என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை ஈச்சநேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). விவசாயி. இவரது மனைவி கலா (37). இவர்களுக்கு ஆனந்தன், நந்தினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கலாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம்(40) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சண்முகம் அவரை கண்டித்தார்.
கடந்த ஆண்டு கலா கள்ளக்காதலன் ஏகாம்பரத்துடன் வீட்டை விட்டு ஓடினார். அவர்கள் இருவரும் கேரளாவில் குடும்பம் நடத்தி வந்தனர்.
மனைவி ஓடிச்சென்ற துயரத்தில் இருந்த சண்முகம் கடந்த 6 மாதங்கங்களுக்கு முன்பு சிங்காரப்பேட்டையை சேர்ந்த சுஜாதா (30) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் கேரளாவில் கள்ளக்காதலனுடன் வசித்த கலா திரும்பி வந்தார்.
தான் கணவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் என அடம்பிடித்தார். உறவினர்கள், ஊர் பெரியவர்கள் பேசி சேர்ந்து வாழுமாறு கூறிச் சென்றனர்.
இதனையடுத்து கலாவும் சண்முகம் வீட்டிலேயே தங்கினார். ஆனால் சண்முகம் கலாவுடன் பேசவில்லை. 2-வது மனைவி சுஜாதாவுடன் குடும்பம் நடத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த கலா கணவரையும், சுஜாதாவையும் தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதுபற்றி போன் மூலம் ஏகாரம்பத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இரவு தூங்கும் போது வீட்டுக்குள் புகுந்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர். நேற்று நள்ளிரவு சண்முகம், சுஜாதா தூங்கி கொண்டிருந்தனர்.
ஏகாம்பரம் ஈரோட்டை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேருடன் வந்தார். அவர்களுக்காக காத்திருந்த கலா வீட்டு கதவை திறந்து விட்டார். ஏகாம்பரம் மற்றும் கூலிப்படையினர் வீட்டுக்குள் புகுந்து சண்முகத்தையும், சுஜாதாவையும் இரும்பு கம்பியால் தாக்கி கத்தியால் வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர்கள் 2 பேரும் படுக்கையிலேயே இறந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
அதற்குள் ஏகாம்பரம் மற்றும் கூலிப்படையினர் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சென்று உடல்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சண்முகத்தின் முதல் மனைவி கலா, கூலிப்படையை சேர்ந்த நாகராஜ் (36) ஆகியோரை கைது செய்தனர்.
கள்ளக்காதலன் ஏகாம்பரம் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 47), விவசாயி. இவரது மனைவி ஆண்டாள் (40). இவர்களது மகன் தமிழரசன் (19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழரசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராந்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். கடந்த 5-ந் தேதி தீபாவளிக்காக ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க தமிழரசனும், ஆண்டாளும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது போளூரில் இருந்து மன்சூராபாத் செல்லும் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தமிழரசன் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உரியிழந்தார். மேலும் தூக்கி வீசப்பட்டதில் ஆண்டாளும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசன் மற்றும் ஆண்டாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் பெரணம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 60). இவர் கடந்த 4-ந் தேதி இரவு வழக்கம் போல தேவலாபுரம் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மணியம்மாள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மறுநாள் இதனை பார்த்த பொதுமக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டுறவு சங்க கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குணசேகரன் (வயது 32) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. குணசேகரனுக்கு உறவினர்கள் யாரும் கிடையாது. அவரும், அதே ரேஷன் கடையில் தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று அங்கு தூங்கும்போது மணியம்மாளுக்கும், குணசேகரனுக்கும் தகராறு ஏற்பட்டு, அப்போது ஆத்திரத்தில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து குணசேகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். இதை தடுக்கும் நோக்கில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், பஸ் ஆட்டோக்களில் நோய் தடுப்பு மருந்து தெளித்தும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அக்டோபர் மாதத்தில் காய்ச்சல் நோய் அதிகமாக இருந்தது. போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை படிப்படியாக குறைந்துள்ளது. பெரும்பாலும் இந்த காலங்களில் ஏற்படும் காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். போலி டாக்டர்களிடம் செல்லக் கூடாது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக பன்றிக்காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் 416 பெரிய வாகனங்கள், 710 சிறிய வாகனங்களில் நடமாடும் முகாம், 1,700 காய்ச்சல் முகாம்கள் அமைத்து நோயை கட்டுப்படுத்தி வருகிறோம். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டு காலதாமதமாக வரக்கூடாது. மக்கள் கூடும் இடங்களில் ‘லைசால்’ மருந்து தெளிப்பதால் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சலால் கடந்த ஆண்டு 3,800 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 17 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 1,020 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 17 பேர் இறந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் 12 பேர் இறந்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் 259 பேர் பலியாகி உள்ளனர். இந்தியா முழுவதும் 8,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது நோக்கம் இறப்பை தடுப்பது தான். பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் டாமி புளு மாத்திரைகள் 19.75 லட்சம் இருப்பில் உள்ளது.
