என் மலர்
விழுப்புரம்
- 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது.
- மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.
விழுப்புரம்:
சென்னை தலைநகரில் இருந்து மதுரை அ.தி.மு.க. மாநாடு மற்றும் விடு முறையை கழிக்க நேற்று முன்தினம் தென் மாவட்ட த்தை நோக்கி 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது. நேற்று மதுரை மாநாடு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் முதல் சென்னை நோக்கி வாகனங்கள் திரும்ப ஆரம்பித்தன.இதனால் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.தொடர்ந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்ததால் டோல் பிளாசா வில் கூடுதலாக 9 லைன்களை திறந்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். நேற்று இரவு வரை 39 ஆயிரம்வாகனங்கள் சென்னை திரும்பி சென்றது.
- பிரகலாதன் சென்னையில் அரசு மருத்துவராக பணி யாற்றி வருகிறார்.
- சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.
விழுப்புரம்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 45). சென்னையில் அரசு மருத்துவராக பணி யாற்றி வருகிறார். இவர் சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் வரும்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதியது. இதில் கார் தலைக்குப்புற கவிழந்தது. விபத்தில் அரசு மருத்துவர் பிரகலாதன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை தேடி வந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் பகுதியை சேர்ந்த வர் கமலஹாசன். இவர் தனது மோட்டார் சைக்கி ளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காணாமல் போன மோட்டார் சைக்கிளை கமலஹாசன் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இவரது வீட்டின் அருகே பக்கத்து வீட்டில் உள்ள பழனி கமலஹாசன் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறினர். இதுகுறித்து கமலஹாசன் ரோஷனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை தேடி வந்தனர்.
இந்நிலையில் பட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரோசனை போலீசார் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பழனியை மடக்கி விசாரித்தபோது முன்விரோத தகராறு காரணமாக கமலஹாசனின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். உடனே அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் பழனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பலராமன் மனைவி மற்றும் குடும்பத்தார் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு சென்று விட்டனர்.
- அவர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 73). விவசாயி. இவரது உறவினரின் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா முண்டியம்பாக்கத்தில் இன்று நடக்கிறது. இதற்காக பலராமன் மனைவி மற்றும் குடும்பத்தார் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு சென்று விட்டனர்.இந்நிலையில் விவசாயி பலராமன் இன்று அதிகாலை முண்டியம்பாக்கத்திற்கு புறப்பட்டார். பஸ் ஏறி விழுப்புரத்திற்கு வந்தார். அங்கிருந்து பஸ் மூலம் முண்டியம்பாக்கம் வந்த அவர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தார்.
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் பலராமன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பலராமன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்த புகாரின் பேரில் விரைந்து சென்ற விக்கிரவாண்டி போலீசார், விவசாயி பலராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற விவசாயி சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.
- இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே கரடிக்குப்பம் கிராமத்திலிருந்து நேற்று மாலை கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அவலூர்பேட்டை செல்லியம்மன் கோவில் அருகில் சென்ற போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரம் இருந்த சிமெண்ட் மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் முறிந்தது.இதுகுறித்து தகவலறிந்த மின்சார துறையினர் விரைந்து செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பெரும் மின் விபத்து தடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோர்கள், கல்வி யாளர்கள், சமூகச் செயற்பா ட்டாளர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
- இந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.
விழுப்புரம்:
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. சார்பில் விழுப்புரத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதப் போராட்ட த்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதில் விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவி கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பா ட்டாளர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
உண்ணாவிரதத்தில் விழுப்புரம் மாவட்ட பொரு ளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, நகர சபை தலைவர் தமிழ்செல்வி பிரபு, கோலியனூர் யூனியன் சேர்மன் சச்சி தானந்தம், ஒன்றிய செயலாளர்கள் தெய்வ சிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், திருக்கோவிலூர் தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ சேதுநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தினகரன், துணை அமைப் பாளர் பிரேம், மாவட்ட தொண்டர்படை அமைப்பா ளர் கபாலி, மாவட்ட மாண வரனி அமைப்பாளர் வினோத், மாவட்ட மருத்து வரணி செயலாளர் டாக்டர் செந்தில், மாவட்ட வர்த்தக அணி சங்கர், இலக்கிய அணி வல்லப்ப ராசு, நகர இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர் சோமு ஆகியோர் உள்பட ஏராள மானோர் பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று மாலை 5 மணிவரை நடைபெற வுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.
- விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி:
புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30), பிரகாஷ் (31). இருவரும் நண்பர்கள். சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்தனர். இவர்களுடன் பணிபுரிபவருக்கு இன்று காலை செஞ்சியை அடுத்த பாக்கம் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க நேற்று நள்ளிரவு பாஸ்கரும், பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீசார், பலியான 2 வாலிபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரிடையே காட்டுத்தீ போல பரவியது.
- இன்று காலை டீக்கடை உரிமையாளரை அழைத்த போலீசார், அவரிடம் டீ குடித்த பாக்கித்தொகையான ரூ.7 ஆயிரத்தை வழங்கினர்.
