆணையர் ரமேஷ் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சர்க்கரை தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி பின்னர் விழாவிற்கு வந்திருந்த கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .துணைத் தலைவர் சித்திக் அலி,விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ், கவுன்சிலர்கள் மணவாளன், சிவக்குமார்,அமர் ஜி.உஷா மோகன், வசந்தா, மகாலட்சுமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×