ஆஸ்துமா, உடல் பருமன் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கடந்த வாரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள் மற்றும் புற நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கடந்த 5 நாட்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கூடுதல் மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் 35 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Swineflu #Radhakrishnan
வேலூர் கீழ்மொணவூர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா (வயது 28), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு அனிதா, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் மாயமானார். இந்த நிலையில் நேற்று சதுப்பேரி ஏரியில் அனிதா பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவரது முகத்தில் சிறு காயங்கள் இருந்தது. அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அனிதாவின் கணவர் கதிரேசன் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் அஜித்குமார் தனது மனைவியை கடத்தி கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நர்சு அனிதாவுக்கும் பைனான்சியர் அஜித்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசிவந்தனர். தீபாவளி அன்று அனிதா, அஜித்குமாருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்டுபிடித்த கதிரேசன் அனிதாவிடம் இருந்து செல்போனை பறித்தார். மேலும் அவரை கண்டித்துள்ளார்.
இதனால் தம்பதிகளிடையே கடும் தகராறு ஏற்பட்டது. அன்று மாலை கதிரேசன் ஆட்டோ ஓட்ட சென்று விட்டார். கதிரேசன் வீட்டில் இல்லாததை அறிந்த அஜித்குமார் அனிதாவின் வீட்டுக்கு வந்தார். கணவருக்கு விவகாரம் தெரிந்து விட்டதால் கள்ளக்காதலை கைவிடுமாறு அனிதா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அஜித்குமார் அனிதாவை அடித்துள்ளார். பின்னர் அவரை ஏரிக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்காதலன் அஜித்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலை குறித்த தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத நேரத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்தததாக 93 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #tamilnews
வேலூர்:
வேலூர் மாவட்ட வனஅலுவலர் பார்கவதேஜா உத்தரவின்பேரில் அமிர்தி வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனக்காப்பாளர்கள் சேட்டு, சின்னத்துரை, ராமமூர்த்தி ஆகியோர் நேற்று ஒடுகத்தூர் அருகே முள்ளுவாடி கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து புகை வந்தது.
இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் 3 பேர் இருந்தனர். அவர்கள் வனத்துறையினர் வருவதை பார்த்ததும் ஓட்டம்பிடித்தனர். வனத்துறையினர் விரட்டிச்சென்றதில் ஒருவரை பிடித்தனர்.