கச்சிராயபாளையம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கரியாலூர் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பணி செய்யும் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார், அருகிலுள்ள டீக்கடையில் டீ குடிப்பது வழக்கம்.
ஒரு டீ ரூ.6-க்கு விற்கப்பட்டு வரும் இந்த கடைக்கு கரியாலூர் போலீசார் ரூ.7 ஆயிரம் கடன் வைத்துள்ளனர். இந்த தொகையை போலீசாரிடம் கேட்க முடியாமல், கடை உரிமையாளர் இருந்து வந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது. இது அங்கிருந்து கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக விளக்கம் கோரி கரியாலூர் போலீசாருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த விஷயம் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரிடையே காட்டுத்தீ போல பரவியது. இதனால் கலக்கமடைந்த கரியாலூர் போலீசார் கலந்தாலோசித்தனர்.
இன்று காலை டீக்கடை உரிமையாளரை அழைத்த போலீசார், அவரிடம் டீ குடித்த பாக்கித்தொகையான ரூ.7 ஆயிரத்தை வழங்கினர். மேலும், இனிமேல் தினமும் வழங்கும் டீக்கு அன்றைய தினமே பணத்தை வாங்கிக்கொள்ள கடை உரிமையாளரிடம் போலீசார் கூறினார்கள்.
இதனை படம் பிடித்து டீ பாக்கி கடைக்காரரிடம் வழங்கப்பட்டு விட்டது என்ற தலைப்பில் போலீசாரின் வாட்ஸ் அப் குரூப்பில் பரவவிட்டுள்ளனர்.
அதேசமயம், டீ பாக்கி குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியது யார் என்பது குறித்தும் கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராஜாராம் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
- எலக்ட்ரிக்கல் பொருட்கள் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜாராம். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று மாலை கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். இரவு 8.30 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து திடீரென கரும்புகை வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது எலக்ட்ரிக்கல் பொருட்கள் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது.
இதனையடுத்து திண்டிவனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ராஜாராம் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஹோம் தியேட்டர் போன்ற எலக்ட்ரிகல் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
- கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் அக்கிராம சிறுவர்கள் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு குல்பி ஐஸ் சாப்பிட்ட பெரும்பாலான சிறுவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு வயிற்றுப் போக்கில் அவதிப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிறுவ ர்களை அனுமதித்தனர். இத்தகவல் பரவியதால், குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அதன்படி 3 வயது குழந்தைகள் முதல் 15 வயது சிறியவர்கள் வரை மொத்தம் 87-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் பெரும்பா லான சிறுவர்களை மருத்து வமனையில் அனுமதித்த டாக்டர்கள், அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இத்தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், குல்பி ஐஸ் விற்ற ஏழு செம்பொன் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமரி மன்னன் மருத்துவ மனைக்கு விரைந்து வந்தார். சிகிச்சை பெற்று வந்த சிறுவர்கள் மற்றும் அவரது பெற்றோர்க ளுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் நலம் விசாரித்தனர். தொடர்ந்து சிகிச்சை குறித்து டாக்ட ர்ளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார். துறைத் தலைவர் புகழேந்தி. ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெய ரவிதுரை, ஜெயபாலன் விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன் மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும், குல்பி ஐஸ் வியாபாரி எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்தார் என விசாரித்து, அங்கு சென்று சோதனை நடத்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
- ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
- விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விவசாயிகள், திண்டிவனத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மரவள்ளி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுர் அணைக்கட்டை சுற்றி மண் அணைப்பு செய்திருக்கும் இடத்தில் மண் சரிவு வராமல் பாதுகாக்க பனைக்கன்றுகள் நட வேண்டும். விவசாயிகளின் பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் உற்பத்தியா ளர்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள், அரசாங்க புறம்போக்கு இடங்கள், சுடுகாடு, வழிப்பாதை போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். மாதந்தோறும் விவசாயிகள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் உரிய அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது விவசாயிகள் வைத்த கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளின் கோரி க்கைகள் நிறைவேற்ற ப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி விவசாயிகளிடம் உறுதியளித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் சண்முகம், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் லட்சுமி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கம் யசோதா தேவி, மேலாண்மை இயக்குநர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இளஞ்செல்வி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை ஷோபனா, வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங்சாய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மே மாதம் திருவிழாவின்போது வழிபடுவதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேல்பாதியை சேர்ந்த ஒருவர் கோலியனூர் கூட்டுரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர்.
திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ஒருதரப்பை சேர்ந்த பிரகாஷ், பிரபு உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இதனால் அந்த தரப்பை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த மறியல் நடந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்களும், கும்பகோணத்தில் இருந்து சென்னை வரும் பஸ்களும் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங்சாய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
ஏற்கனவே மேல்பாதியில் கோவிலில் வழிபடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் இருந்து வரும் நிலையில் தற்போது இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேல்பாதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.