புகைவந்த இடத்தை பார்த்தபோது சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு அரியவகை காட்டுப்பூனையை வேட்டையாடி வைத்திருந்தனர். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் முள்ளுவாடி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் என்பவருடைய மகன் துரைசாமி (வயது 30) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, சாராயம் காய்ச்சுவது, மரங்களை வெட்டுவது ஆகியவற்றில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து துரைசாமியை வனத்துறையினர் கைது செய்து வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர். வேட்டையாடப்பட்ட காட்டுப்பூனை, மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்கள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பி ஓடிய ராஜேந்திரன் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
குடியாத்தம்:
கே.வி.குப்பத்தை அடுத்த கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி பத்மாவதி (வயது 49). நேற்று காலையில் பத்மாவதி வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அவரிடம் தங்க நகைகளை வைத்துதான் தோஷம் கழிக்க வேண்டும் என கூறி பத்மாவதியிடம் இருந்து ½ பவுன் நகையை வாங்கி உள்ளார்.
பின்னர் நகையை புளியில் வைத்து தோஷம் கழிப்பது போல் செய்துவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து பத்மாவதி புளியில் பார்த்தபோது நகை இல்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மாவதி உடனடியாக உறவினர்கள் துணையுடன் அந்த வாலிபரை தேடினர்.
அப்போது வடுகந்தாங்கல் பகுதியில் நின்றிருந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்து கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் வாலாஜா பகுதியை சேர்ந்த செல்வம் (21) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைசெல்வன் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து ½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பாலு வெங்கட்ராமன் ஆகியோர் பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3 மணிக்கு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வேகமாக வந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். ஆனால் கார் நிற்காமல் பத்தலப்பல்லி மலை பாதையில் வேகமாக சென்றது. போலீசாரும் அந்த வாகனத்தை துரத்தி சென்றனர். 3-வது கொண்டை ஊசி வளைவில் காரை மடக்கிபிடித்து சோதனை செய்தனர்.
அப்போது 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது. இதையடுத்து ரேசன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.
பள்ளிகொண்டாவில் இருந்து ஆந்திரா மாநிலம் வி.கோட்டாவிற்கு ரேசன் அரிசி கடத்தி சென்றுள்ளனர். காரை ஓட்டி வந்த வாலிபர் தனியார் கல்லூரி மாணவர் என்பதும் அவருடன் இருந்தவர் அவருடைய தாய் ஜோதி எனவும் தெரியவந்தது.
2 பேர் மீதும் பேரணாம்பட்டு போலீசார் அரிசி கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வேலூரில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
சோளிங்கர்:
சோளிங்கர் அருகே உள்ள வெளிதாங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 33), தொழிலாளி. சோளிங்கர் கிழக்கு பஜார் வீதியில் உள்ள நாரைகுளம் பகுதியை சேர்ந்த தினகரன் (28). இவர்கள் இருவரும் பாண்டியநெல்லூர் சுடுகாடு அருகே உள்ள மதுபானகடையில் தனித்தனியே மதுகுடித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது சாலையோரத்தில் இருந்த கிணற்றில் இருவரும் விழுந்தனர்.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து அவர்களை மேலே தூக்கி வந்தனர். அப்போது சாந்தகுமார் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினகரனை கைது செய்தனர்.
ஆம்பூர் அடுத்த உமராபாத் பழைய காலனியை சேர்ந்த ராமர் மனைவி மணியம்மாள் (வயது 60). ஆதரவற்ற நிலையில் இருந்த இவர் அங்குள்ள கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் தங்கி வந்தார்.
நேற்று இரவு கூட்டுறவு வளாகத்தில் ரேசன் கடை முன்பு படுத்து தூங்கினார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தனர்.
இன்று காலை ரத்த வெள்ளத்தில் மணியம்மாள் இறந்து கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர். இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர்கள் பாலசுப் பிரமணி, கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் சன்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.அது மூதாட்டி கொலையான இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. போலீசார் மணியம்மாள் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன இதன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள தாதவல்லியை சேர்ந்த ராமதாஸ் மகன் பிரதீப் (24). இவரது நண்பர் விஜய் (21). இருவரும் இன்று பைக்கில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றனர். பிரதீப் பின்னால் அமர்ந்திருந்தார். நாட்டறம் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்தில் இறந்தார்.
நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






